இரண்டு நாள் முன்பாக கேவிஆரைப் பார்த்ததும் முதல் காரியமாக, "எஸ்விஆருக்கு பணம் கொடுத்துவிட்டீர்கள்தானே" என்றுதான் கேட்டான்.
"அதை ஏன் கேக்கறே. அது, பெரிய கூத்தா ஆகிடுச்சு" என்று ஆரம்பித்தார்.
"உன் லெட்டர் வந்திருந்த நேரம் பாத்து கவுண்ட்டர்ல கியூ. (கேவிஆரின் அரசாட்சியின் கீழ் இருந்த அந்த சப் போஸ்ட்டாபீஸில், அவருடைய டெஸ்க் எதிரில் ஒரே சமயத்தில் மூன்று பேர் நின்றாலே கியூவாக ஆகிவிடும். அதுகூட முதல் வாரத்தில்தான் என்பது வேறு விஷயம்.) அப்பறம் நிதானமா படிக்கலாம்னு டெஸ்க் மேலையே அதை வெச்சுட்டு வேலைல பிசியாகிட்டேன். ராமகிருஷ்ணன் வந்திருந்தான். அவனுக்கு பிரமோஷன் லேட்டாகறதேங்கற கவலை. யாரோ ஜோஸ்யர் கிட்ட அப்பாய்ண்ட்மெண்ட் வாங்கியிருந்திருக்கான். அதுக்கு இன்னும் டைம் இருக்கே, அங்க ஏன் எல்லார் எதுரையும் வெய்ட்பண்றதுனு இங்க வந்திருக்கான். அவன் கூட உங்க ஆபீஸ் இன்ஸ்பெக்டரோ சூப்பிரெண்டெண்ட்டோ ஒருத்தர் வேற யூனிஃபார்ம்ல வந்து கைகட்டிண்டு பவ்வியமா நின்னுண்டிருந்தார். வந்தவன் கண்ல உன் லெட்டர் பட்டுடுத்து. 'என்ன அவன் கையெழுத்தாட்டம் இருக்கே'னு எடுத்துப் பிரிச்சான். 'கொஞ்சங்கூட மேனர்ஸ் இல்லாம,என்ன இது. அவன் எதுக்கு, உன்னைக் குடுக்கச்சொல்லி எழுதறான்'னு அப்செட் ஆகி அப்படியே கெளம்பிப் போயிட்டான். இதுக்கு ஏன் இவன் இவ்ளோ அப்செட் ஆகணும்னு மொதல்ல தோணித்து. உன் லெட்டர படிச்சப்பறம்தான் எனக்கு விஷயமே புரிஞ்சிது" என்று சிரித்தபடியே சொல்லி முடித்தார் கேவிஆர். எனினும் அவர் முகத்தில் தம் நண்பருக்கான வருத்தமும் கொஞ்சம் இருப்பதைப்போலத்தான் பட்டது.
ஆனால், 'பணத்தால் மட்டுமே ஆன உலகம் இது. இவர்களுக்கு, பணம் கேட்டு கையை நீட்டாதவரைதான் ஜி நாகராஜன் பிரமாதமான எழுத்தாளர். காசு கேட்ட அந்த நொடியே, இவர்கள் எஜமானர்களாகி, அவர் வெறும் தொந்தரவாகிவிடுவார்' என்று, தான் அந்த கடிதத்தில் எழுதியிருந்ததைப் பற்றி அவனுக்கு அப்போதுகூட எந்த வருத்தமும் ஏற்படவில்லை.