18 November 2021

பிஞ்ஜாமி பிஞ்ஜாமி எஞ்ஜாயி பிஞ்ஜாமி

//நான்தான் ஔரங்கசீப்… நாவலின் 51ஆவது அத்தியாயம் பற்றி முகநூலில் ஒரு வரி எழுதியிருந்தேன்.  அந்த அத்தியாயம் அந்த நாவலின் உச்சங்களில் ஒன்று என.  இதே போன்ற இடங்கள் நாவலில் வேறு சில பகுதிகளிலும் உண்டு.  உதாரணமாக, நாதிரா பானு தன் மார்பகங்களை நீரில் கழுவி “இதையே தாய்ப் பாலாகக் கொள்ளுங்கள்” என்று தன் கணவன் தாராவுக்காக இன்னொருவரிடம் கையேந்தும்போது சொல்லும் இடம்.//

இதற்கெல்லாம் 'பட்டாசு' 'புல்லரிக்கிது' 'ஆஸம்' 'ஆர்கஸம்' என்று என் உண்மையான வாசக வாசுகிகள் விசிலடிப்பார்கள். 

//நான்தான் ஔரங்கசீப்… நாவலை அந்த நாவல் புத்தகமாக வரும்போது படிக்க இருப்பதாகப் பல நண்பர்கள் என்னிடம் சொன்னார்கள்.  இப்படி அத்தியாயம் அத்தியாயமாக விட்டு விட்டுப் படிக்க இயலவில்லை.  நானுமே அப்படித்தான் செய்திருப்பேன்.// 

பிஞ்ஜில் அத்தியாயம் அத்தியாயமாக எழுதுவதற்குதான் அதிகமாகத் தருகிறார்கள். அதற்கே என் ஜூனியர் சப்ஜூனியர் எழுத்தாளர்களுக்கெல்லாம் பொச்சரிப்பு. எழுத்தாளர்களெல்லாம் ஈக்வெல் என்கிறார்கள். விலங்குப் பண்ணைதான் நினைவுக்கு வருகிறது. என்ன இருந்தாலும் சில விலங்குகள் சீனியர் விலங்குகள் இல்லையா. அவற்றிற்கு என்று எக்ஸ்ட்ரா மரியாதை இல்லையா. 

//ஆனால் சுவாரசியமாக இருந்தால் அத்தியாயம் அத்தியாயமாகவும் படிப்பேன்.  நான்தான் ஔரங்கசீப்… நாவலை புத்தகமாகப் படிக்க இருப்பவர்கள் ஒரு விஷயத்தை இழக்கிறார்கள்.//

அவர்கள் என்ன கருமத்தை இழக்கிறார்களோ இல்லையோ, இப்படி மொத்தமாகப் படிக்கிறேன் என்பவர்களால் அத்தியாயத்துக்குக் கிடைக்கிற பத்தாயிரத்தை நான் இழக்க நேரிடும். என்பதை எப்படி நான் வாய்விட்டுச் சொல்ல முடியும். அதனால்தான் இந்தப் பதிவு. புரிந்துகொள்ளுங்கள்.

ஸீரோடிகிரி எழுத்துப் பிரசுரத்தில் மொத்தமாக வந்து புக்காக விற்றால் ராயல்டி 15 சதவீதம் என வைத்துக் கொண்டாலும் பெரிதாக என்ன வந்துவிடும். பிஞ்ஜிலோ, படிப்பது 3000 பேர்தான் என்றாலும் என் பில்டப்பை வைத்து 10,000 தேறிவிடுகிறது. இதையெல்லாம் அப்படியே எழுத்தில் சொல்லிவிடமுடியுமா எனவே 

//காரணம், புத்தகமாக வரும்போது நாவலின் நடை வேறாக இருக்கும்.  வாக்கியத்துக்கு வாக்கியம் மாறுபடும்.//

என்றுதான் எழுதவேண்டி இருக்கிறது.

//ஒரு உதாரணம் சொல்லலாம்.  உர்தூவில் பெரியவர்கள் ஹம் என்றே பேசுவார்கள்.  தமிழில் வரும்போது “நாங்கள் என்ன யோசிக்கிறோம் என்றால்…” என்று ஆகும்.  நான் என்ன யோசிக்கிறேன் என்றால்… தமிழில் கூட பெரிய மனிதர்கள், பண்ணையார்கள், சந்நிதானங்கள் எல்லாம் அப்படித்தான் பேசுவார்கள்.  தமிழவன் கூட முப்பது ஆண்டுகளுக்கு முன் ஒரு பேட்டியில் “நான் 1948இல் பிறக்கிறேன்” என்று சொன்னார்.  உடனே நான் ஒரு தமிழ்ப் பேராசிரியருக்கு இறந்த காலம், நிகழ் காலம் தெரியவில்லை பாருங்கள் என்று கிண்டலாக எழுதினேன்.  அவருக்கு எல்லாம் தெரியும்.  எல்லாம் தெரியும் என்ற மமதையே அந்த இடத்தில் கடந்த காலம் நிகழ் காலமாக மாறியது.  இதற்குத்தான் காலவழுவமைதி என்பார்களோ?  எனக்கு இலக்கணம் தெரியாது.//

காரணம் - உதாரணம் ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாமல், என்னென்னவோ உளறலாக இருக்கிறதே என்று கேள்வி கேட்பது என் வாசக வாசுகிகளுக்கு அழகில்லை. நான் எழுதுவதை ஏன் எதற்கு என்றெல்லாம் பார்க்காமல் அப்படியே ஹார்லிக்ஸ் போல சாப்பிடுங்கள். அப்போதுதான் உங்கள் ஞானத்தகப்பனான என் வண்டி ஓடும்.

//ஒரு இயக்குனர் ஒரு தயாரிப்பாளரிடம் பேசிக் கொண்டிருந்த போது கவனித்தேன், நாம எத்தனைப் படம் பண்ணிருக்கோம் என்று கேட்டார்.  மிரண்டு போனேன்.  இயக்குனர் அன்றைய தினம்தான் அந்தத் தயாரிப்பாளரையே சந்திக்கிறார்.  இவர்கள் எப்படி சேர்ந்து தயாரித்தார்கள்?  உடனே எனக்குப் புரிந்து விட்டது.  தயாரிப்பாளரை இயக்குனர் நீங்கள் எத்தனைப் படம் பண்ணியிருக்கிறீர்கள் என்று கேட்கக் கூடாது.  நீங்கள் என்பது மரியாதைக் குறைவு.  அதனால்தான் நீங்கள் நாம் ஆயிற்று.//

இது, இருப்பதைப் பிரதிபலிக்கும் யதார்த்தவாதம் ஆயிற்றே என்று கேட்கிற அகராதி பிடித்தவன் நிச்சயம் என் வாசக வாசுகியாக இருக்கவே மாட்டான். அவன் உருப்படவே மாட்டான். அவனை நான் ஹிருதயத்தில் வைத்து பூஜிக்கும் பாபா பார்த்துக்கொள்வார்.

//இப்படியாக ஔரங்கசீப் நாவல் அச்சுக்குப் போகும்போது நடையில் பெரிய மாற்றங்கள் இருக்கும்.//

எப்படியாக மாற்றங்கள் இருக்கும் என்று கேட்காதீர்கள். அதான் இப்படியாக இருக்கும் என்று சொல்லிவிட்டேனே.

//இது ஒரு சின்ன உதாரணம்தான்.  நாவலே கூட வேறு மாதிரி மாறலாம்.//

உத்தவாதம் இல்லாத உலகத்தில் எதற்குதான் கியாரண்டி இருக்கிறது. எல்லாம் போலி. நெ.2. என்று ஆகிவிட்டது. நான் மட்டும் எப்படி அசலாக இருக்கமுடியும். இருந்தாலும் நான் என் அசலான இயல்பில் மாறி மாறியே இருந்துகொண்டிருக்கிறேன் 50-60 வருடங்களாக இருந்துகொண்டிருக்கிறேன் என்பது கொண்டாடப்படவேண்டிய சாதனையல்லவா.  

//நான் தொடர்ந்து மாற்றி மாற்றி எழுதிக் கொண்டிருக்கும் ஆள் என்பதை மறந்து விடாதீர்கள்.  எனவே bynge.in இல் வரும் இந்த வடிவம் அச்சு நூலில் இருக்காது.// 

எனவே என் வாசக வாசுகியாக இருக்கும் ஒவ்வொருவரும் பிஞ்ஜில் படிக்கிறீர்களோ இல்லையோ படிப்பது போல பாவ்லாவாவது செய்து கட்டைவிரலால் ஸ்குரோல் பண்ணி 'படித்தவர்கள்' கணக்கை ஏற்றி சிஎஸ்கே எல்எஸ்கே போன்ற கத்துக்குட்டிகளை விட நான் அதிகம் படிக்கப் படுவதான, மாய யதார்த்தத்தை உருவாக்குங்கள். பாருங்கள் நான் கேட்பதெல்லாம் உங்கள் கட்டைவிரலை அல்ல. கட்டைவிரல் தள்ளலைத்தான். 

இவ்வளவு எழுதியும் 300 ரூபாய் கேட்கவில்லை என்பதை நினைவில்கொண்டு, மொத்தமாக 'மொத்தையான' புத்தகமாக வரும்போது படிக்கலாம் என்று இருந்துவிடாதீர்கள். அதில் பதிப்பகத்துக்குதான் லாபம். எனக்கு வெறும் 15% தான். பிஞ்ஜ் அப்படியில்லை. மொத்தமும் எனக்குதான். பிஞ்ஜில் 'படித்தவர்கள்' எண்ணிக்கைதான் என் கெத்தைக் காட்டும். ரேட்டைக் கூட்டும்.