02 August 2015

கருப்பர் நகரத்தில் பாப் மார்லி


கடுமையான வெயிலில் மதிய நேரத்துப் பசியும் டெபிட் கார்டு வசதி இல்லை என்று அந்த சிறு உணவகத்தில் சொல்லப்பட்டதும் குறிப்பிட்ட வங்கியின் ஏடிஎம் தேடி அலைந்த எரிச்சலும் சேர்ந்து நெடுந்தூரம் பைக்கில் பயணப்பட்டு அலுவலாய் வந்தவனிடம் கடுப்பேற்றிக்கொண்டு இருந்தன, கருப்பர் நகரத்தின் ஏதோவொரு ஏடிஎம்மின் குறு வரிசையில் காத்திருந்தேன். எதிரில் ஷார்ட்ஸ் அணிந்த டி சர்ட்டில் தெரிந்த பாப் மார்லி வறண்டிருந்த மனதில் சுவாரசியத்தை உண்டாக்கினார். 


பாப் மார்லி ரொம்பக் கேப்பீங்களா. 

எதிரிலிருந்த இருவரும் ஏதோ சத்தம் கேட்கிறதே என்றுகூட என் பக்கமாய் ஏறிட்டுப் பார்க்கவில்லை. 

இரண்டாம் முறை அதையே சற்று அழுத்தமாய்க் கேட்டேன். 

இல்ல இங்கிலீசு பாட்டுலாம் கேக்கறதில்ல. 

அது பாப் மார்லிதான. 

ஆமா. 

அவுரு மியூசிக் பிடிக்கும் போல அதனாலதான் போட்டிருக்கீங்கன்னு நினைச்சேன். 

பாட்டுலாம் கேக்க மாட்டான் - அருகிலிருந்த கைலி இளைஞர் கூறினார். 

இங்க பாப் மார்லி ரொம்பப் பேமசா. 

ஆமா சிவனுக்காக. 

பாப் மார்லி சிவன் என ஒன்றும் புரியாத என் முகத்தின் திகைப்பைக் கண்டு அந்தக் கைலி இளைஞர் தாமே தொடர்ந்தார்.

இந்த ஏரியா ஃபுல்லா எங்கப் பார்த்தாலும் சிவன்தான். 

சிவன்னா...

சிவன்னா கஞ்சா. சிவன் தான கஞ்சா. பாப் மார்லியும் அதான. அதான் இங்க பேமசு. 

இன்னமும் படிக்கட்டில் ஏறாமல் நிலத்திலேயே நின்றிருந்த வெள்ளைச் சட்டையும் பேண்ட்டும் அணிந்த நாற்பதை ஒட்டிய கருப்பு மணிதர் தாமாகப் பேச்சில் கலந்து கொண்டார். 

பாப் மார்லி சே படம் போட்ட பனியனெல்லாம் இங்க நிறையபேர் போடுவாங்க ஆனா அவங்க என்னா ஏதுனு யாரோ ஒருத்தர் ரெண்டு பேருக்குதான் தெரியும். 

பாப் மார்லி கஞ்சாவுக்காகதான் பேமசாகி இருக்காருங்கறது ரொம்பக் கொடுமை என்றேன்.

அந்த இளைஞர்கள் இருவரும் எவ்வித சலனமுமின்றிச் சாதாரணமாய் இருந்தனர். 

சே மாதிரி அவுரும் கம்னீஸ்ட்டு என்றார் நடுத்தர வயதுக்கரர். 

ஏடிஎம் கதவைத் திறந்துகொண்டு ஒரு பெண் இறங்கிச் சென்றார்.

அடுத்தது அந்த இளைஞர்களின் முறை எனவே அவர்கள் ஏடிஎம்முக்குள் செல்ல கதவு மூடிக்கொண்டது. 

கம்யூனிஸ்ட்டுனு சொல்ல முடியுமானு தெரியல. வெறும் பாடகர் இல்லே. அடித்தட்டு மக்களுக்காகப் பேசின பாடின போராளினு சொல்லலாம். செத்தப் பிறகுதான் ரொம்ப பேமஸ் ஆனாரு. 

சே மாதிரி என்றார் நடுத்தர வயதுக்காரர். 

அவர் முழுப் பெயரைக் கூறாது சே சே என்றது எப்படி இவ்வளவு நெருக்கமாக உணர்கிறார் என வியப்பை ஏற்படுத்திற்று. கொஞ்சம் எட்டிப் போட்டால் இவர் யார் என நெருங்க முடியுமா என்கிற ஆர்வத்தில், 

இங்கல்லாம் சே குவேரா விடுதலைச் சிறுத்தைகள் பேனராலதான் பேமஸ் இல்லியா என்றேன்.

சேச்சே அவங்க பேனர்ல போடராங்க மீட்டிங்குல பேசறாங்க ஆனா இங்க எல்லாம் இதே மேரி டீ சர்ட்டு போட்டுகிட்டுத் திரியிறதோட செரி. என்னா ஏதுனு கேட்டா எவனுக்கும் ஒன்னியும் தெரியாது.

ஏங்க இங்க எவ்ளோ ஸ்கூல் காலேஜுலாம் இருக்கு...

அதெல்லாம் இருக்குதான். ஆனா அதுலல்லாம் படிக்கிறவன் உருப்புடறான். பாதிபேரு பைக்கை வெச்சிகிட்டு இப்பிடி பனியனைப் போட்டுகிட்டு சுத்தி சுத்திதான வரான். 

அவர்கள் வெளியில் வர, நான் உள்ளே சென்றேன். 

இதுவரை இண்ட்டர்நெட்டில் இளையராஜாவை நோண்டத்தான் போராளிச் சிங்கங்களால் பாப் மார்லி வழிபடப்படுகிறார் என்று எண்ணிக்கொண்டு இருந்தேன். இன்னொரு பயன்பாட்டுக்காகவும் அவர் சிவனாகி ஈர்க்கிறார் என்று அன்று தெரியவந்தது.