22 August 2015

ஒரு நாள்

நேற்றிரவு 2 மணியளவில் தூக்கம் போய்விட்டது. காலை 6.20க்குதான் தூங்கப்போனேன். 9.04க்கு நன்றாக இருக்கிறது என்று அலுவலகத் தோழரிடமிருந்து வந்த வாழ்த்து SMSல் விழிப்பு வந்தது. கண்ணாடி அணிந்து கைபேசியைப் பார்த்தால் காலை 7.39க்கே முதல் வாழ்த்தை அனுப்பியிருந்தார். 

11:30-12 வரை அடையாறு தி நகர் என அலைந்ததுதான் மிச்சம். தி இந்து எல்லா இடங்களிலும் விற்றுத் தீர்ந்து போயிருந்தது. பசுல்லா ரோடு கடைக்காரர் கூறினார். டெய்லி 50 பேப்பர் வருது சார். காலையிலையே வித்துத் தீந்துடும். அப்படியென்றால் தி இந்து சிறுபத்திரிகை இல்லையா. இல்லை என்னிடம் கட்டுரை கேட்டதால் அதை விற்காத பத்திரிகை என்று நான்தான் தவறாக எண்ணிவிட்டேனா அல்லது விழிப்படைந்த இணைய தமிழன் இந்து எதிரி என்பதால் என் டைம் லைனில் அதிகம் தட்டுப்படவில்லையா என்று பல கேள்விகளுடன் அலுவலகம் வந்தால், ஏகப்பட்ட வாழ்த்துகள். 

இந்துவில் போட்டிருக்கிறார்கள் எனவே இவன் நிஜமாகவே எழுத்தாளனாகத்தான் இருக்கவேண்டும் என்கிற பாராட்டாக இருக்கக்கூடும். அதுவும் புசிக்கிற விசயத்தைப் பற்றிப் புரிகிற விதாமாய் எழுதியிருப்பதால் பாராட்டுகிறார்கள் எனவும் புரிந்துகொள்ள முடிந்தது. 

மதியத்துக்குமேல் ஆரம்பக்கட்ட அலைச்சல். ஒவ்வொரு இடமாய் தொட்டுத்தொட்டு அலைச்சல். இரு சக்கர வாகனத்தை வளாகத்தில் நிறுத்திவிட்டு, ராமி மால் உள்ளே செல்ல முயன்றால், பார்க்கிங் டோக்கன் இருபது ரூபாய் என்றான் பிகாரியா பெங்காலியா எனப் பிரித்தறிய முடியாத ஜாடையில் இருந்த பையன். எவ்வளவு நேரத்துக்கு என்றேன். டைம் இல்லை. நாள் பூரா என்றான். கொசுறாக, காருக்கு ஃப்ரீ என்றான் நான் கேட்காமலே. அறிவாலயத்தின் இலவச பார்க்கிங்கைப் பயன்படுத்திக் கொள்வதே அறிவு. அதை, அனாவசியமாய்க் குற்ற உணர்வு தடுக்காதிருக்க ஒரே வழி அற உணர்வை மூட்டை கட்டி பழைய துணிப் பையில் சுருட்டி வைத்துவிடுவது என்று தீர்மானம் நிறைவேற்றிக்கொண்டேம். பிகாரபெங்காலியிடம், குறிப்பிட்ட பொருள் விற்கும் கடைகள் அங்கே உள்ளனவா என்று கேட்டேன். துக்கான் கம் ஹெ என்றான். சுப்பிராமி ரெட்டி சந்ததியிடம் சம்பளம் வாங்கிக்கொண்டு சமூக சேவை செய்துகொண்டு இருந்தான். கம் துக்கான்கள் உண்டாக்கிய கம் காரணமாய், அடையார் கேட் ஓட்டலுக்கு வண்டியை விட்டேன்.

எங்கோ அடிவார குகையில் வண்டியை நிறுத்திவிட்டு, கொஞ்சம் அசந்தாலும் எவனாவது லவட்டிக்கொண்டு போய்விடுவானோ என்கிற கவலையில் புதுப் பெண்டாட்டியைப் பிரிய மனமற்ற மாப்பிள்ளைபோல், ஹெல்மெட்டை வண்டியிலேயே மாட்டித் தொங்கவிட்டுவிட்டுப் பார்த்தால் அநேகமாய் எல்லா பைக்குகளிலும் பழைய பெண்டாட்டிகள் ஏகப்பட்ட சிராய்ப்புகளுடன் பீதியூட்டினர். இது போக அரணாக் கயிற்றைக் கழற்றச் சொல்லாத குறையாய் வாயிலிலேயே செக்யூரிட்டி செக். எல்லாவற்றையும் கடந்து உள்ளே சென்றால், மேட்டுக்குடியினருக்கான பிரத்தியேகப் பொருட்களை விற்கும் கடைகள், அடையார் கேட் ஓட்டலில் மூடப்பட்டு இரண்டு வருடங்கள் ஆகின்றன என்று தகவல்.

அங்கிருந்து கிளம்பி, கபாலித் தேரடியில் பஜ்ஜி தின்று, ராயர் கபேயில் போண்டா காபி முடித்து சிடி செண்டர் சென்று வண்டியை நிறுத்தினால், நேற்று 24 கிலோ போதைப் பொருள் விமான சரக்ககத்தில் பிடிபட்டதாய் உலவும் செய்தி உண்மையா என்கிற குறுந்தகவல். ஒருவருக்குச் சொல்லி ஒருவருக்குச் சொல்லாதிருப்பது முறையன்று எனவே தகவலை விநியோகித்து விடவா என்று அனுமதி பெற்று 3Gயில் அனைவருக்கும் அனுப்பி வைப்பதற்குள் முதல் மணி பார்க்கிங்கின் 20 ரூபாய் முடிந்துவிடுமே என்கிற பதட்டம்.  

உள்ளே போய் சகஜமாய்ப் பேசி, ஃபோனைக் கேமிராவாக்கி வேலையை முடித்துக்கொண்டு 7:00-7:30 மணிக்கு அலுவலகம் வந்தால் ஆறேழு பேர் அப்போத்துதான் நாள் தொடங்கியது போல் மும்முரமாய் வேலை செய்துகொண்டு இருந்தனர். 

அலுவலகத்தில் இருந்த தமிழ் இந்துக்கள் இரண்டு. இரண்டில் ஒன்றை, இடைவிடாத வேலை காரணமாய், நிதானமாய்ப் படிக்க அதி உயர் அதிகாரி வீட்டுக்குக் கொண்டுசெல்வதாய்க் கூறி விட்டிருந்தாராம். இன்னொன்றைக் காணவில்லை. இரவு எட்டு மணி வாக்கில், அலுவலகத்திலேயே தங்கிவிடப் போகிற இளம் உயர் அதிகாரி கேட்டார், ஆர்ட்டிக்கிள் வந்திருக்கிறதாமே. தலைப்பைக் கூற, அவர் கணினியில் தேடி சேமித்துக்கொண்டார் அப்புறம் படிக்க. 

ஹெல்மெட்டுடன் இறங்கி வந்து வண்டி எடுக்கையில், பத்திரிகையில் வெளியான கட்டுரைக்குச் சுட்டி / ஸ்கிரீன் ஷாட் கொடுப்பதாய் காலையிலேயே கூறியவர் வாக்கு மறந்துவிட்டார் என்பது நினைவுக்கு வர போனடித்தேன். அடித்ததும் எடுத்த, பெண்ணா ஆணா என்று பிரித்தறிய முடியாத பிஞ்சுக்குரல் பதிலளித்தது. 

அப்பா வெளிய போயிருக்காங்க. 

ஓ அப்டியா. சரி. அப்பா வந்தா சொல்லு, மாமல்லன் கூப்ட்டாருன்னு. 

அங்கிள் இன்னிக்கி பேப்பர்ல வந்திருந்த உங்க ஆர்ட்டிக்கிள் படிச்சேன். ரொம்ப நல்லா இருந்துது அங்க்கிள். 

உன் வயசென்னம்மா. 

ஒம்பது. 

நீ என்ன படிக்கிறே நாலா அஞ்சா. 

ஃபோர்த்து ஸ்டார்ண்டட். 

இன்னமும் அது ஆணா பெண்ணா என்பது பிடிபடாத அளவுக்குக் கீச்சுக் குரல். 

உன் பேரென்னம்மா. 

சிவராம். 

வெரி குட். பை. 

அப்பா வந்ததும் மாமல்லன் அங்க்கிள் போன் பண்ணினாங்கன்னு சொல்றேன். 

55ஆவது வயதில் ஒரு குழந்தை பாராட்டி இருக்கிறது. என்னதான் 1:30க்கு அலாரம் வைத்திருந்தாலும் இதைப் பதிவு செய்யாமல் தூங்கப் போவதா என்றுதான் எழுதத்தொடங்கினேன். இதோ அலாரம் அடித்து விட்டது. இன்னும் அரை மணிக்குள் கிளம்பியாக வேண்டும்.

***