01 March 2012

இதயம் கூட ’உண்மை’ பேசுகிறது

இதயம் பேசுகிறது மணியன் மேல் எந்த காலத்திலும் எனக்குத் துளிகூட மரியாதை இருந்தது கிடையாது. மாறாக, கேள்விப்பட்டதை விஷயங்கள் காரணமாய் மட்டமான அபிப்ராயமே உருவாகி இருந்தது.

அதனால்தான், இதயம் பேசுகிறது பத்திரிகையில், அஞ்சல்தலை அளவிலான புகைப்படங்களும் அவர்தம் பெயர் மற்றும் அவர்களுக்குப் பிடித்த அவர்களது நாவலின் பெயர்களுமாய் பெரிய இலக்கியவாதிகளின் தகவல்கள் பிரசுரமாயிருந்ததைப் பார்த்ததும் இவர்கள் போய் இதயத்திலா என்கிற கோபத்தில், எட்டடிக்குச்சுக்குள்ளே... என்கிற அச்சுகெளரவ வசவுக் குறிப்பொன்றை 1983-84 வாக்கில் ஞானரதத்தில் எழுதினேன்.

ஆனால் கீழ்க்காணும் குறிப்பைப் பார்த்ததும் அட இவர்கூட இவ்வளவு உண்மையாக இருந்திருக்கிறாரே என்று மணியன்மேல் இப்போது மரியாதையே வந்துவிடும்போல் பயமாக இருக்கிறது. இந்த சம்பவம் நடந்தது ஏதோ ஒரு அமெரிக்கருடன். இதை மணியன் சொல்லாவிட்டால் உலகத்திற்கேத் தெரியவந்திருக்காத அன்றாட தொலைபேசி உரையாடல். தன்னை உண்மையின் சொரூபமாய்க் காட்டிக்கொள்ளவேண்டிய அவஸ்தைகள் எல்லாம் மனியனுக்கு இல்லை. காரணம் அவர் இலக்கியத்தை மட்டுமே விற்றாக வேண்டிய அறக்கடமையின் நிரந்தரக் கைதியான இலக்கியவாதியும் இல்லையே. இருந்தாலும் இதை ஏன் அவர் எழுத வேண்டும்?

மரியாதைக்குரியவர்களாய் தோன்றுபவர்கள் மட்டமாக நடந்துகொள்வதும் மட்டமாக நம் மனதில் பதிந்தவர்கள் மரியாதைக்குரிய காரியத்தை சாதாரணமாய் செய்வதும் பிம்பங்களை உருவாக்கிக்கொள்ளும் நம் தவறுதான் என்று இதுபோன்ற சம்பவங்கள் தலையில் குட்டுகின்றன.

இதன் காரனமாகத்தான் அலங்காரமற்ற எளிய சொற்களில் இரண்டாயிரம் வருடங்கள் முன்பாக கனியன் பூங்குன்றனார் இப்படிச் சொல்லிச்சென்றாரோ!

பெரியோரை வியத்தலும் இலமே
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே
-கணியன் பூங்குன்றனார் (புறநானூறு - 192)

***
SARAVANAN SS ***@vsnl.net                                                    12:05 AM (2 hours ago)
to me 

அன்புள்ள மாமல்லன்,

பாகவதர் நூல் பற்றிய உங்கள் ஆராய்ச்சியும் ஆவணப் படுத்தலும் படித்தபோது மணியன் இதயம் பேசுகிறது புத்தகத்தில் எழுதியிருந்த ஒரு சம்பவம் நினைவு வந்தது. அதை உங்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று தோன்றியது.

அன்புடன்,

சரவணன்
சென்னை

***

இதயம் பேசுகிறது – மணியன்
பக்கம் 159

(மில்லர் என்கிற, நாகர்கோயிலில் 10 ஆண்டுகள் முன்பு வசித்திருக்கிற, அமெரிக்கர் ஒருவரைப் பிட்ஸ்பர்க் நகரில் சந்தித்த சம்பவத்தை விவரிக்கும் பகுதியிலிருந்து)

‘என்ன, நான் பேசுவது போரடிக்கிறதா உங்களுக்கு?’ என்று கேட்டார். 

‘நோ...நோ...சொல்லுங்கள்’ என்றேன்.

‘அது சரி, நீங்கள் கென்னடியைப் பற்றி ஏதோ புத்தகம் எழுதியிருக்கிறீர்களாமே, என்ன அது?’ என்று கேட்டார்.

அவர் கேள்வியால் நான் வியப்படையவில்லை. என்னைப் பற்றிய விவரங்களையெல்லாம், நான் என்ன சாப்பிடுகிறேன், எனக்கு என்னென்ன பிடிக்கும் என்பது பற்றிய விவரங்களையெல்லாம் அச்சடித்து, நான் யார், யாரைச் சந்திக்கப் போகிறேனோ அவர்களுக்கெல்லாம் அனுப்பிவைத்திருந்தது அமெரிக்க அரசாங்கம். அதில் நான் சிறுகதை எழுதுபவன், நாவல் எழுதுபவன், கென்னடியைப் பற்றிய வாழ்க்கை நூல் ஒன்றை எழுதியுள்ளவன் என்று குறிப்பிட்டிருந்தார்கள். அதனால்தான் அவர் அந்தக் கேள்வியைக் கேட்டார்.

‘ஆமாம், அவர் அகால மரணம் அடைந்ததும் அவரைப்பற்றிய வாழ்க்கை நூல் ஒன்றை எழுதினேன்,’ என்றேன்.

‘வாழ்க்கை நூல்! யூ மீன் பயாகிரபி’ என்று வியப்புடன் கேட்டார் அவர்.

‘ஆமாம்..’ என்றேன்.

‘நீங்கள் கென்னடியைச் சந்தித்திருக்கிறீர்களா?’

‘இல்லை.’

‘அவர் மனைவி ஜாக்குலினை?’

‘இல்லை.’

‘பின் எப்படி அவரைப் பற்றிய வாழ்க்கை நூலை நீங்கள் எழுத முடியும்? ஐ டோன்ட் அண்டர்ஸ்டாண்ட்...’ என்றார்.

எனக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை. அவர் கேள்வியில் அர்த்தம் இருந்தது. அமெரிக்க நாட்டிலே, நான் அநேக எழுத்தாளர்களைச் சந்தித்தேன். அவர்கள் ஒவ்வொரு குறிப்பிட்ட துறையில் மட்டுமே தேர்ச்சி பெற்றவர்களாக விளங்குகிறார்கள். வாழ்க்கை நூல் எழுதும் ஆசிரியர்கள், அதற்கென்று உயிரையே கொடுக்கிறார்கள். அந்த மனிதருடன் நெருங்கிப் பழகி, அவர்களுடைய உறவினர்களுடன் கலந்து பேசி, மிகுந்த ஆராய்ச்சி செய்து நூல் எழுதுகிறார்கள். ஜனாதிபதி கென்னடி மரணமடைந்த பின்னர், அவரைப் பற்றி ஒரு நூல் எழுத முற்பட்டார் வில்லியம் மான்செஸ்டர் என்ற ஆசிரியர்; கென்னடியை நன்கு அறிந்தவர். கென்னடி சுட்டுக் கொல்லப்பட்ட நிகழ்ச்சியை மீண்டும் நடத்திப் பார்த்து, டல்லஸ் நகரில் அவர் சென்ற அதே பாதையில் சென்று, நிகழ்ச்சிகளை ஊன்றிக் கவனித்து, ஜாக்குலின் கென்னடியுடன் பல நாட்கள் உரையாடி அந்தப் புத்தகத்தை எழுதியுள்ளார் அவர். அமெரிக்க நாட்டிலே அப்படித்தான் நூல் எழுதுகிறார்கள். அதுதான் வாழ்க்கை நூல் எழுதும் முறை. எனவே, மிஸ்டர் மில்லர் என்னைக் கேட்ட கேள்வியில் பொருள் இருந்தது.

‘ஐயாம் ஸாரி மிஸ்டர் மில்லர். நான் எழுதிய நூலை வாழ்க்கை நூல் என்று சொல்வது சரியில்லை. வாழ்க்கைக் குறிப்பு நூல் என்று சொல்லலாம்...கென்னடியின் மீது எனக்குள்ள அன்பை ஒரு சிறு நூலின் மூலம் எடுத்துக் காட்டியுள்ளேன். அவ்வளவுதான்...’ என்றேன்.

***
ஆனால் அல்ட்டிமேட் ரைட்டராக இணையக் குளத்துள் கொண்டாடப்படுபவர் தூக்கத்திலாவது ‘உண்மையாய்’ உளறுவாரா?