01 June 2023

ஆபீஸ் அத்தியாயம் 52 போதும்

“ஜெனரலா நெறைய ரைட்டர்சுக்கு அப்பாக்களோட ஒத்துப் போகாது. பொதுவா, அப்பாக்கள் நாம்ப நினைக்கறா மாதிரி பிள்ளைகள் இருக்கணும், அதுதான் அவங்களுக்கு நல்லதுனு நினைப்பாங்க. பசங்க - அதுலையும் கொஞ்சம் யோசிக்கற பசங்க, அவங்க எப்படி இருக்கணுங்கறதைப் பத்தி சொந்தமா நெறைய யோசிச்சு வெச்சிருப்பாங்க. அது அப்பாக்களோட நெனப்புக்கு நேர் எதிரா இருக்கும். தமிழ்ல ஆரம்பிச்சு உலக இலக்கியம் வரைக்கும் ஆகாத அப்பா மகன்களுக்கு  ஏகப்பட்ட உதாரணங்களைச் சொல்லலாம்” என்று குறுமுறுவலுடன் முடித்தார். 

சற்று நேரம் நினைவில் அமிழ்ந்திருப்பதைப்போல அமைதியாக இருந்தவர்

“அப்பாவைப் பத்தி எழுதணும்னு நிறைய நினைச்சிருக்கேன். எழுதவேயில்லை. இனிமேல் எழுதுவேனாண்ணும் தெரியலை. அப்பாவைப் பத்தி எழுதி தாஸ்தாவெஸ்கியோட ஹைட்ஸை ரீச் பண்ணணும்னு ஒருகாலத்துல நெனச்சிருந்திருக்கேன். கிருஷ்ணன் நம்பிகிட்டக்கூட சொல்லியிருக்கேன்” என்றவர் எழுந்து உள்ளே சென்றார். 

எதிர் அறையில் கண்ணன், கையில் ஒரு பளபளக்கும் குழாயை வைத்துக்கொண்டு  இழுத்து உடற்பயிற்சி செய்துகொண்டு இருப்பது தெரியவே எழுந்து அவனிடம் போனான். அதைப் பத்திரிகை விளம்பரங்களில் இவன் பார்த்திருந்தான். 

“இதைப் பேப்பர்ல பாத்திருக்கேன். என்னவோ பேராச்சே...”  

“புல் ஒர்க்கர்” 

“ஆ... பாக்கலாமா” என்று கேட்கவும் அவன்அதை இவனிடம் நீட்டினான். சட்டையின்றி இருக்கையில் கண்ணன் இன்னும் கொஞ்சம் பூசினாற்போல் இருப்பதைப்போல இருந்தது. கண்ணன் என்றில்லை ராமசாமி வீட்டில் எல்லோருமே கொஞ்சம் பூசினாற்போல இருப்பதாகவே பட்டது. தங்கு சின்னவள் என்பதால் அவள் மட்டும் ஒல்லியாக இருந்தாள்போலும். 

ஆபீஸ் அத்தியாயம் 52 போதும்