02 November 2021

ரோஸ்மில்க் - சிறுகதை: சக்கரம் நாவலின் ஒரு அத்தியாயம் (2012)

முகப்பு வளைவை ஒட்டிய இடப்பக்கச் சுவரில் தோட்டாக்கள் சல்லடையாய் துளைத்திருந்த அடையாளங்கள் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் அப்படியே இருந்தன. பயம் நினைவில் இருந்துகொண்டே இருக்கவேண்டும் என்பதற்காகவும் வஞ்சம் மறந்துவிடக்கூடாது என்பதற்காகவும் இருதரப்பாலும் வடுக்கள் மறைந்துவிடாதவண்ணம் பதற்றத்துடன் பாதுகாக்கப்பட்டுக் கொண்டிருந்ததாகத் தோன்றியது. 

அரைமணி நேரத்திற்கு ஒருமுறை புகைப்பவன், நாள் முழுக்க சிகரெட் பிடிக்காமல் இருக்கவேண்டியிருப்பது எவ்வளவு சிரமம் என்பது எல்லோருக்கும் சுலபத்தில் புரியக்கூடிய விஷயமில்லை. கடைசி சிகரெட்டைப் பிடித்தது, விடியற்காலை நான்கு மணிக்கு. தற்காலிகக் ’குழி கக்கூஸ்’களுக்குத் துணி மறைப்பு நடுவதற்கான இரும்புக் கம்பங்கள், காடாத் துணிகள் இன்னபிற தட்டுமுட்டுச் சாமான்களையும் ஏற்றிசெல்லும் டிரக்குக்குப் பின்புறமாய் மறைந்து நின்று, ரிடையர்டு கர்னல் ரேகேயின் கொள்ளிக் கண்ணுக்குப் படாதவண்னம் பிடித்த சிகரெட்தான் கடைசி. ஒட்ட இழுத்திழுத்து நிகொடினின் மஞ்சள் படிந்த சுட்டு நடுவிரல்களைக் கொண்ட கையும் வாயும் சிகரெட்டுக்காக நமநமத்துக் கொண்டிருந்தன. 

இரவு ஏறிக்கொண்டிருந்தபோதிலும் வரிசைவரிசையாய் அறைகளைக் கொண்ட நீண்ட மாடி வராண்டாவின் கோடியில் இருந்த கக்கூசில்கூடப்போய் புகைக்க வழியில்லை. காரணம் தங்கவைக்கப்பட்டிருந்தது சீக்கியர்களின் புனித இடமான பொற்கோவில். 

பொற்கோவிலைச் சுற்றி பீடி சிகரெட் போன்ற லாகிரி வஸ்துக்களை உபயோகிக்கத் தடைசெய் என்கிற கோரிக்கையாய் முளைத்த சிறிய போராட்டம் கணக்கற்ற உயிர்களைக் காவுகொண்டுவிட்டிருந்தது. முடிவற்ற பெரும் போர் போல தொடர்ந்துகொண்டிருந்தது. போர் வேண்டாம். போரில் ஜெயிப்பு தோற்பு இல்லை. இழப்பு மட்டுமே உண்டு என்கிற அமைதிக்கான குரல்கள் வரிசையாய் சைக்கிள் மிதித்தபடிக் கூவிக்கொண்டு கன்யாகுமரியில் இருந்து காஷ்மீரை நோக்கி ஊரூராய் சென்றுகொண்டிருந்ததில் இடைவழித் தங்கலில் ஒன்றுதான் பொற்கோவில். 

முழுவதும் படிக்க: https://amzn.to/3ER4kJY