09 October 2011

பைசைக்கிள் தீவ்ஸ் படத்தில் எஸ்.ரா ஓட்டிய கடைசி ரீல்

கொடுத்த காசுக்கு வஞ்சனை இல்லாமல் சிரிப்பு மூட்டும் சிறந்த நகைச்சுவை எழுத்தாளரான விருது ஸ்பெஷலிஸ்ட் திருவாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் ஒலக சினிமா புத்தகத்தில் பைசைக்கிள் தீவ்ஸ் படத்தின் முடிவு பற்றி எழுதி இருப்பதை கூகுள் பஸ்ஸில் படிக்க நேர்ந்ததும் வெடித்து சிரித்துவிட்டேன். 

காட்சியை உல்டா செய்து ஒப்பேற்றுவதற்காக ’சினிமா’வைப் பிழைப்புக்காகப் பார்ப்பதெல்லாம் சினிமா மீதான காதலாகக் கொண்டாடப்படும் அதி ஷயம், மொக்கைசூழ் இணைய வெளியில் ஆச்சரியம் இல்லை என்பது தெரிந்ததே. புத்தக வடிவிலும் அப்படியேதான் என்பது புல்லரிக்க வைத்ததுவிட்டது.

இதை யாருடனாவது பகிர்ந்துகொள்ளாவிட்டால் இன்று இரவே தலைவெடித்து செத்துவிடுவேன் என்கிற அச்சம் காரணமாகவும் நோபல் பரிசுக்கு ஸ்வீடிஷ் அகாதெமியால் எஸ்.ரா அழைக்கப்படும் நாள் அப்படியொன்றும் அதிக தொலைவில் இல்லை எனவே, ஏதோ என்னாலான பொரிவிளங்காய் உருண்டையையும் அவ்வபோது கொடுத்து வரலாற்றில் ஒட்டிக்கொள்வது ஒன்றே என்னைக் கடைத்தேற்றிக்கொள்ளும்வழி என்பதாலும் இதை எல்லோருடனும் பகிர்ந்துகொள்கிறேன்.

Gopi R - Buzz - Public 11:18 am

சரிதான்

முடிவில் அந்தோனியா திருட்டுக் குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டு கொண்டு செல்லப்படும்போது புருனோ செய்வதறியாமல் துக்கத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறான்

- பைசைக்கிள் தீவ்ஸ் பற்றி எஸ்ரா தன் உலக சினிமா புத்தகத்தில்

Sitting on the curb outside a packed football stadium, Antonio sees hundreds and hundreds of parked bicycles. As he cradles his head in despair, a fleet of bicycles speeds past him. After vacillating for some time, he tries to steal one outside an apartment. However, he is caught by a crowd of angry men who slap and humiliate him in front of his son. The bicycle's owner sees how upset Bruno is and mercifully declines to press charges. Antonio and his son walk away, dejected.

- படத்தின் முடிவு குறித்து விக்கி

#இனிமே எஸ்ரா எழுதின புத்தகம் வாங்குவ:-(((


நிக்காம எழதும் விக்கி புகழ் ஜெயமோகன் போல தாம் எழுதிய கதை கட்டுரைகளுக்கு ஏற்ப விக்கியில் தகவல் திரிபு திணிப்பு போன்றவற்றையெல்லாம் ஒத்தமித்த எழுத்தாளர்கள் செய்யமாட்டார்கள் என்று திரு.ஆர்.கோபி அவர்களுக்கு அப்படியென்ன மூட நம்பிக்கை? ஓ! மகா எழுத்தாளர் விக்கியை எழுதுவார் மற்றவர் விக்கியைப் பார்த்து எழுதுவார். இந்த முறை அதையும் கூடப் பார்க்கத் தவறிவிட்டார் போலும். தவறுதல் மனித இயல்பு.

அவருக்கு எனது பணிவான வேண்டுகோள்: ஐயத்தைத் தீர்த்துக்கொள்ள சிறந்த வழி மூலத்தைப் பார்த்துவிடுவதுதான். மேலும் சினிமாவின் அனுபவத்திற்கு எழுத்து ஒருபோதும் ஈடாகாது. தயவுசெய்து படத்தைப் பாருங்கள்.

இந்தாருங்கள் முழு பைசைக்கிள் தீவ்ஸ் படம் பாகம்பாகமாய். 

ஒரு விண்ணப்பம். இதுவரை படத்தைப் பார்க்காதவர்கள் எஸ்.ரா சரியா மாமல்லன் சரியா என சரிபார்க்க, எடுத்தவுடன் தயவு செய்து கடைசிக் காட்சியைப் பார்த்து, உலகின் சிறந்த படங்களில் ஒன்றான இது தரவிருக்கும் அற்புதமான அனுபவத்தைக் கெடுத்துக்கொள்ளாதீர்கள். 

ஏற்கெனவே பார்த்தவர்களுக்குக் கடைசிக் காட்சியை சரிபார்த்துக்கொள்ளவேண்டிய அவசியமே இருக்காது. காரணம் படத்தின் பலகாட்சிகளை மறந்திருப்பதற்கான வாய்ப்பே இல்லை. குறிப்பாகக் கடைசி காட்சி.

1948ல் வெளியான படம். அந்த காலகட்டத்தில் இரண்டாம் உலகப்போருக்குப்பின் இத்தாலியில் உருவாகியிருந்த பொருளாதாரத் தேக்க நிலை காரணமாய் வேலைவாய்ப்பு அரிதானதன் பின்புலத் தகவல்கள் எல்லாம் தெரியாவிட்டாலும் இன்னமும் இருபதுவருடம் கழித்துப் பார்த்தாலும் இது புதிதாகவே இருக்கும் என்றே தோன்றுகிறது.  இந்தப்படத்தைக் கப்பலேறிப்போய் இங்கிலாந்தில் பார்த்தாராம் இன்னமும் இயக்குநராகியிருக்காத, சினிமாக் கனவுகளால் இமை கனத்திருந்த இளம் சத்யஜித் ராய். நமக்கோ இருந்த இடத்தில் இருந்தபடியே சொடுக்கும் வசதி.


இதை என் பார்வைக்குப் படும்விதமாய் பஸ்விட்டு, இதுவரைப் பார்த்திராத எவராவது ஒருவருக்கேனும் என் மூலமாய்ப் பார்க்கும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்த, ஆர்.கோபி அவர்களுக்கு நன்றி.

எப்போதுமே ஏமாற்றாது தொடர்ந்து இயங்கிவரும் நண்பர் எஸ்.ரா அவர்களுக்கு என சிரம்தாழ்ந்த சிறப்பு நன்றி. நோ பல் பரிசு கிட்டும்வரை இப்படியே அவர் தொடர்ந்து இயங்குவார் என்பது எனது நம்பிக்கை.

இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லையென்று சொல்லுவதில்லை என்றார் ஹனீஃபா. இறைவனைவிடவும் மேலானவன் அல்லவா படைப்பாளி!ஆகவேதான் கையேந்தும் அவல நிலைக்கு நம்மைத் தள்ளாமல் அள்ளி அள்ளித் தந்தவண்ணம் இருக்கிறார் எஸ்.ரா.