15 March 2012

அனைவருக்கும் நன்றி.

முகப்பேரிலிருந்து நந்தனத்திற்கு மாற்றலாகிவந்த இருபத்தியேழே நாட்களில் திரும்ப முகப்பேருக்கே மாற்றப்பட்டப் பழிவாங்கலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்விதமாகவே ஜூலை 2010ல் லீவ் எழுதிக்கொடுத்து வீட்டில் உட்கார்ந்தேன். சும்மா உட்கார்ந்திருக்க முடியாமல் இணையத்தைத் துழாவத்தொடங்கினேன். ஆகஸ்ட் 16 2010 முதல் தட்டுத்தடுமாறி தமிழ் தட்டச்சக் கற்றுக்கொண்டு இணையத்தில் எழுதத்தொடங்கினேன்.

மனதிற்குப் பிடித்ததை எழுதத்தொடங்கி, பதினாறு வருட இடைவெளி இல்லாமற்போனதுபோல், மரத்தடியில் டீக்கடையில் இரவுநேர மணற்சரிவில் பித்துபிடித்தவன்போல இருபதுகளில் நண்பர்களுடன்  இலக்கியம் பேசிப்பேசியே விடிந்த இரவுகளைப்போல் எந்த நிர்பந்தமுமின்றி  மனம்போனபோக்கில்  எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இந்த தளத்தில் இதுவரை பேசிக்கொண்டு இருந்தேன். 

தினமும் தளத்திற்கு வருவோரின் / படிப்போரின் சராசரி எண்ணிக்கை சமீபத்தில் மூவாயிரத்தைத் தொட்டபோதுதான் ஏதோ சரியில்லை என்று தோன்றியது. இவர்களைத் தக்கவைத்துக்கொள்ளவும் அல்லது இந்த எண்ணிக்கையைப் பெருக்கிக்கொள்ளவும் எழுதத் தொடங்கிவிட்டேனோ என்கிற சந்தேகம் வலுக்கத் தொடங்கியது. 

இதுவரை எனக்காக எழுதிக்கொண்டிருந்தவன்,இவர்களுக்காக எழுதத்தொடங்கிவிடுவேனோ என்கிற பயம் உள்ளூர அலைக்கழிக்கத் தொடங்கிற்று. எழுதுவதைத் தற்காலிகமாக நிறுத்தினால் எனக்குள் என்ன நடக்கிறது என்று பார்க்க ஆவல் எழுந்தது. எனவே எதுவும் எழுதாமல் சில நாட்கள் நிறுத்திப்பார்த்தேன். கடந்த ஒன்றரை ஆண்டுகளில் எழுதாமல் இருந்த நாட்கள் அநேகமாய் இல்லை எனலாம். ஆனால் கடந்த சில நாட்களில் எழுதாமல் இருந்தும் எந்த அசம்பாவிதமும் நிகழ்ந்துவிடவில்லை. 

இணையத்தில் எழுத வந்ததில் கிடைத்த மிகப்பெரிய லாபம் தமிழ் தட்டச்சத் தெரிந்துகொண்டது.

இப்படிச்சொல்வதை, என்மீது கவனம் குவித்தவர்களை அவமதிப்பதாய் எடுத்துக்கொள்ளவேண்டாம். ’வாசக நினைவகற்றல்’ என்பது, எழுத்தாளனாகத் தன்னை உணர்பவன் ’சுய’த்தின் மீது கொண்டிருக்கவேண்டிய மதிப்பு. வாசகனை, அவனது கரகோஷத்தை முன்னிறுத்தித் தன்னை இழந்துவிடக்கூடாதே என்று உள்ளார்ந்து இருக்க வேண்டிய பதைப்பு. 

போதும் என்று தோன்றவேவிடாமல் தொடரவைத்துக்கொண்டிருப்பது போதை. போதும் எனத்தோன்றிய பின்னும் ஒன்றைத் தொடர்ந்து செய்வது எனக்கு வாதை.

எழுதவேண்டியது மலையாகக் கிடக்கிறது. பல்லாண்டுகளாய் எழுதவேண்டும் என்று கிடங்கில் ஊறிக்கிடப்பவற்றுக்கே மீதமிருக்கும் ஆயுள் போதுமா என்பது சந்தேகம். 08.03.2012டோடு வேலைக்கு சேர்ந்து முழுதாக முப்பது வருடங்கள் முடிந்துவிட்டன. மீதமிருப்பவை இனமும் எட்டுவருடங்கள். இரட்டைக் குதிரைச் சவாரிக்கே உடலில் தெம்பில்லை. இதில் மூன்றாவதாக இணையத்தையும் சேர்த்து சமாளிப்பது மிகுந்த சிரமம். 

எனவே, அனைவருக்கும் மிக்க நன்றி.