07 August 2015

சுடர்

பூக்கடை அருகில் வண்டியை விட இடம் கிடைக்க ஜாதகத்தில் பூர்வ புண்ணிய ஸ்தானம் வலுவாய் அமைந்திருக்க வேண்டும். அடுத்த ஜென்மத்தில்கூட அதற்கான வாய்ப்பு அபூர்வம் என்பதால் எப்போதுமே எனக்கு இடம் கிடைக்காது. போதாக்குறைக்குக் கண் எதிரிலேயே,  பைக்குகள் வேன் சவாரிக்கு முரட்டுத் தனமாய் ஏற்றப்பட்டுக்கொண்டிருந்தன. தண்டம் செலுத்தி மீட்கபட்டாலும் பைக்குளின் கழுத்துச் சுளுக்கெடுக்க மெக்கானிக்கைத் தேட வேண்டி இருக்கும். கருக்கத் தொடங்கியிருந்த அந்த மாலையில் கண்ணுக்கெட்டிய நூறடி தூரத்தில் பஞ்சர் கடைகூடத் தட்டுப்படவில்லை. திடீரெனத் தோன்றிற்று, அரசு வேலையாய் வந்திருக்கையில் அரசுக் கட்டிடத்தில் வண்டியை விடுவதில் அப்படி என்ன தவறு இருக்கமுடியும் என்று. பொய் சொல்லப்போவதில்லை - எப்படியும் அதை, போகிற இடத்தில் மூட்டை மூட்டையாய் அவிழ்த்து விடுவதுதான் வேலையே, எனவே இங்கே உண்மையைச் சொல்லி இடம் கேட்டால் என்ன. 

கொம்புளதற்கு ஐந்து முழம் குதிரைக்குப் பத்து முழம் வெம்பு கரிக்கு ஆயிரம்தான் வேண்டுமே என்றெண்ணும் பொதுமக்களைப் போலவே போலீஸ் என்றால் எனக்கும் அலர்ஜி. ஆனாலும் வேறு வழியில்லை என்பதால் பூக்கடை போலீஸ் நிலைய வளாகத்தில் பைக்கை நிறுத்திவிட்டு, சொல்லாமல் செய்வது முறையல்ல என்பது மட்டுமின்றி பைக் தானம் செய்ய வரவில்லை என்பதால் திரும்ப எடுப்பது சிக்கலாகிவிடக்கூடாதே என்கிற முன் ஜாக்கிரதை சார்ந்த அறநெறியுடன் துப்பாக்கி பிடித்தபடி காவல் நிலைய காவலுக்கு நின்றிருந்த பெண் காவலரை அணுகினேன். 

நிலையத்தின் முதன்மை அதிகாரி யார் 

ஏன் சார் என்ன விசயமா பாக்கணும் என்றார் அருகிலிருந்த காவலர் 

கவர்மெண்ட் ஒர்க்கா வந்தேன். வண்டி நிறுத்த இடமில்லை. இங்க நிறுத்திக்கலாமானு அனுமதி கேட்கணும்.

உங்க வண்டி எது என்றபடி கூட வந்தார் 25ஐ நெருங்கிக் கொண்டிருந்த சின்னப் பையர். 

இதான்

உங்க ஐடி கார்டைக் காட்டுங்க 

ஐடி கார்டெல்லாம் கேக்கறதா இருந்தா வேண்டாம் வெளியிலையே நிறுத்திக்கறேன். சொந்த வேலையா வந்திருந்தா வண்டி நிறுத்த இங்க வந்திருக்கவே மாட்டேன். 

சரியான ஆளைதான் அலோ பண்ணியிருக்கோமானு நாங்க தெரிஞ்சிக்க வேணாமா. நாளைக்கு எதாவது ஒன்னுன்னா நாங்க இல்ல பதில் சொல்லணும். 

பரவாயில்லையே உசாராகவும் இருக்கிறார் உதவவும் முன் வருகிறார். காலம் குரூரமானது. நிர்தாட்சண்யமாய் இரண்டில் ஒன்றை அடித்துவிடும்.

அப்ப சரி. ஜெராக்ஸ்லாம் எடுத்துடாதீங்க. 

சேச்சே ஜெராக்ஸ்லாம் எடுக்க மாட்டேன். யாரு என்னன்னு தெரிஞ்சிக்க வேணாமா சார் என்றபடி அடையாள அட்டையைப் பார்த்தார். உதடசைவில் படிப்பது தெரிந்தது. அந்த மங்கலிலும் அவர் முகம் பளிச்சிட்டதில் உள்ளூர பூரித்தேன். அந்த மூன்றெழுத்துக்கான விரிவு என்னவென்று கேட்காத, மாநில அரசின் முதல் நபர்.

பொதுவா எங்கேந்துனு சொல்ல முடியாதுங்கறதால சொல்றதில்லே. கார்டைக் காட்டறது ரொம்ப ரேரு. வாய்ல வந்தத சொல்லிட்டு அதுக்கேத்தாப்புல கதையை நீட்டிக்கிறது.

மோப்பம் பிடிக்க வந்த இடத்துல மூச்சுவிட முடியுமா. எப்ப வேணும்னா வந்து எடுத்துக்குங்க சார்.

ரொம்ப நன்றிங்க. 

சார் சேல்ஸ் டாக்ஸ் கேசுலாம் எடுப்பீங்களா 

அது ஸ்டேட் சப்ஜெக்ட் ஆச்சே. அவங்களே இம்போர்ட்டோ எக்ஸ்போர்ட்டோ பண்றவங்களா இருந்தா சொல்லுங்க. 

ஒன்னு ரெண்டு இல்லைங்க பத்து கோடிக்குமேல ஏமாத்திகிட்டு இருக்கான். பக்கா எவிடென்ஸ் இருக்கு. 

கமர்சியல் டாக்ஸ்ல குடுங்களேன் 

உங்களைப்போல அதிகாரியா இருந்தா நேரடியா இறங்கி நடவடிக்கை எடுக்கலாம் நான் என்ன சாதாரண கான்ஸ்டபிள்தானே சார் என்ன செஞ்சிடமுடியும் என்னால. யாருகிட்டையும் சொல்லக்கூட முடியாது. துட்டாக்கிட்டுப் போயிடுவாங்க. 

இதனாலதான் இங்கல்லாம் நாங்க வரதுமில்லே யாரு என்னாங்கிறதை சொல்லிக்கிறதுமில்லே. இடத்துக்குப் போய் சேரறதுக்கு முன்னாலயே, வந்துகிட்டு இருக்கோம்கிற நியூஸ் போய் சேந்துடும். ஒன்னு அவன் ஓடிடுவான் இல்லை கும்பல் சேத்து நம்பளப் பின்னிடுவான். உண்மை ஆபத்தானது. ஆயுதங்களைவிட ரகசியம்தான் நமக்கு அடிப்படைப் பாதுகாப்பு.

கரெக்டுதான் சார். எல்லாம் இருந்தும் பவர் இல்லாததால எதுவும் செய்ய முடியாம பாத்துகிட்டு சும்மா இருக்கவேண்டி இருக்கு. தனக்குத்தானேதான் சொல்லிக்கொண்டார் என்றாலும் ஆங்கிலத்தில் சொல்லிக்கொண்டது எனக்காக என்று தோன்றியது. இன்னொரு, சுடர் மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய் எனப் புலம்பித் திரிய நேர்ந்து விடப்பட்ட இளைஞன். இப்படியே விடப்பட்டால் மக்கிக்கூடப்போகாத பிளாஸ்டிக் கூளமாய் ஆகிவிடத்தான் வாய்ப்பு அதிகம். சரியான திறப்பு அமைந்தால் சவரக் கத்தி விளிம்பாய் ஆகவும் கூடும்.

சொன்னாப்பல இம்ப்போர்ட் எக்ஸ்போர்ட் சம்மந்தமா எதாச்சும் இன்ஃபர்மேஷன் கிடைச்சா ஒரு மிஸ்டுகால் குடுங்க இல்லை SMS குடுங்க போதும். கேஸா தகைஞ்சா உங்குளுக்கு ரிவார்டு கூடக் கிடைக்கும். உங்க நம்பர் சொல்லுங்க என்று கைபேசியை எடுத்தேன்.

98401... பெண் காவலர் கை நீட்டி அழைத்தார். அதே சமயம் அதிகாரி வெளியில் வந்து ஜீப்பருகில் செல்லவே சிட்டாகப் பறந்துவிட்டது சுடர். 

தேடி வந்த பொருள், எங்கெங்கே விற்கப்படக்கூடும் எனத் தேடியபடி பளபளத்த வடவர் நகரத்து சந்து பொந்துகளை நோக்கி நடக்கத் தொடங்கினேன்.