28 December 2010

கவியும் சிறுவனும்

ஓவியம் ஆதிமூலம்

ஒட்டகம்

ஆயிரம் முறைகள் எண்ணிப்
பார்த்தபின் முடிவு கண்டேன்
ஒட்டகம் குரூபி இல்லை


குரூபிதான் என்றால் மோவாய்
மடிப்புகள் மூன்று கொண்ட
அத்தையும் குரூபி தானே!

அத்தையைக் குரூபி என்றோ
ஒருவரும் சொல்வதில்லை
சண்டைகள் வந்தாலன்றி

சண்டைகள் வந்தபோது
மற்றவர் அழகில் குற்றம்
பார்ப்பது உலக நீதி

ஒட்டகம் குரூபி என்றால்
அதனுடன் உலகுக் கேதும்
நிரந்தரச் சண்டை உண்டா?

- ஞானக்கூத்தன்

(1980ல் இரண்டாம் பதிப்பாக அகரம் வெளியிட்டது).

நல்ல படைப்புகள், பெரும்பாலான சமயங்களில், ஐயோ இதை நாம் எழுதி இருக்கக்கூடாதா என ஏங்க வைப்பவை.

பல அற்புதமான விஷயங்கள், ஏழுகடல் தாண்டி ஏழு மலை தாண்டி எடுத்துக் கொண்டு வரப்படுபவை அல்ல. ஆனால் அப்படி ஒரு காணாதது கண்டாதான பிரமிப்பையும், அட இது எனக்கே தெரியுமே என்கிற அணுக்கத்தையும் ஒரு சேர தரவல்லவை.

பொதுவாகவே ஞானக்கூத்தன் கவிதைகள், படித்து முடித்ததும் ஒரு சிறு முறுவலை வரவழைக்கக் கூடியவை. ஆரம்ப வாசகன் அங்கேயே நின்றுவிடக் கூடும். 

உயர்ந்த கலை, ஒன்றைச் சொல்வது போல் வேறு ஒன்றைச் சொல்வது, பல உள் இதழ்களும் பரிமாணங்களும் தன்னகத்தேக் கொண்டது. அடியர்த்தமான உட்பொருள் படிப்பவனின் தகுதி சார்ந்து விகசிக்கும். நமது சித்தர் பாடல்கள், பரமஹம்சரின் குட்டிக்கதைகள், முல்லா நசிருதீன் கதைகள் என சொல்லிக் கொண்டே போகலாம். பல சமயங்களில் முல்லா பரமஹம்சரிலும் பரமஹம்சர் முல்லாவிலுமாக கதைகளில் கூடுபாய்ந்து கொண்டும் இருக்கிறார்கள்.

அஞ்சறைப் பெட்டிகளுக்குதான் அல்லாட்டம், என்னுது உன்னுது என்று. நாம் நம்மை முன்னிருத்தியே, நமக்கு சாதகமாகவே எல்லாவற்றையும் பார்க்கிறோம். கண்ணெதிரில் இருக்கும் உண்மையுடன் கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருக்கிறோம்.

பற்பல வருடங்களுக்கு முன்னால், ஒருவர் ஒரு கவிஞரைக் காணச் சென்றார். கூடவே ஏழெட்டு வயதுடைய, தனது உறவினர் சிறுவனையும் சும்மா அழைத்துச் சென்றிருக்கிறார்.

கவிஞர், வந்த விருந்தினர் பேசிவிட்டுக் கிளம்புகையில், சிறுவனிடம் துண்டு சீட்டு ஒன்றில் எதையோ எழுதி மடித்துக் கொட்டுத்து,

இதை இப்போது படித்தால் உனக்குப் புரியாமல் போகலாம். பெரியவன் ஆனதும் வாசித்துப் பார்

என்று அனுப்பி வைத்தாராம். 

அது ஒரு குட்டிக் கவிக்கதை போல இருந்தது. 

நான் 
ஏழு கடல் தாண்டிப் போனேன்
ஏழு மலை தாண்டிப் போனேன்
கண்டங்களை எல்லாம் கடந்தேன்
உலகத்தை முழுமையாகப் பார்த்துவிடவேண்டும் என்று
எல்லா இடங்களையும் சுற்றித் திரிந்து பல வருடங்கள் கழித்து
வயதாகி,  ஒரு அதிகாலையில் வீடு திரும்பினேன்.
சூரியன் அப்போதுதான் எழுந்துகொண்டு இருந்தான்.
ஏதோ தோன்ற வீட்டுத் தோட்டத்தின் புல் தரையைக் குனிந்து பார்த்தேன்.
ஒரு புல்
அதன் முனையில்
ஒரு பனித்துளி
அதில் 
உலகம் முழுமையும் தெரிந்தது.

கவிஞரை சந்தித்த சிறுவன் சத்யஜித்ராய். 
சிறுவனை சந்தித்த கவி ரபீந்ரநாத் தாகூர்.

(கல்லூரிக் காலத்தில் யூகிசேது சொல்லக் கேட்டது என் வார்த்தைகளில் எழுதி உள்ளேன். தாகூரின் நேரடி வடிவம் அல்ல)