20 August 2015

எடிட்டர் சுஜாதா என் கதையை எடிட் பண்ண முயற்சித்த கதை

1989ல் நிழல் கதையை எழுதி நீளமாகப் போய்விட்ட அதைப் பிரசுரிக்கச் சிறு பத்திரிகை எதுவுமின்றிச் சும்மா கிடந்தது. 90-91ல் சுந்தர ராமசாமி காலச்சுவடு சிறப்பிதழ் கொண்டுவருவதாகக் கூறிக் கதை கேட்டார். அதை அனுப்பி வைத்தேன்.



நன்றாக இருக்கிறது நீளமாக இருக்கிறது மாமல்லன் கொஞ்சம் எடிட் செய்ய முடியுமா என்றார்.

எடிட்டா..

இல்லை நீங்களேதான் எடிட் செய்யப் போகிறீர்கள்.

உங்களுக்குதான் தெரியுமே நானே ஏழெட்டுமுறை திரும்பத் திரும்ப எழுதுபவன் ஆயிற்றே... கொஞ்சம் வளவளவென்று இருக்கிறதோ...

இல்லை நீங்கள் இன்னொருமுறை எடிட் செய்தால் இன்னும் மேம்படக்க்கூடும்... அதனால்தான் சொல்கிறேன்.

மூன்று நான்கு முறை கை வைத்தாயிற்று இனி அதில் எதுவும் செய்ய முடியும் என்று ஏனக்குப் படவில்லை...

சரி.

இது இப்போதிருக்கும் வடிவத்திலேயே இருந்தால் காலச்சுவடில் பிரசுரமாகச் சாத்தியமுண்டா...

தாராளமாய் உண்டு. நல்ல கதை. இன்னும் கொஞ்சம் செம்மையாகுமே என்றுதான் கூறினேன்.

இதை இப்படியே பிரசுரித்துவிடுங்களேன்.

சரி.

இந்த உரையாடல், அண்ணாநகர் பொதுத் தொலைபேசியிலிருந்து சுந்தர ராமசாமியை STDயில் அழைத்துப் பேசியது. அப்போது நான் மேல்மட்ட குமாஸ்தா. காலையில் அம்மா கொடுக்கும் சத்துமாவுக் கஞ்சியோடு சரி. மதியம் இரவு இருவேளைகளும் வெளியில்தான் உணவு. மாத கடைசியில் இருநூறு முன்னூறு கைமாத்து வாங்கியாகவேண்டிய அளவுக்கு சினிமா பார்த்துத் திரிந்துகொண்டு இருந்தவன், எந்தக் கவலையுமின்றி வெட்டியாய் துட்டு கொடுத்து நாகர்கோவிலுக்கு STD செய்திருந்தேன். இலக்கியக் குண்டிகொழுப்பு.

இந்தக் குண்டிகொழுப்பு இன்றுவரை போகவில்லை. 500 வார்த்தைகளில் ஒரு கட்டுரை. அதைப் பிரசுரிக்கும்போது வைக்கச் சில படங்கள். கட்டுரையை எழுதி, கைவசம் இருக்கும் படங்களைத் தேடிக் கொடுத்தாலே போதும், கூடப்பிறந்த கு.கொ  விடுமா. எக்மூர் அல்சா மால் ஸ்பர் டேங்க் ரோட் மைலாப்பூர் என்று சொந்தக் காசில் பெட்ரோல் போட்டுக்கொண்டு, எழுதியதற்குப் பொருத்தமான படங்கள் கிடைக்குமா என்று மதியம் மாலை இரவு என வெவ்வேறு நேரங்களில் ஓட வைக்கும். எனக்கு ஒடித்தான் ஆகவேண்டும். இதெல்லாம் எழுத்தாளன் செய்கிற வேலையா. இல்லை இது அவனுக்குத் தேவையா என்றால் இதற்கெல்லாம் ஒரே பதில் கு.கொ என்பதுதான்.

துண்டு பட்ஜெட்டில அல்ல, கிழிந்த கர்ச்சீப்பு முனையளவு பட்ஜெட்டில், கடன் வாங்கி சத்யஜித் ரே பதேர் பாஞ்சாலி எடுத்தார் என்பது இன்றைய இளைஞர்களில் எத்தனை பேருக்குத் தெரியுமோ எனக்குத் தெரியாது. மேற்கு வங்காள குக்கிராமத்தில் 1952ன் பிராமண காக்கா முட்டைக் குழந்தைகள் ரயில் பார்க்கப் போகும் காட்சி. காஷ் மலர்கள் விளைந்திருக்கும் வெளியில் படப்பிடிப்பு. பாதிக் காட்சியை எடுத்தாயிற்று. மறு நாள் போய்ப் பார்த்தால் கால்நடைகள் மேய்ந்து மொட்டையாய் நின்றிருந்தது அந்த இடம். இரண்டு மலர்களைக் குளோசப்பில் காட்டி ரயிலைக் குளோசப்பில் காட்டிவிட்டுப் போகாமல் அடுத்த ஆண்டின் பருவத்துக்காகக் காத்திருந்தாராம்  கடன்கார சத்யஜித் ரே.

//Unable to find a producer, Ray decided that unless he could prove his bona fides by producing a few sequences of the film, he was not likely to find financial backing. He borrowed money against his insurance policy and from a few relatives and friends. The shooting was to be done on Sundays due to his job at D.J. Keymer.

On 27 October 1952, he set out to take the first shot. The scene was the famous 'discovery of train by Apu and his sister Durga in the field of Kaash flowers'. "One day's work with camera and actors taught me more than all the dozen books," Ray would write later.

The following Sunday when they returned to shoot, to their horror they discovered that the Kaash flowers had been feasted upon by a herd of cattle. He had to wait for the next season of flowers to complete the scene.//

அடப் போய்யா என்ன எழுதி என்ன என்று இலக்கியத்துடன் சம்மந்தமே இருந்தது 94கிலிருந்து 2010 வரையிலான 16 வருடங்கள் என்றால் எழுத முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தது 89 முதல் 1994 வரையிலான 5 ஆண்டுக் காலம். ஆனால் 94கில் கிட்டத்தட்ட 6 மாதகாலத்தில் 7 கதைகளை எழுதிவிட்டு அவற்றைப் பத்திரிகைகளில் பிரசுரிக்க நான் பட்டப்பாடுகளைக் கதைகதையாய்ச் சொல்லித் தனிப் புத்தகமே போடலாம்.

அதில் ஒரு கதை இது.

1981ல் சுஜாதா என் அறிமுகக் கதைக்காக சிவசங்கரி இத்யாதிகளுடன் போராடியதை ஏற்கெனவே ’வலி - வெளிவந்த கதை'யில் விவரித்து இருக்கிறேன்

தொடக்கத்தில் குறிப்பிட்ட 91 காலச்சுவடு சிறப்பிதழின் ’நிழல்’ கதையை, என்னதான் க்கன்னாவுடன் என்றாலும் சுபமங்களாவில் பாராட்டி இருந்தாரே என்று குல்லா கதையை எடுத்துக்கொண்டு, 94கில் சுஜாதாவைப் பார்க்கக் குமுதம் அலுவலகம் போனேன்.

இன்னார் வந்திருக்கிறேன் என்றதும், உள்ளே அழைத்தார். அதற்கு முன் 82 கணையாழி குறுநாவல் பரிசளிப்பு விழாவில் பார்த்திருக்கிறேன் என்பதைத் தவிர அவருடன் எனக்குப் பழக்கமெல்லாம் கிடையாது. இது போக நான் சிறு பத்திரிகைகளில் கூடத் தொடர்ந்து இயங்கிக்கொண்டு இருந்தவனும் கிடையாது. ஆனாலும் துண்டுத்தாளில் எழுதிக் கொடுத்தால், குறைந்தபட்சம் எழுத்தாளர்களுக்குத் தெரிகிற பெயராகி விட்டிருந்தது என் அதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும்.

வணக்கம் தெரிவித்துவிட்டு, அதற்கு மேல் சம்பிரதாயத்துக்குக்கூட எதுவும் பேசாமல், நீட்டினேன்.

கதையா

ஆமாம்

அப்படியே படிக்கத் தொடங்கினார். அப்படியே படித்து முடித்தும் விட்டார்.

நல்லா இருக்கு. ஆனா எண்டை முன்னாடிக் கொண்டாந்தா கதை இன்னும் நல்லா இருக்கும்.

நான் ஒன்றும் பேசாமல் அவரைப் பார்த்தேன்.

சரட்டென்று கையருகிலிருந்த ஒரு தாளை எடுத்தார். சரசரவென்று பூச்சி பறக்கும் கையெழுத்தில், என் கதையின் கடைசிப் பத்தியை எழுதத் தொடங்கினார்.

நான் ஒன்றும் பேசாமல் அவரையே பார்த்துக் கொண்டு இருந்தேன். எடிட் பண்ணச் சொன்னதோடு நிறுத்தாமல் அவர் இப்படி சிறு பிள்ளைத்தனமான வேகத்துடன் நடந்துகொள்வதைக் காண ஆச்சரியமாய் இருந்தது.

மூன்றாவது வரி கூட எழுதியிருக்க மாட்டார். நிறுத்திவிட்டார்.

நான் செஞ்சா சரியா வராது நீங்களே பண்ணிடுங்க. அதான் சரியா இருக்கும்.

இதுதான் சரியா இருக்கும்ங்கறதாலதானே இதை இப்படி எழுதியிருக்கேன் என்று கூறிச் சிரித்தேன்.

நோ டவுட் இட்ஸ் எ வெரிகுட் ஸ்டோரி. கொஞ்சம் சேஞ்ச் பண்ணினாப் போறும்.

தேங்க்ஸ். வரேன் என்று கூறி விடை பெற்றேன்.

யோவ் நான் இன்னா, ’தெருவில் ஒருவன் தலையால் நடந்துகொண்டு போனான்’னு முதல் வரிலையே எழுதி பத்திரிகை எடிட்டரின் கவனத்தைக் கவர் பண்ணினாதான் அவரைப் படிக்க வெச்சி கதையைப் பிரசுரிக்க வைக்க முடியும்னு சுள்ளானுங்களுக்கு நீ குடுத்த டிப்ஸை ஃபாலோ பண்ணி ஆளாவணும்னு ஆசைப்படறவனா என்று உள்ளூர சிரித்தபடி M 80ஐ உதைத்தேன்.

எழுத்தாள எடிட்டர்வாளே இப்படி இருக்க ஜி. குப்புசாமி சொல்கிறார், இங்கிலீசுல எல்லாம் எடிட்டர் வெச்சுக்காம யாரும் எழுதறதே இல்லே இந்தக் கேடுகெட்ட தமிழ்தான் எடிட்டர் வெச்சுக்காம இப்படிக் கேவலமா கிடக்கு என்று.

எடிட் செய்ய வேண்டிய நிர்பந்தத்தின் அடிப்படை என்று, பத்திரிகை அலுவலகங்களில் பொதுவாகக் கூறுகிற காரணம், பேஜ் லே அவுட் செய்யும்போது, கச்சிதமாய் அந்தப் பக்கத்தில் முடியாமல் இரண்டு நான்கு வரிகள் தொக்கி நிற்கும் சமயங்களில், அதற்காக ஒரு பக்கத்தை ஒதுக்கி வடிவமைக்க முடியாது என்பதால் வெட்ட வேண்டி வரும் என்பது. ஆனால் எடிட் செய்வதற்கான முக்கியக் காரணம், எழுத்தாளனை விடப் பத்திரிகை பெரிசு என்கிற ஆசிரியர்களின் அற்பத்தனமான ஈகோ மட்டுமே. அரசு அலுவலகத்தில், உதவியாளன் கோப்புடன் வருவதைத் தொலைதூரத்தில் காணும்போதே சில அதிகாரிகளின் பேனா மூடி தானாய் கழன்று குண்டியில் ஏறிக்கொள்ளும் திருத்த தயாராய். அது போன்றதுதான் இதுவும். இது போக எக்ஸ்ட்ராவாய்,  தங்கள் வாசகர்களுக்கு இதெல்லாம் புரியாது பிடிக்காது போரடிக்கும் என்று அவர்களது தயாரிப்பான வாசகர்களின் அறிவு பற்றி பத்திரிகையாளர்கள் கொண்டிருக்கும் உயர்ந்த எண்ணம்.

எடிட்டர்களுக்கு என்னுடைய எளிய கேள்வி:

அம்பி, உன் வாசகனுக்குப் புரியும் புரியாதுங்கறது ஒரு பக்கம் இருக்க, என் கதை நோக்குப் புரிஞ்சுதோ. அதைச் சொல்லு மொதல்ல. அப்பறம் பண்ணலாம் எடிட்டு.