அலுவல் ரீதியாக, முக்கியமான அந்த அரசு அலுவலகத்துக்குச் செல்லவேண்டி இருந்தது. அடையாள அட்டையைக் காட்டினாலும் அவ்வளவு சுலபத்தில் அனுமதி கிடைக்காத அலுவலகம். சந்திக்கவிருக்கும் அதிகாரியிடம் அடையாள அட்டை கொண்டுசெல்லப்பட்டு, அவர் ஒப்பிய பின்னரே அனுமதிக்கப்படும் அளவுக்குக் கெடுபிடி நிறைந்த அலுவலகம். கெடுபிடிகளுக்குக் காரணம், பிரமுகர்களின் சிபாரிசுத் தொல்லையாகவும் இருக்கலாம் அல்லது சில்லுண்டிகளால் உருவாகும் ஏஜென்சி பயமாகவும் இருக்கலாம்.
அதிகாரியை எதிர்பார்த்தால் சினிமா நடிகர் போல் வந்து நிற்கிறீரே
இந்தக் குல்லா ரொம்பப் பழசு என்று மனதுக்குள் எண்ணியபடி, அவரைக் குஷிப்படுத்த வெளிப்படையாய்த் தெரியும்படி பூரித்தேன்.
குறிப்பிட்ட சில எண்களைக் காட்டி விபரம் கேட்டேன்.
ஒவ்வொன்றாய் சொல்லச் சொல்ல, கணினியில் தேடி, தேவைப்பட்ட தகவல்களைக் கொடுத்தார்.
வெளியில் வந்து பைக் எடுக்கையில், பார்க்கிங் பையன் பணம் கேட்டு மறித்தான். துறைப் பெயரின் கடைசிப் பகுதியை மட்டும் கூறிவிட்டுப் பறந்தேன் அவன் எதுவாகவும் எடுத்துக்கொள்ளட்டும் என்று.
அடுத்த முறை, குறைந்த இடைவெளியில் சென்றபோது, முதற் கதவு முகம் பார்த்தே திறந்து கொண்டது. வேறொரு காவலர் உள்ளே வருவதை ஆட்சேபிக்க, இல்லை அடிக்கடி வருபவர்தான் என்று முந்தையமுறை இருந்தவர் அனுமதித்தார். உள்ளே இருந்த மைய்யக் குளிரூட்டம் காரணமாய்ப் நெருக்கியடித்த மின்தூக்கியின் புழுக்கம் குறைந்ததில் சற்றே ஆசுவாசமாய் நிற்க முடிந்தது.
ஒப்புதல் கிடைத்ததும் உள்ளே செல்ல, சமீபத்திய சில பல சாகசங்கள் பேச்சில் தெறிக்க, உங்களுக்கு உதவுவது நாட்டுக்கு ஆற்றும் உதவி கடமை என்றார்.
ஆனால் உங்கள் அலுவலகத்தில் உள்ளே வருவதுதான் கஷ்டம் என்று புன்னகைத்தேன்.
வாயிலில் நிற்பவனுக்கு என்ன தெரியும். யாரையும் விடாதே என்றால் அவன் எல்லோரையும் நிறுத்திவிடுகிறான் என்றார்.
அவர் தந்த தகவல்களைக் கண்ணாடி வைத்த மேசையின் மீது வைத்து எழுதிக் கொள்கையில் என் கையில் அணிந்திருந்த கடா டங் டங்கெனக் கண்ணாடியில் பட்டு ஒலியெழுப்பிக் கொண்டு இருந்தது.
அண்ணே அதைக் கொஞ்சம் காட்டுங்க
கழற்றிக் கொடுத்தேன்.
எவ்வளவு கனம்.
எவ்வளவு கனம்.
வாங்கி மாட்டிக் கொண்டு, சச்சின் பந்துவீச ஆயத்தமாவது போல கையைத் தூக்கி கடாவை அடிப்புறத்துக்கு இறுக்கி முஷ்டியை முறுக்கிப் பார்த்துக் கொண்டார்.
ஆமாம் இதையெல்லாம் போடவில்லை என்றால், என்னதான் தாடி மீசை குறுந்தாடி என்று எவ்வளவுதான் கெட்டப்பை அடிக்கடி மாற்றிக் கொண்டாலும், நிறம் முகத்தோற்றம் காரணமாய் சாம்பார்டா என்று நினைத்துவிடக் கூடாதல்லவா கிரிமினல்கள்.
குலுங்கிக் குலுங்கிச் சிரிக்கத் தொடங்கிவிட்டார்.
அண்ணே பெரியாள்ணே நீங்க. ஒரே வார்த்தைல எவ்ளோ மேட்டர் சொல்லிட்டீங்க.
என் காரியார்த்த மெய்மை நன்றாக வேலை செய்கிறது என நினைத்துக்கொன்டேன்.
டெல்லிக்கு மாற்றலாகிவிட்டது கடா இருந்தால் நன்றாக இருக்குமே போய் வாங்கிக் கொள்ளலாம் என்று எண்ணிக்கொண்டே இருந்தேன் என்றார்.
அதுதான் கிடைத்துவிட்டதே என்றேன்.
ஆகா ரொம்ப தேங்க்ஸ்.
பொதுவாக எனக்கு இப்படியெல்லாம் கிடைத்துதான் இருக்கிறது. கிடைப்பதில் இருக்கும் மகிழ்வைவிட, கொடுப்பதில் இருக்கும் நிறைவு மேலானது என்று இப்போது உணர முடிகிறது.
இப்போது சொன்னீர்களே அது நூற்றுக்கு நூறு உண்மை என்றார்.
என்ன சார் ஒரு கடாவில் உங்களிடம் பதிந்துவிட்டேனே இதைவிடவா.
கண்டிப்பாய் எப்போதும் கையிலேயே இருக்குமே. டெல்லிக்கு வந்தால் என்னைத் தொடர்புகொள்ளாது இருக்கக்கூடாது. என் மொபைல் எண்ணை எடுத்துக்கங்கண்ணே.
ஆஹா கண்டிப்பாய். வேலை தவிர வெளியூரெல்லாம் வருவது அபூர்வம்தான். அதைவிட இங்கே உங்களைப் போன்ற இவ்வளவு நட்பான உபயோகமான ஒருவரின் அறிமுகம் இடம் விட்டுச் செல்லும்போதுதான் கிடைத்ததே என்றுதான் இருக்கிறது.
அதுக்கென்னண்ணே அடுத்து வரவரை அறிமுகப் படுத்திடறேன். அதையும் மீறி எதாவது இடைஞ்சல்னா ஒரு போன் பண்ணுங்க. ப்ரமோசன்ல போற இடம் இன்னும் பவர்ஃபுல் இல்லையா. ஆமா உங்களுக்கு என்ன வயசுண்ணே.
அதுக்கென்னண்ணே அடுத்து வரவரை அறிமுகப் படுத்திடறேன். அதையும் மீறி எதாவது இடைஞ்சல்னா ஒரு போன் பண்ணுங்க. ப்ரமோசன்ல போற இடம் இன்னும் பவர்ஃபுல் இல்லையா. ஆமா உங்களுக்கு என்ன வயசுண்ணே.
56 நடக்கிறது.
நான் 49தான். ஆனா உங்க உற்சாகம் இல்லே.
இவ்வளவு கலகலப்பாக இருக்கிறீர்கள்.
உங்களுக்குச் சர்க்கரை இலையே.
இல்லை. இதுவரை இல்லை.
அது முகத்திலேயே தெரிந்துவிடும். அதனால்தான் உங்களால் இவ்வளவு அலையவும் முடிகிறது.
கடா அனிந்த அவரது கை மட்டுமுள்ள படத்தை மொபைலில் காட்டினேன்.
ஆகா அண்ணே இதை எப்ப எடுத்தீங்க.
இப்பதான்.
எப்படி. கொஞ்சம்கூட டவுட் வரலையே.
ஒரு முறை செளகார்பேட்டில் கிட்டத்தட்ட மாட்டிக்கொள்ளப் பார்த்ததைக் கூறி அதிலிருந்து நெருக்கத்தில் எடுக்கையில் அதிக கவனத்துடன் இருப்பதைக் கூறினேன்.
உங்கள் அனுபவங்களை நினைவுக் குறிப்புகளாக எழுதவேண்டும். எல்லோருக்கும் கிடைக்கிற விசயமா இது என்றார்.
எதுவும் சொல்லிக்கொள்ளாமல் பொதுவாக சிரித்து வைத்து விடைபெற்றேன், அவருக்குத் தெரிவிக்காமல் எடுத்திருந்த அவரது முழுப் படத்துடன்.
அலுவலகம் வந்தபின் அவரது படத்தை அவருக்கு அனுப்ப முயன்றேன். அவர் வாட்ஸப்பே வைத்திருக்கவில்லை. இல்லை. அவர் எனக்குக் கொடுத்த எண் கொண்ட மொபைலில் வாட்ஸப் வைத்திருக்கவில்லை என்று எடுத்துக்கொள்வதே இன்னும் துல்லியத்துக்கு நெருக்கமாய் இருக்கக்கூடும்.