01 March 2012

இந்தக் கடிதத்தை நான் பிரசுரிப்பதாய் இல்லை...

முதலில் இந்தக் கடிதத்தை நான் பிரசுரிப்பதாய் இல்லை... அதற்குக் காரணம் கடிதத்தின் இறுதியில் பி.குவாய் இருக்கும் இரண்டு வரிகள்.

முதல் வரி இப்படி இருக்கிறது.

பி.கு: இந்த சாருவை விட்டு விடுங்கள். சத்தியமாக அவரை யாரும் seriousaga எடுக்கிறார்களா என்ன.  அது ஒரு செத்த பாம்பு.

***

சாரு 500 கேட்கிறார். முடிந்தவரை என் அதிர்ஷடத்தை முயற்சித்துப் பார்க்கிறேன்.

சாரு நிவேதிதா என்பவர் எழுத்தாளரே இல்லை என்றுகூட ஒருவர் எண்ணக்கூடும். அதை சாருவேக்கூட அங்கீகரிக்கவும்கூடும். காரணம் அவர்தான், வினவு வீராச்சாமி மகஇக போன்ற தீவிரவாத பாசிஸ்ட் இல்லையே. விக்ரமாதித்யன் - சங்கர் ராமசுப்பிரமணியன் விவகாரத்தில் சாரு வெறும் டீக்கடைப் பேச்சோடு நிறுத்திக்கொண்டாரே தவிர வெளிப்படையான நிலைப்பாடு எடுக்கவில்லை என்பதற்காக அவர் ஜனநாயகவாதி இல்லை என்று ஆகிவிடுமா? ஏதோ ஒரு வேகத்தில் கருந்தேள் கண்ணாயிரத்தை, இங்கே வந்து ஜட்டிபோடாத வேட்டியின் முனையை கொடுத்துவிட்டார் என்கிற கோபத்தில், சாரு வாசகர் வட்டத்தைவிட்டே தூக்கிவிடுகிறார் என்றே வைத்துக்கொள்வோம். அப்போது கூட அவரை ஜனநாயகவாதியில்லை என்று சொல்லிவிடமுடியுமா? வேண்டுமென்றால் கொஞ்சம் மூளியான ஜனநாயகவாதி என்று சொல்லிக்கொள்ளலாம். ஆகவே அவர் எழுத்தாளரா? ஜனநாயக மரபுகளைக் காக்கும் எழுத்தாளரா என்கிற அநாவசியக் கேள்விகளை எல்லாம் விட்டுவிடுவோம். 

குறைகளுக்காக எவ்வளவுதான் அவரைக் குறைத்துப் பார்த்தாலும்கூட குறைந்தபட்சம் அவர் ஒரு முதியவராகக்கூடவா தேறாமல் போய்விடுவார். 59 வயதாகும் முதியவர். சாரு சொல்லும் ஒரு வார்த்தையைக்கூட நம்பாத ஒருவரும்கூட அவர் ஒரு முதியவர் என்பதை சந்தேகப் படமாட்டார் என்பதில் எனக்கு எந்தவித சந்தேகமும் இல்லை. என்ன கொஞ்சம் குசும்பு பிடித்தவர்களாக இருந்தால் 59 ரெம்பக் கம்மி, அ.மி, வெ.சா, இ.பா போன்றவர்களுக்குக் கொஞ்சம் இளையவராக இருக்கலாம். எப்படிப் பார்த்தாலும் ரயிலில் சலுகை டிக்கெட் வாங்குமளவிற்கு சீனியர் குடிமகனாக்த்தான் அவர் இருக்க வேண்டும் என்று நக்கலடிக்கக்கூடும். அதையெல்லாம்த் தவிடுபொடியாக்கி உண்மையான வயதை நிரூபிக்கத்தான், எஸ்.எஸ்.எல்.சி சான்றிதழ் முதல் சாருவிடம் ஏகப்பட்ட ஆவணங்கள் இருக்கின்றனவே. போதாக்குறைக்கு சாரு மத்திய அரசு குமாஸ்தாவாக வேறு வாழ்ந்து தம் வாழ்வின் முக்கியமான பகுதியை தேசத்திற்கு அர்ப்பணித்தவர். என்னதான் அவர் ராஷ்டிரபதி கையால் விருதுவாங்கவில்லை என்கிற குறை அவருக்கு உள்ளூர இருந்தாலும் முழுபென்ஷன் வாங்கும் அளவுக்கு அதாவது கிட்டத்தட்ட 28 - 30 வருடங்களுக்கு குமாஸ்தாவாகவே வாழ்ந்து தேசத்திற்காகத் தேய்ந்த இந்தியன் தாத்தா போன்ற சந்தனக் கட்டையல்லவா அவர். ஆக அவரது குமாஸ்தா சர்வீஸும் தமிழிலக்கிய சர்வீஸும் ஒன்றுக்கொன்று இளைத்தவையுமல்ல சளைத்தவையுமல்ல. ஆனாலும் அத்துனை வருட தியாகத்திற்குக் கிடைக்கும் குமாஸ்தா பென்ஷன் பப்பு ஸோரோவுக்குக் கறிவாங்கிப்போடவே சரியாய்ப் போய் இலக்கியத் தற்காப்புக்காய் இணையத்தில் வளர்க்கிற இன்னொன்றுக்கு திருவோடு ஏந்த வேண்டிய நிலையாகிவிடுகிறது. வாங்கிப்போட்டக் கறியில் பாவம் 59 வயது முதியவருக்கு மிஞ்சுவது என்னவோ மிச்சம்மீதி எலும்புகள்தான்.  அந்த எலும்புகளையும் இலக்கிய நண்பர்கள் கைங்கர்யத்தில் ஆகாயம் பார்க்க வெளியில்வந்த பல் இல்லாது போன வாயால் சவைக்க வேண்டிய அவலம். 

இவ்வளவு ஆதாரங்களையும் மீறி சாருவின் 59 வயது இளமையை அவரது வாசகர்கள் எங்கே நம்பாமல் போய்விடுவார்களோ என்கிற பதற்றத்தில் பாவம் ஃபோன் வரும்போது எடுக்காமல் கொஞ்ச நேரம் விட்டு தொலைபேசியில் திரும்ப அழைத்து, தஸ்ஸு புஸ்ஸு என மூச்சுவிட்டபடி தண்டால் எடுத்துக் கொண்டிருந்ததாய் சொல்லியாக வேண்டிய நிர்பந்தம். பெரியவர் சாருவுக்குத் தம் வாசகர்களின் மூளைக்கூர்மையின்மேல் இருக்கும் நம்பிக்கை காரணமாய் தெளிவாக அது ஸல்லாப தண்டால் என்று வேறு எழுதிக்கொள்ள வேண்டிய துர்லபம். போதாக்குறைக்குத் தான் எடுத்துக்கொண்டிருந்த தண்டாலை ஒருமணி நேரத்திற்குமேல் ஆகியும் நிறுத்தவே இல்லை என்று வேறு கூச்சத்துடன் சொல்லிக்கொண்டாக வேண்டிய துரதிருஷ்டம். இருபது முப்பது வயதில் எவனாவது எப்படியெல்லாம் தண்டால் எடுப்பேன் என்று பேசிக்கொண்டா இருப்பான்? குழிந்துகிடக்கும் பொக்கை வாயை மென்றபடி கடந்து போன காலத்தின் நினைவில் பாக்குக் கொட்டையை குட்டி உரலில் குளுவாஞ்சி உலக்கையை வைத்துக் குட்டிக்கொண்டு தண்டால் எடுப்பதில் இருக்கும் ஸல்லாபம் பற்றி ஒருவர் பேசுகிறார் என்றால் தரையில் குழி இருக்கிறதா என்று நீங்கள் தேடுவது குசும்புதானே.

தொங்கிபோனதைத்தானே தூக்கிநிறுத்தத் துணைவேண்டும்? வயது முதிர்வின் காரணமாய்த் தொங்கிப்போன முகச்சதைகளைத் தூக்கி நிறுத்திக்கொள்ள அவனவன் எவ்வளவு செலவழித்தாக வேண்டி இருக்கிறது. அவ்வப்போது சுஜாதா நாமம் வாழ்க என்று ஜபித்தபடி அம்பிடாலர் விழாதா என்று ஏந்தப்படும் திருவோட்டிற்கு இதெல்லாம் கட்டுப்படியாகுமா? வயோதிகத்தைக் கொஞ்சம் அப்படி இப்படி மறைத்துக்கொள்ள ஃபோன் வரும்போதெல்லாம் தான் தண்டால் எடுத்துக்கொண்டிருப்பதாகவே சொல்லிக்கொள்கிறார் என்பதிலிருந்தாவது அவர்மீது இந்த வாசகருக்குக் கருணை பிறந்திருக்க வேண்டாமா? வயசாளி என்கிற மரியாதைகூடவா இல்லாமல் போய்விட்டது?

மேற்படிக் காரணங்களால் இந்தக் கடிதத்தை நான் முதலில் பிரசுரிப்பதாகவே இல்லை. ஆனால் சாருவோ தனது புகழ் அண்ட சராசரத்திலும் கொடிகட்டிப்பறப்பதாய் நினைத்துக் கொண்டிருக்கிறார். போகவும் அவருக்கு உலகத்தின் சாளரமாய் இருப்பதோ இப்போதைக்கு என் தளம் மட்டுமே என்பதாலும் இந்தியக்குடியரசின் முதல் பொதுத்தேர்தல்கள் நடந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டாகிய 1952ல் அவதரித்த மூத்த குடிமகனுக்கு 1960ல் பிறந்த இளவலின் பணிவிடையாய் கடமையுணர்வோடு இப்போதுதான் ஜட்டிபோடவே ஆரம்பித்திருக்கும் ஒரு இளம் பையர் சாரு நிவேதிதா என்கிற மேருவைப் பற்றி என்ன நினைக்கிறார் என்று எனக்கு வந்த கடிதத்தை அப்படியே பிரசுரித்து என் வரலாற்றுக் கடமையை ஆற்றிக்கொள்வது அவசியமாகிவிட்டது.

***
sbc rsn ***@gmail.com                                             10:52 PM (22 hours ago)
to me

மாமல்லனுக்கு

நீங்கள் "கார்ல் மார்க்ஸ்" என்பவரின் மெயில் குறித்து எழுதியதை பார்க்க நேர்ந்தது

அவர் ஒரு சோறு தான். என்னை போன்ற பலரின் உணர்வும் அதுதான். இந்த ஜெமோ, எஸ் ரா, சாரு ரசிகர் மன்றங்களில் சேராதவர்கள்.. இவர்களின் கலை சேவையின் அட்டுழியங்களை நகைச்சுவை பொழுது போக்காகவேஎடுத்துக் கொண்டு..பிதற்றல்களை பல்லை கடித்து பொறுத்துக் கொண்டு...

உங்கள் வரவு நல்வரவு..

நீங்கள் நீர்த்து போனதாக ஞானி சொன்ன போது சிரித்தேன். விமர்சனமும், முகத்திரை கிழித்தலும் நீர்த்து போவதா. எனில் இத்தனை வருஷங்களாக அவர் என்ன செய்தாராம். இப்போது தான் சாருவை விமர்சிக்கும துணிவே வருகிறது. அதுவும் இது எனக்கு தேவையா என்று அவரிடம் கெஞ்சல் வேறு.

சில வேளைகளில் சூழ்நிலையே நம் எழுத்தை தேர்வு செய்கிறது..உங்கள் இப்போதைய எழுத்து இந்த இணைய பம்மாத்து சூழ்நிலையின் மிக முக்கியமான தேவை. உங்கள் ஆரம்ப கால இலக்கிய பங்களிப்பை விட இது மிக முக்கியமானதாகவே எனக்கு தோன்றுகிறது.

ஏனெனில் இவர்கள் ஒரு reference பாய்ண்டாக மாற கூடிய அபாயம் இருந்தது. எதை கேட்டாலும் ஜெயமோஹனே சொல்லிட்டாருல என எல்லா முடிவுகளுக்கும reference ஆகி இருப்பார்கள். இப்பொது அப்படி இல்லை. உங்கள் மாடன் மோட்சம், ரப்பர், ஆடுகளின் நடனம், பாகவதர் போன்ற தோலுரித்தல்களுக்கு பிறகு இவர்களின் எழுத்துக்கள் அவர்களின் ரசிகர் மன்ற உறுப்பினர்கள் உட்பட சந்தேகமாகவே பார்கிறார்கள். கடந்த ஒரு ஆண்டில் மாட்டும் பலர் ரசிகர் மன்றங்களில் இருந்து வெளியேறி இருக்கிறார்கள்/ வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள். நமக்கு இந்த கடலூர் சீனு போன்ற மாங்கா மடையர்களோ, பிச்சைக்காரன் போன்ற கொ.ப.செ வோ முக்கியமே அல்ல. நல்ல வாசகர்கள் இந்த புதை குழிகளில் மாட்டி கொள்ள கூடாது. அப்படி நான் நினைத்த பலருக்கு உங்கள் ப்ளாக் தான் வேப்பிலை அடித்தது. 

உங்கள் சேவை நாட்டுக்குத் தேவை. 

பி.கு: இந்த சாருவை விட்டு விடுங்கள். சத்தியமாக அவரை யாரும் seriousaga எடுக்கிறார்களா என்ன. அது ஒரு செத்த பாம்பு. ஒரு நாக பாம்பு நாகர் கோவிலில் இருக்கிறது. 

***

இந்த கடிதம் எழுதுவதற்காகவே உருவாக்கப்பட்ட மெய்ல் ஐடியாகக்கூட இது இருக்கலாம். அல்லது கருந்தேளார் போலவே சாரு வாசகர் வட்டத்திலிருந்து இன்னொரு ஆர்வக்கோளாறு எழுதியதாகவும் இருக்கலாம். இந்த சந்தேகத்தைக் கடைசி வரி உண்டாக்குகிறது. அல்லது இணைய எழுத்தாளர்கள் போல இந்தக் கடித்தத்தை நானாகவே எழுதிக்கொண்டிருக்கிறேனோ என்கிற சந்தேகம்கூட எவருக்கேனும் வரவும் வாய்ப்புண்டு. 

காலர் தூக்கிவிட்டுக்கொள்ளும் ஸ்காலரான அறிஞர் எம்.டி.எம் வேறு எனக்குக் கார்ல் மார்க்ஸிடமிருந்து வந்ததுபோல் தமக்கு ஏங்கெல்சிடமிருந்து கடிதம் வரவில்லை என்று ட்விட் போட்டுவிட்டார். எனவே என் கற்பை நிரூபித்தே ஆகவேண்டிய கட்டாயத்தின் காரணமாய் இந்த ஸ்கிரீன் ஷாட்டுகளைப் போட்டாகவேண்டி இருக்கிறது.