09 February 2014

போலியும் காலியும்

கேட்ட கேள்விகளுக்கு, இதையும் ஒரு ஜென்மம் என மதித்து பதில் சொல்லியும், சொல்லப்பட்ட பதில்களுக்கு எவ்வித எதிர்வினையும் ஆற்றாமல், புழுதியை மட்டுமே வாரித் தூற்றுபவனுக்கு இனி இணையத்தில் பதில் சொல்லி எந்தப் பயனும் இல்லை.

பேக் சேனல் டிப்ளமசியாக அர்த்த ஜாம அலைபேசி அழைப்பில்,


நான் இன்னார் பேசுகிறேன். விமலாதித்த மாமல்லனா? ஃப்ரீயா இருக்கீங்களா? பேசலாமா?


என்று பவ்வியமாகக் குழைந்து அழைப்பவன் தின்பது சோறுதானா என்கிற சந்தேகம் வருவது நியாயமா இல்லையா?

நிலவரம் உள்ளூர கலவரம் உண்டாக்கவில்லை எனில் பங்காளிகள் பகையாளிகள் மெய்நிகர் உலகில் ஏற்றுக்கொண்ட பாத்திரங்களிலேயே ஒருவரையொருவர் எதிர்கொள்வதில் என்ன பிரச்சனை? 

கடந்த ஒரு வருடமாய் நான் வேலை பார்ப்பது எங்கேயென்றும் நான் வகிப்பது என்ன பதவி என்றும் இணையத்திலேயே எழுதி இருக்கிறேன். என் அளவுக்கு, தான் செய்யும் வேலையைப் பற்றி, வெவ்வேறு கால கட்டங்களில் அதில் உண்டான சிக்கல்கள் பற்றி, அதை எதிர்த்து நின்றது பற்றி, பழிவாங்கப்பட்டது பற்றி, அதற்காக விடுப்பு எடுத்துக் கொண்டது பற்றி இத்துனை வெளிப்படையாக எத்துனைபேர் எழுதி விவாதித்து புழுதிவாரித் தூற்றப்பட்டிருப்பார்கள்? 

என் மூன்று வருட இணைய வாழ்க்கையிலேயே யதார்த்த உலகின் இறக்க ஏற்றங்கள் ஏமாற்றங்கள் குதூகலங்கள் எல்லாம் பதிவாகி இருக்கின்றன. எழுத்தாளனுக்கு எழுத்து என்பது புனைவு மட்டுமே என்று நான் நினைக்கவில்லை. இவை எல்லாமும்தான் நான். புனைவு ஒரு உலகை உருவாக்குவதன் மூலம் எழுத்தாளனைத்தானே காட்டுகிறது. என்னைப் பதிவது எப்படி இலக்கியமாக இல்லாது போகும்? அச்சடித்து புத்தகமாக வருவதற்கு மட்டுமே அந்தஸ்தளிப்பது உங்கள் மனத்தடை. என் வேலை என்னை வெளிப்படுத்துவதே. எந்த ஊடகத்திலும் என் உணர்வுகளை உண்மையாக வெளிப்படுத்துவது மட்டுமே எழுத்தாளனாய் என் காரியம். பிடித்தவர் படிக்கலாம். படித்தவர் பிடித்துக் கொள்ளலாம். பிடிக்காதோர் புறக்கணிக்கலாம்.  உலகின்முன் என்னை வைப்பதே என் காரியம். கொண்டையா சண்டையா வண்டையா என்பதெல்லாம் உங்கள் மதிப்பீடு. அதைப் பற்றி எனக்கென்ன கவலை. 

மெய்நிகர் உலகு கொடுக்கும் போலி தைரியத்தில் மெய்யுலகுபற்றி எந்த ஆதாரமும் இல்லாமல் வாய்க்கு வந்ததைப் பேசலாம். இதற்கு மெய்யுலகில் எதிர்வினை கிடைத்தால் ஐயைய்யோ மூக்கு ரத்தம் விஷம் கொலை என்று மெலோட்ராமா போடலாம். உண்மையை உரசி என்ன நடந்ததெனப் பார்க்கக் கிஞ்சித்தும் அக்கறையற்று வரிசைகட்டி வந்து அச்சச்சோ சொல்ல ஆயிரம் சச்சுக்கள் இணையத்தில். அல்லது, லஞ்சத்தில் தொக்காய் ஊறும் முதலோடு மோசம் போய்விடும் ஆபத்து வந்துவிடுமோ என்கிற அச்சத்தில் முன் ஜாமீனாய் மொட்டை போடுவான் ஏற்கெனவே அதில் கொட்டை போட்டிருக்கான் என்று கைத்தடிகளை விட்டு அவதூறு செய்யலாம். 

நானும் கடவுளைக் கும்பிடுபவன்தான் எனினும் அம்பாளண்டப் பாத்துக்கோன்னேன் படுக்க வெச்சுடுத்து என்று கருணாநிதியை சபித்த ஜெயேந்திரர் போலக் கும்பிடுபவன் இல்லை. சவட்டுகிற சவட்டில் எதிரி வாயே திறக்கக்கூடாது. இல்லையில்லை எதிரிக்கு வாயே இருக்கக்கூடாது என்கிறபடி சவட்டும் சக்தியை எனக்குக் கொடு என்று கும்பிடுபவன்.

வீராப்பாய் நாலுபேர் எதிரில் நட்டுக்கொண்டு நிற்கவும் யாருக்கும் தெரியவராது என்பது உறுதியானால் ’ங’ போல் வளைந்து குழையவும் புத்திசாலி வியாபார காந்தப் புழுக்களால் மட்டுமே முடியும். 

நான் மூடன். இலக்கியத்தில் மட்டுமின்றி நிஜ வாழ்விலும் எதிர்காலம் பற்றிய எந்த பிரக்ஞையும் இல்லாது க்ஷணச் சித்தம் க்ஷணப்பித்தம் என்று எவனையும் அனுசரிக்காது வாழ்ந்தாலும் பிசிறிலாப் பெருவாழ்வு வாழ்பவன்.