19 November 2021

உயிர்கள்

மழை இல்லை. எனினும் எங்கு பார்த்தாலும் ஈரம். அறைக்குள்ளிருந்து பால்கனி வழியே பார்க்க அழகாக இருந்தது. 

வாடி நிக்கற வெத்தலைக் கொடியையே பாத்துக்கிட்டு இருக்காதீங்க. 

கொஞ்சம் வெயில் வந்தா போதும். எழுந்து நின்னுடும். 

குப்பை போட்டுட்டு வரமுடியுமா. 

ஓகே. 

தேங்க் காட். 

இதுக்கெதுக்கு தேங்க் காட். இது என்ன பெரிய விஷயம். ஒரு நடை நடந்தாப்பல இருக்குமே. 

மெட்ரோ வாட்டர் கொழாய் போடத் தோண்டினதுல கால் வாசி ரோடு வேரும் சேறா கெடக்குது. கால் வைக்க முடியாது.

*

குப்பைக் கவருடன் கிளம்பி நடந்தால் எங்கள் அடுக்குகளுக்கு வெளியில் இருக்கும் HIGயிலிருந்து முக்காடு போட்ட சல்வார் பாட்டியும் பேத்திகளுமாக குண்டு குடும்பம் நடந்து போய்க்கொண்டிருந்தது. பெரிதும் சிறிதுமான பெண் குழந்தைகள் பின்னால் வரும் என்னையே திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டு சென்றன. முறுவலித்தபடி பிரதான வாயிலை நோக்கி நடந்துகொண்டிருந்தேன் பக்கவாட்டில் பார்த்தபடி.

கொஞ்ச தூரம் போனதும் பாட்டி நின்றுவிட்டார். கையிலிருந்த லோட்டாவைக் கவிழ்த்தார். தரையில் பொடிபோல எதோ விழுந்தது.

நின்று பார்க்கத் தயங்கிகுப்பையைப் போடப் போனேன். 

திரும்பி வருகையில் விளக்குக் கம்பங்கள் மதில்கள் என எங்கும் புறாக்கள். நெருங்கியதும் தரையெங்கும் புறாக்கள்.

 

இப்படி ஜெய்ப்பூரில் பார்த்த நினைவு. பாட்டியும் பேத்திகளும் தள்ளி நின்றிருந்தனர். 

என்ன அது. 

ஒன்றிரண்டு ஒட்டிக்கொண்டிருந்த தம் கையைக் காட்டி இந்தியில் எதோ பெயர் சொன்னார். 

கம்பா... 

ஆமா என்றார் வடக்கத்தி மழலைத் தமிழில். 

எதாவது ரிலிஜியஸ் வோவா என்றேன். 

பெரிய சிறுபெண் சிரித்தது. 

பாட்டியம்மா இல்லேயில்லே. டெய்லி இவதான் போடறா. யாராவது போடணுமில்லே.

அடடே. 

இப்ப எல்லாரும் போட ஆரம்பிச்சுட்டாங்க. 

அப்படியா. நானும் இப்படிப் போட்டு நைஸா இவங்களை எங்க வீட்டுப் பக்கம் கூட்டிக்கிட்டுப் போயிடறேன். 

மூவரும் சிரித்தனர்.

*

கம்பு இருக்கா 

கம்பா. கம்பு ஏது இந்த வீட்ல. மாப் போடற கொம்புதான் இருக்கு. எதுக்கு 

அந்தக் கம்பு இல்லே கம்பு கம்பு. சோளம் கேழ்வரகு அந்தக் கம்பு

அதுவா. பர்ட் ஃபீடர்ல வெச்சதை எதுவும் சீந்தலைனு நீங்கதான் தூக்கிப் போடச் சொல்லிட்டீங்களே. 

இருக்கா பாரு என்றபடி கைலியிலிருந்து பர்முடாஸுக்கு மாறுவதைப் பார்த்ததும் 

கம்பு வாங்க கடைக்கே போறீங்களா என்று கண் விட்டாள். 

ஆமா. 

இதான் இருக்கு என்றுஃப்ரிட்ஜிலிருந்து வெல்லச்சீடை சைஸில் ஒரு பிளாஸ்டிக் உண்டையை நீட்டினாள். 

போய்ட்டு வந்துடறேன். உனக்கு எதாவது... 

ஒண்ணும் வேண்டாம்.

*

கம்பு இருக்கா.

ஆ இருக்கு. 

ஒரு கேஜி குடுங்க.

வேற. 

வேற ஒண்ணும் வேணாம். இருங்க... 

கம்பு வாங்கிட்டேன். எதாவது வேணுமா... 

ஒண்ணும்... விகேர் கலரிங் வாங்கிக்கிங்க. 

வேற. 

வேற என்ன... ஆ பாரீ சுகர் இருந்தாஅரை கேஜி. 

அப்பறம்... 

அவ்வளவுதான். 

சரி. 

புறா கம்பு தவிற என்னங்க சாப்புடும். 

ஜோளம். 

சோளம் பெருசா இருக்காது...

கா கேஜி வாங்கிப் போட்டுப்பாருங்க. 

சரி அது ஒரு கால் கேஜி. 

*

வதங்கி நிற்கும் வெற்றிலைக் கொடிகள் பிடறி பிடித்து உந்தவண்டி வீட்டிற்குப் போவதற்கு பதில் நேராககேட்பாரற்று கம்பி வேலிக்குள் காடாய் மண்டிக் கிடக்கும் கட்டாய பார்க்கைப் பார்க்கப் போயிற்று. 

இரண்டாள் உயரத்திற்கு நிற்கும் பின்னல் வேலி மீது ஈர போர்வையைக் காயப் போட்டதைப் போல் கொடிகள் மழை முத்துக்களுடன் மினுங்கிக்கொண்டிருந்தன. 

வருட வருபவை போல் வளைந்து நீண்டு கொண்டிருந்தவற்றில் நான்கைந்தைக் கிள்ளிக்கொண்டு வந்தேன். 

கையோடுவெவ்வேறு தொட்டிகளில் நட்டுவிட்டு கம்பு சோள பிளாஸ்டிக் கவருடன் கீழே இறங்கினேன். 

எங்கள் பால்கனிக்கு நேர் கீழாக நேர்க் கோட்டில் மூன்று இடங்களில் கம்பையும் சோளத்தையும் கை கையாய் அள்ளிக் கொட்டினேன். 

ஒரு விருந்தாளி வாக் வந்தார். 

வேறென்ன வேண்டும்.

ஒவ்வொரு மதியமும் சுற்றமும் உறவும் சூழ வாருங்கள் என்று சொல்லிவைத்தேன். 

மாடிக்கு வந்து பால்கனி வழியே பார்க்கையில் தூறிக்கொண்டிருந்தது. கீழே கான்கிரீட் வெளி முற்றிலுமாகக் கழுவிவிடப்பட்டுவிட்டிருந்தது. 

பரவாயில்லை. இப்படியேவா இருந்துவிடப் போகிறது. மழை விடாமலா போய்விடும். வெளிச்சம் வராமலா போய்விடும். வெற்றிலைக் கொடி வேர் பிடிக்காமலா போய்விடும். 

நம்மைச் சுற்றி உயிர்கள் இருக்கவேண்டும். நம் தனிமையை இழக்காமலும் இருக்கவேண்டும் என்றால் அதற்கு மனிதர்களை அல்லமரம் செடி பறவைகள் என மற்ற உயிர்களைத்தான் நாடவேண்டியிருக்கிறது.