18 October 2011

கவிதையின் உயிரும் அவரவர் உயரமும்


இணையத்தில் ஜ்யோவ்ராம் சுந்தரின் பலமே, எவனாவது சீரியஸாக எதையாவது பேசினால் அதிலிருந்து ஓரிழையை மட்டும் எடுத்துக்கொண்டு ஓரிரு சிரிப்பான் போட்டு பஸ் ஓட்டுவதுதான். இதைப் பார்க்க்கையில் அய்யனார் தாளிப்பு பன்மடங்கு தேவலாம். முதிரா இளம் கோபத்தில் கொந்தளித்தாலும் ’உணர்ந்தால்’ ஒப்புக்கொள்ளும் நேர்மை சாதுர்யவாதிகளுக்கு எந்த ஜன்மத்திலும் சாத்தியமில்லை. அதுதான் ஜெயமோகனின் சாபமும் கூட.

குழுமத்தின் கதகதப்பில், ஜெயமோகன் எதிரிகளின் பெயர் போட்டு கத்தி சுழற்றுவதைப் போலவே, சுந்தர் பொதுவெளியொத்த பஸ்ஸில் வெற்றாகக் காற்றைச் சீவி அள்ளி முடிந்து, வெட்டி முறித்ததுபோல் ஆயாசம் கொள்கிறார். செட்டாக என்றைக்குமான கையிருப்பாய் பல சரக்குக் கடை வையேன், தேன் வந்து பாயுது என்பதுபோல எட்டுபத்து வரிகள் உண்டு. காலியான மேல்மாடியில் அவையே திரும்பத்திரும்ப அலசிக் காயப்போடப்படும்.


<விளக்கைப் போடவும்
அது விருட்டென்று முகஞ்சுளித்தபடி>
<வானேறிக் கொண்டதும்>
<நான் கவனிக்கத் தவறியதும்>
<வேதனையாய் மனதிலாட>

கவனிக்கத்தவறியது ’பிறகு’ உறைத்தால்தானே வேதனை தோன்றும் அதற்கெல்லாம் இந்தக் ’கவிதையில்’ இடம் அல்லது இடைவெளி எங்காவது இருக்கிறதா? 

<வேதனையாய் மனதிலாட> மனதிலாட என்கிற வார்த்தையில் கொஞ்சமேனும் வேதனையின் சாயலாவது தெரிகிறதா? ஏதோ குஜாலாக ஆடும் ஊஞ்சலையல்லவா நினவுறுத்துகிறது.

<நான் கவனிக்கத் தவறியதும்> இதுதான் இந்தக் கவிதை என்கிற  அபத்தத்தின் ஆதாரப்புள்ளி.

இதை எதிர்கொள்ளாமல் தப்பிப்பித்தலின் தந்திரோபாயமே <(மாமல்லனுக்கு ) அவருக்குச் சுட்டுப் போட்டாலும் கவிதை வராது என்பதற்கு இன்னொரு சான்று :-)> என்று மொட்டைவரி ஓட்டலாய் இளிக்கிறது. ஜ்யோவ்ராம் சுந்தரின் இணைய இலக்கிய வாழ்வின் நீட்சியே இதுபோன்ற ஒற்றைவரி இரட்டைவரி நரம்புகளில்தான் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. கூகுள்காரன் பஸ்ஸை முடக்கும்போது அதுவும் புஸ்ஸாகிப்போகக்கூடும்.

அண்ணாரின் ஒற்றை வரி உபன்யாசத்திற்கு, உடனடி ஜால்ராவாய் ஜெயமோகனின் குழும கிண்டர்கார்டனில் விரல்சூப்பும் விட்டில் ஒன்று மனுஷ்யபுத்திரனின் இழந்த காதல் என்கிற கவிதையை எடுத்துப்போட்டு 

இழந்த காதல்

நின்று சலித்த
என் தோட்டத்து மரமொன்று
பின்னிரவில்
என் பிரியத்தின் இதம் வேண்டி
மெல்லப் படியேறி வந்தது

மரங்கள் நடப்பது
சாத்தியமில்லையென அறிந்திருந்ததால்
ஒரு விபரீதக் கனவென்று திகைத்து
வரவேற்கத் தாமதித்துவிட்டேன்

ஆயிரம்
இலை நுனிகளால்
வேர் நுனிகளால்
புறக்கணிப்பின் துக்கம் ததும்பி
படியிறங்கிப் போகிறது
என் தோட்டத்து மரம்

- மனுஷ்யபுத்திரன்

<இந்தக் கவிதைக்கு மரம் என்றைக்கடா நடந்ததுன்னு விமர்சனம் வரும்ன்னு நினைக்கறேன்.> என்கிறது.

<மரங்கள் நடப்பது 
சாத்தியமில்லையென அறிந்திருந்ததால்
ஒரு விபரீதக் கனவென்று திகைத்து
வரவேற்கத் தாமதித்துவிட்டேன்>

விளக்கம், மேற்படி வரிகளாய்க் கவிதைக்கு உள்ளேயே இருப்பதை, வெட்டிகளால் எப்படிக் காண இயலும்? இந்த வரிகளே இதைக் கவிதையாக ஆக்குகின்றன. முன்னும் பின்னும் இருக்கும் மரம் வந்ததும் போனதும் முழுமையாக்குவதற்கான கட்டமைப்பு மட்டுமே.

பாண்டிச்சேரியில் பாரதி நினைவகம் இருக்கும் வீட்டு. முற்றத்தில் அமர்ந்திருக்கிறான் பாரதி. மாலை துவள இருட்டு நிறையத்தொடங்கிய நேரம். சிறுமி தங்கம்மாள் தாய் சொற்படி கொடியில் காயப்போட்ட துணிகளை எடுக்க மாடிக்குச் செல்கிறாள். கதவைத் திறந்ததும் இருட்டைக் கண்ட பயத்தில் கீழ்நோக்கிப் பதறியபடி ஓடிவருகிறாள். அதைப் பார்த்த பாரதி தனக்கே உரிய தனித்துவக் கிறுக்கில் நாடகீயமாய்ச் சொன்ன வார்த்தைகளே 

”துள்ளி வருகுது வேல்”. ஏம்மா பயப்படறே. ”சுற்றி நில்லாதே போ பகையே” என்று சொன்னதாகவும் அதன் பின்னர் முன்னும் பின்னுமாய் கவிதையை வளர்த்ததாகவும்  பாண்டிச்சேரியில் பால்யத்தில் கேள்விப்பட்ட கர்ணபரம்பரைக் கதை ஒன்று உண்டு.

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் - பரா சக்தி
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்.
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி - ஓம் சக்தி
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்.

கணபதி ராயன் - அவனிரு
காலைப் பிடித் திடுவோம்;
குண முயர்ந் திடவே - விடுதலை
கூடி மகிழ்ந் திடவே. (ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்)

சொல்லுக் கடங்காவே - பரா சக்தி
சூரத் தனங்க ளெல்லாம்;
வல்லமை தந்திடுவாள் - பரா சக்தி
வாழி யென்றே துதிப்போம். (ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்)

வெற்றி வடிவேலன் - அவனுடை
வீரத்தினைப் புகழ்வோம்,
சுற்றி நில்லாதே போ! - பகையே!
துள்ளி வருகுது வேல்.
(ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்)

தாமரைப் பூவினிலே - சுருதியைத்
தனியிருந் துரைப்பாள்
பூமணித் தாளினையே கண்ணி லொற்றிப்
புண்ணிய மெய்திடுவோம். (ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்)

பாம்புத் தலைமேலே - நடஞ் செயும்
பாதத்தினைப் புகழ்வோம்;
மாம்பழ வாயினிலே - குழலிசை
வண்மை புகழ்ந்திடு வோம். (ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்)

செல்வத் திருமகளைத் - திடங்கொண்டு
சிந்தனை செய்திடுவோம்;
செல்வ மெல்லாந் தருவாள் - நம தொளி
திக்க னைத்தும் பரவும் ஓம் சக்தி. (ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்)

ஒரு கவிதையில் உயிர் எங்கே துடிக்கிறது என்பது எத்துனைப்பேருக்குப் பிடிபடக்கூடும். ஏதேனும் ஒற்றைவரியைப் பிடித்து சிலுப்பிக்கொண்டு பேராண்டி ஊராளப்போறாண்டி என்று தனக்குத்தானே சீராட்டிக்க்கொள்ள வேண்டியதுதான்.

மனுஷய புத்திரனின் இழந்த காதல் கவிதையில் வரும் <வரவேற்கத் தாமதித்துவிட்டேன்> என்கிற சொற்றொடரைப் பிடித்துக்கொண்டு பின்னோக்கி முகம் திருப்பும் எவருக்கேனும் பால்யத்தில் படித்த டால்ஸ்டாயின் சிறுவர்களுக்கன கதைகளில் ஒன்றான ‘கடவுளின் வருகை’ தட்டுப்படக்கூடும் எனில், இந்தக் கவிதை, தலைப்பையும் மீறி பரவச அனுபவமாய் ஆவதற்கு வாய்ப்புண்டு.

எவரோ கொடுத்த சுட்டியை வைத்தே மாமல்லன் ப்திவைப் படித்ததாய் பாவனை செய்து, எவன் எழுதியது எது? எவன் விட்ட பஸ் அது? என்பதைக்கூட அறியாது அறைகுறையாய்ப் படித்து நூற்றைம்பது பேர்களே இருக்கும் குண்டுசட்டி குழுமத்திற்குள் - என் சலங்கைக்குப் பதில் சொல்லாமல் சாதுர்யம் பேசும் ஜெயமோகனைக் கடுமையாய் விமர்சிப்பவராய் வேஷம் கட்டும் சுந்தர் செய்வது மட்டும் என்ன அதேதான்.