15 February 2014

உயில்

மாதவன் சார் வணக்கம்

சொல்லுங்க சார் வணக்கம்

இந்த மாசம் சம்பளம் இன்னும் போட ஆரம்பிக்கலையே!

சொல்லுங்க என்ன விஷயம்?

இல்லே இன்கம் டாக்ஸ் ரிடனை ரிவைஸ் பண்ணனும். அதர் இன்கம்ல கொஞ்சம் அமவுண்டை சேர்க்கணும்.

வாடகைக்கு ஆள் வந்துடுச்சா...?

இல்லையில்லை. ராயல்டி அமவுண்ட்டு வந்துருக்கு...

அது என்னா ராயல்டி?

புக்கு எழுதினதுக்கு வந்தது 

- வந்தது என்று எவ்வளவு சாதாரணமாய் சொல்ல வேண்டி இருக்கிறது. வாழ்க்கையில் எப்படியெல்லாம் பொய் சொல்ல வேண்டி இருக்கிறது. ரணமாய் வாழ்க்கை ரணகளமாய் ஆனபின்பல்லவா வந்ததிந்த ராயல்டி.

கனத்த பிரேமுக்குள்ளிருந்து கூர்ந்து பார்த்தபடி, ’அப்படியா...’ என்றார். 

எனக்கென்னவோ கூடவே அவர் கொஞ்சம் முறுவலித்தது போலவும் தோன்றியது. அது என் பிரமையாகக்கூட இருக்கலாம். பிரமை என்று நம்புவதே, மீதி ஆயுளை ஆசுவாசத்துடன் கடத்த உதவும். எனவே அது பிரமைதான். பிரமையேதான்.

எவ்ளோ...?

10,800/-

அப்ப, 10,800க்கு 10% ரூவா 1080/- பிடிக்க சொல்லி லெட்டர் குடுத்துடுங்க.

10% தானா?

ஆமா. நீங்க இன்னும் அஞ்சு லட்சத்தைத் தாண்டலியே! 

என் சம்பளம் என்னைவிட அவருக்கு நன்றாகத் தெரிகிறது. 

நான் பே பில் குமாஸ்தாவாக இருந்த 90கள் நினைவிலெழுந்தன. அனுமதியின்றி ஒருவர் பே பில் ரெஸ்டரைத் தொட்டுவிட முடியாது. மீறி எடுத்துவிட்டால், என்ன மயித்துக்கு பே பில் கிளார்க்குனு இங்க ஒருத்தன் ஒக்காந்து இருக்கேன் என்று ஒரே அமளிதான். நம்மை சகித்துக்கொண்டுதான் மற்றவர்கள் வாழ்கிறார்கள். ஆனால் சுகித்துக் கொண்டு வாழ்வதாய் சும்மாவேனும் நினைத்துக் கொள்வதில்தான் இருக்கிறது சுகம்.

இது நடந்தது காலையில். அலுவலகத்தில் புத்தகம் பற்றிய பேச்சே அபூர்வம். அதுவும் என் புத்தகம் பற்றி. சில தினங்களில், ஒரே விஷயம், சற்றும் தொடர்பற்று அன்றே, சம்மந்தமே இல்லாத வேறு இடத்தில் திரும்ப நடந்து வியப்பை அளிக்கும். அது போல நேற்று நன்கு இருட்டிய பின் மாலையில் அலுவலக போர்டிகோவில் திருச்சி பிரிவின் நண்பரை சந்திக்க நேர்ந்தது.

புக் ஃபேர்ல உங்க புக்கைப் பார்த்தேன் என்றார் வெங்கடேஸ்வரன்.

சம்பிரதாயமாக சிரித்து வைத்தேன். அப்போது ஆந்திராவில் வளர்ந்த இன்னொரு நடுத்தர வயது தமிழ் அதிகாரி எங்களுடன் சேர்ந்துகொண்டு அவரை நலம் விசாரிக்கத் தொடங்கினார்.  

திருச்சிக்காரர் தம் அலுவலக வாழ்வை மிகச் சாதாரணமான, கீழ்தட்டிலிருந்து தொடங்கியவர். சீனியாரிடி பட்டியலில் எனக்கு ஜூனியர் என்றாலும் இன்று அவர் திருச்சியில் ‘ஒரு மனித அலுவலகம்’ஆக இயங்கிக்கொண்டு இருப்பவர். தென்கோடியில் பிடிபட்ட 15 கிலோ தங்க கட்டி கேசில் ரியல் ஹீரோ என்று கூடுதல் அதி உயர்  அதிகாரியால் புகழப்பட்டவர். இம்முறை அவருக்கு ஜனாதிபதி பரிசு தட்டிப்போனதில் பலருக்கு வருத்தம். தென்தமிழகத்தின் பல ஊர்களின் பல சாலைகள்,சொந்த கைரேகைபோல  அவருக்கு அத்துப்படி. திருச்சியிலிருந்து தூத்துக்குடியா கோவையா மழையா வெயிலா என்று பார்க்காமல் எங்கும் அவரது புல்லட்டிலேயே போய்விடுவார். பல சமயங்களில் கண்டெய்னரோ காரோ எதன் வாலையாவது பிடித்தபடி, அந்த வண்டிக்குத் தொடரப்படுவது தெரியாதபடி. 

புக் ஃபேர்ல ரெண்டுமூணு கடைல உங்க புக்கு இருந்துது.

மறுபடி சிரித்து வைத்தேன். புண்னான மனதைப் புன்னகை புரிந்து ஆற்றிக்கொள்வதுதானே நடைமுறை புத்திசாலித்தனம். தலையெழுத்தே என மூடிக்கொண்டு இருந்திருந்தால் உயிர்மை ஸ்டாலில்கூட புத்தகம் இருந்திருக்குமா என்பது சந்தேகம் என்பதை இவருக்கு எப்படிச் சொல்லி புரிய வைப்பது?

சாண்டியல்ன்கூட புக்கு எழுதி பொழைக்கிறது எவ்ளோ கஷ்டம்னு எழுதி இருக்காரு.

இதென்ன திடீரென கையெறி குண்டு வீச்சு. சரி சரி அண்ணன் அட்டையை புத்தகம் என்கிற கோஷ்டியைச் சேர்ந்தவர் போலும். அதனாலென்ன பரவாயில்லை. பிற துறை சாதனையாளர்கள் ஏன் பிற துறை மேதைகள் கூட தமிழில் இலக்கியம் என்று வந்தால் படுபயங்கர ஜனநாயகவாதிகள்தானே. ஒரே மூச்சில் அகிலன் சுந்தர ராமசாமி சுஜாதா ஜானகிராமன் என்று அவியல் பொறியல் அப்பளாமாய் பரிமாறுவதை இந்த முப்பதாண்டு காலத்தில் எத்துனை தடவை பார்த்தாயிற்று.

இதற்குள் ஆந்திரா தமிழர் ’சாண்டில்யன்?’ என்றபடி இடைமறித்தார். 

ஆமாம் எக்கச்சக்கமாய் எழுதிய சரித்திர நாவலாசிரியர். பெஸ்ட் செல்லர். 

அவரே தமக்கு ஒழுங்காய் ராயல்டி கிடைத்ததில்லை என்று புலம்பி இருக்கிறார் என்று அடியெடுத்தார் திருச்சிக்காரர். 

இப்போது புரிந்துவிட்டது. இது திருச்சியிலிருக்கும் நமச்சி என்கிற நமச்சிவாயத்தின் வேலை. அவர்தான் என் பிளாகைத் தவறாமல் படிப்பவர். அவர்மூலமாக இவருக்கு வந்திருக்கிறது ‘ராயல்டி அடிதடி’ பற்றிய செய்தி. அதை சுற்றி வளைத்து சொல்லிக்கொண்டு இருக்கிறார் எனக்கு ஆறுதலாக.

இல்லையில்லை நான் அதுக்கு சொல்லல, என்று கிடைத்த கேப்பில் உள்ளே புகுந்தார் ஹைதிராபாதி.

கஸ்டம்ஸ்ல ஒரு ஏஓ கிட்ட ஒரு ஏசி சொல்லுவாரு, என்னைய்யா நோட்டீசா போட்டுருக்கே சாண்டில்யனாட்டம் இத்துனூண்டு மேட்டரை வெச்சிகிட்டு வளவளனு பக்கம்பக்கமா எழுதி வெச்சிருக்கேனு. அப்பிடிக் கேள்விப்பட்டது அந்தப் பேரு? 

இத்துனூண்டு மேட்டரா? சாண்டில்யனின் மேட்டர்களில் எதுவுமே இத்துனூண்டு கிடையாதே! எல்லாம் பெரிய பெரிய மலைப் பிரதேசங்களல்லவா!

திருச்சிக்காரர் எதிர்பாராதவிதமாய் இன்னொரு தூக்கு தூக்கினார் ’கொத்தமங்கலம் சுப்பு...’ என்று.

ஹூ ஈஸ் திஸ்? - ஆந்திரா

திருச்சி விவரிக்கத் தொடங்கிற்று.

கொத்தமங்கலம் சுப்புங்கறது ஒரு வில்லுப்பாட்டுக்காரர். அவுரு காந்தி கதையை வில்லுப்பாட்டுல ரொம்பப் பிரமாதமா சொல்லுவாராம். காந்தி சுடப்பட்ட இடம் வரும்போது கேக்கறவங்க கண்ணீர் விடறாப்புல கதறி அழுது கதை சொல்வாராம்.பத்திரிகைக்காரர் ஒருத்தர் அவர்கிட்டக் கேட்டாராம் அதெப்படிங்க காந்தி சுடப்படற எடம் வரும்போது மட்டும் எந்த ஊர்ல எப்ப கதை சொன்னாலும் கரெக்டா ஒரே மாதிரி கதறிக்கதறி அழுதபடி கதை சொல்றீங்கன்னு. அதுக்கு கொத்தமங்கலம் சுப்பு சொன்னாராம்.

அது ஒண்ணுமில்லீங்க காந்தியப் பத்தி கைக்காசை செலவழிச்சி ஒரு புத்தகம் போட்டேன். அது விக்காம என் வீட்டுப் பரண்ல கெடக்கு. காந்தி கதைல கிளைமாக்ஸ் வரும்போது நான் போட்ட புக்கை நெனச்சுக்குவேன் ஆட்டோமேடிக்கா கண்ணுல கரகரனு கண்ணீர் வந்துடும்.

ஜோக்கு புரிந்து ஆந்திரத் தமிழர்கூட வாய்விட்டு சிரித்தார். 

1994ல் வெளியிட்ட அறியாத முகங்கள் இரண்டாம் பதிப்பும் உயிர்த்தெழுதலும் தலா 250 பிரதிகளை என் வீட்டு கெளடவுனில் வைத்துக்கொண்டு நான் எப்படி சிரிக்க முடியும்?

நாளையோ நாளை மறு நாளோ வேலை ஏதும் வராதிருந்தால், மயிலாப்பூர் பிளாட்பார புத்தகக் கடைக்காரரைப் போய் பார்த்து விசாரிக்க வேண்டும். இந்த நடைபாதை மார்க்கெட்டிங் விநியோக நெட்வொர்க் வைத்துள்ள மொத்த குத்தகைதாரர் யார் என் புத்தகங்களை அவர் எடுத்துக்கொள்வாரா என்று.

கிழக்கு ஆன்லைனுக்குக் கொடுக்கலாம். ஆனால் அதில் இந்தப் பழைய 30 ரூபாய் புத்தகங்கள் விற்று முடியவும் ஜெயமோகனின் மகாபாரதம் முடியவும் சரியாக இருக்கும். அதுவரை நான் இருப்பேன் என்பதற்கு என்ன உத்தரவாதம்? விற்காத புத்தகச் சுமைக்கு என்ன உயிலா எழுதி வைக்க முடியும்?