27 November 2012

முதுகெலும்பற்ற அறச்சீற்ற அடலேறு

நானுண்டு என் வேலையுண்டு என வேலைக்கும் போய்க்கொண்டு தொழிலாய் இணையத்திலும் எழுதிக்கொண்டு இருப்பவனுக்கு எங்கிருந்தெல்லாம் விருந்து அழைப்பு வருகிறது என்று பாருங்கள்.
ஃபேஸ்புக்கில் தர்மபுரி பற்றி இப்படி ஒரு அழைப்பு வந்திருக்கிறதே என்னவென்று போய்ப் பார்த்தால்,
இதுதான் என்னை அழைத்த கூட்ட நிகழ்வு. 

கனடாவில் நடக்கும் கல்யாணத்துக்கான அழைப்பிதழில் முதற்கொண்டு, ஃபேஸ்புக் நட்பு வட்டத்திலிருந்து எது எதற்கெல்லாமோ எங்கெங்கிருந்தெல்லாமோ இது போன்று வரும் அழைப்புகள் ஏராளம். இது எனக்கு மட்டும் என்றில்லை ஏராளமானவர்களுக்கு இப்படியான அழைப்புகள் வருகின்றன என்பதுதான் யதார்த்தம்.

மெய்நிகர் உலக நண்பர்களும் மெய்யுலக நண்பர்களும் ஒன்றில்லை என்கிற நடமுறைஅறிவு இல்லாத பாசாங்குக்காரனில்லை என்பதால், இது ரயில் சிநேகத்தைவிட சுமார் ரகம் என்பதே என் கருத்து.

போதாக்குறைக்கு என் இயல்புப்படியே, பார்த்தோர் எல்லோரையும் சும்மா வாய்வார்த்தையாகக்கூட ’ஃப்ரெண்டாக’ சொல்லிக்கொள்ள,நான் பிப்ரவரியில் பிறந்த அக்வேரியனும் இல்லை.

ஆகவே இதுபோன்ற பல அழைப்புகளுக்கு நான் முகம் கொடுப்பதே இல்லை. மாறாக யாராவது வந்து என் பக்கத்தை லைக் பண்ணு என்று அழைப்பு விடுத்தால், போய்ப்பார்த்து செம மொக்கையாக இருந்தால் இது எதற்கு நமது நட்பு வட்டத்தில் இதன் ஃபீடு வேறு பார்வையில் படவேண்டுமா என்று அன்ஃப்ரெண்ட் செய்துவிடுவதே என வழக்கம். மொக்கைகளைப் பார்த்து டென்ஷனாகி சும்மா இருக்க முடியாமல் நாம் ஏதாவது சொல்லி அதைவேறு டென்ஷனாக்குவானேன் என்கிற நல்லெண்ணம்தான். 

இணையம் மூலமாக படித்து அறிமுகமாகி,நேரில் சந்திக்க விழைபவர்களையும் எதாவது சாக்குபோக்கு சொல்லி தவிர்த்துவிடுவதே என் வழக்கம். எழுத்தில் புடுங்கிகொள்ள முடியாத எதையும் வாசகனாகப்பட்டவன் எழுத்தாளனை நேரில் சந்தித்து புடுங்கிவிடப்போவதில்லை என்பதே என் திட்டவட்டமான எண்ணம். ஏகப்பட்ட எழுத்தாளர்களை சந்தித்த அனுபவத்தால் அடைந்த ஞானம்.

எழுத்தாளனை வாசகன் நேரில் சந்திப்பதால் வாசகனுக்கு என்ன கிடைத்துவிடும். உச்சபட்சமான வாசகனுக்கு, தன்னை வியக்கவைத்த எழுத்துக்களைப் படைத்தவனை சந்தித்த பூரிப்பு. ஆகச் சாதாரண ஆளுக்கு ‘பிரபல’த்துடனான புகைப்பட வாய்ப்பு. இதுபோன்றோரின் ஆல்பத்தில் குள்ளமணி லூஸ்மோகனோடு சேருந்துகொள்ளும் அரிய பாக்கியம் எழுத்தாளனுக்கும் உண்டு. பெரும்பாலானோருக்கு சினிமாக்காரியைக் கிட்ட இருந்து பார்த்த கிளுகிளுப்பை ஒப்பிட்டால் இது கிட்டையே வராது. 

வாசகனை சந்தித்ததில் எழுத்தாளனுக்கு அடுத்தவன் சொறிந்துகொடுத்ததால் உண்டான ஆசுவாசம். இதுதான் பெரும்பாலும் யதார்த்தம்.

ஆனால் உண்மையான ஆழமான எழுத்தாளர்கள் உள்ளூர ஆள்தேடி அலைபவர்கள்தாம். அர்த்தபூர்வமாகக் கொஞ்சநேரம் நம்மைப் யோசித்துப் பேசவைக்கும் விதமாக எவனாவது கிடைப்பானா என்கிற தேடல் அது.  அவன் தேங்கிப்போகாமல் தன்னைத் தற்காலத்தில் தக்கவைத்துக்கொள்ள விழையும் தவிப்பு. 

எழுத்தாளனுக்கு வாசகன் என்பவன், பிச்சைப் பாத்திரமல்ல எடுத்துக்கொள்வதற்கான அட்சய பாத்திரம். நாம் இங்கே பேசிக்கொண்டிருப்பது காசு குறித்தன்று. அறிவு குறித்து. அனுபவம் குறித்து. இன்று காலையில் இத்துனை கலோரி ஓட்ஸ் சாப்பிட்டேன் அதிலிருந்து கிடைத்த சக்தியில் இது இதெல்லாம் செய்தேன் என்று அட்டவணை போட்டு யாரேனும் வாழ முடியுமா? வாழ்வு கடைந்த கடைவில் மேலொதுங்கும் அனுபவத் திரட்சியை,வெண்ணையாய் வழித்துத் திரட்டிக்கொடுப்பதில் ஆனந்தப்படுபவன் எழுத்தாளன்.திகட்டத்திகட்ட ஆவேசமாய் தின்னத்தொடங்குபவன் வாசகன். 

எவருடைய எழுத்தின் மூலமும் நீங்கள் வாழ்க்கையை அறிந்துவிடப் போவதில்லை. உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு ஏற்கெனவே தெரிந்திருந்ததை,  தெரிந்துகொள்ள விடுபட்டதை அறியப்படுத்துகிறவனே எழுத்தாளன். 

அவனை அண்டி நீங்களோ உங்களை அண்டி அவனோ இல்லாதிருக்கும் பட்சத்தில்தான் இந்த அரியதை அறியக்கொடுத்தலின் ஆனந்தம் அவனுக்கும் அறிதலின் ஆனந்தம் உங்களுக்கும் சாத்தியம். இருவருக்குள்ளும் நேரடிப் பரிச்சயம் இல்லாதிருந்தபோதே இதன் உக்கிரம் வலுத்து இருந்தது என்பதை கூர்மையான வாசகன் பழகத்தொடங்கிய கொஞ்ச நாளிலேயே உணர்வான். முன்னோடி எழுத்தாளனும் முதிரும் எழுத்தாளனும் சந்திப்பது இதிலிருந்து முற்றிலும் வேறானது. அதைப் பற்றிப் பிறிதொரு தருணத்தில் பார்க்கலாம்.

மெய்யுலகிலேயே எழுத்தாள வாசக சந்திப்பின் லட்சணம் இதுதான் என்றால், மெய்நிகர் உலகில் அதுவும் ஃபேஸ்புக்கில் வாசிப்பு என்பதைப் பற்றி விரிவாக சொல்லாமல் விடுவதே நல்லது. எட்டு வார்த்தைகளுக்குள் ஒரு ஸ்டேட்டஸ் இருந்தால் படிக்க பொறுமை உண்டு என்று சொல்கிற பெருந்தன்மையாளரே இங்கு பெரும்பான்மை. 

பொதுவாகவே இணையம் என்பது இளைப்பாறலுக்கான இடம் மட்டுமே. மாலை மயங்கி அன்றைய தினம் இருளுக்குள் உருளத்தொடங்கியதே உறைக்காமல் ஆவேசமாய் பார்க்கில் பேசிக்கொண்டிருப்போரும் உண்டல்லா அது போல அபூர்வமாக ஒருசிலரே இணையத்தில் இருக்கிறார்கள். 

ஆக ஃபேஸ்புக் அழைப்பு என்பது மெய்யுலகில் இருக்கும் அழைப்பு போன்றதன்று. போஸ்ட் மூலம் வரும் அழைப்பில் இருக்கும் தனித்துவம்கூட இதில் இல்லை. உண்மையில் பார்த்தால் இந்த அழைப்பு அதன் அகராதிப்பொருளில் அழைப்பே இல்லை. இது அழைப்பு என்கிற  பெயரிலான அறிவித்தல் மட்டுமே.

சாதிய வன்முறைக்கு எதிரானதாய் இருக்கிறதே என்கிற பொறுப்புணர்வோடு, இதற்கு முறையாக பதில் சொல்வது நம் கடமை என எண்ணி, கூட்டத்துக்கு வர இயலாமைக்குத் தன்னிலை விளக்கமாய், தனிச்செய்தியில் கீழ்க்காணும்படி தெரிவித்தேன். 
நான் தெரிவித்த 30 நிமிடங்களில்,சனிக்கிழமையே இதைப் பார்த்துவிட்டார் இவர். வரும் ஞாயிறு அன்று கூட்டம். அதுவும் காலை பத்து மணிக்கு. பத்து மணி என்பது எனக்கு விடியற்காலை. இரவு இரண்டுமணி என்பது எனக்குப் பின்மாலை. அதுவும் அன்றைய தினம் ஞாயிறு என்றால் கேட்கவே வேண்டாம். முந்தைய இரவு சிவராத்திரி. பகல் முழுக்க சவராத்திரி.

காலை பத்து மணிக்கு சுந்தர ராமசாமி வருகிறார் அவரைத் தனியாகத் தள்ளிக்கொண்டு போகும் வாய்ப்பும் உள்ளது என்றால்கூட, பத்து மணியா என்று முணகுபவன் நான். தூங்காமலே இரவுமுழுக்க கண்விழித்திருப்பது எளிய காரியம். தூங்கினால் விழிப்பது கும்பகர்ண பிரயத்தனம். போகவும் அந்தக் கூட்டத்துக்கு நான் வருவது ஏன் சாத்தியமில்லை எனவும் தெரிவித்து இருக்கிறேன். 

இருந்தும் திங்கட்கிழமை அன்று தமது சுவரில் இப்படி எழுதுகிறார்.
இதுதான் சார் இணைய அறம். 

இந்த நபருக்கு நான் முன்பின் தெரியாதவன். இவரை முகம் முறித்துகூடப் பேசவில்லை. அந்த நிகழ்ச்சியில் பார்வையாளனாக கலந்துகொள்ள முடியாமைக்கு தன்னிலை விளக்கமும் கொடுத்திருக்கிறேன். இருந்தும் இவரிடமிருந்து முதுகெலும்பில்லாத பெயரற்ற இந்த அர்ச்சனை. 

ஆனால் அதே அழைப்பில் இருக்கும் இன்னொரு பெயர் கவின்மலர். இணையத்துக்கு எழுதவந்த கொஞ்ச நாளிலேயே யுவகிருஷ்ணா அதிஷா இவர்களுடனான முதல் சந்திப்பிலேயே இவரை சந்திக்க சேர்ந்தது. தெரியும் என்கிற அளவில் மட்டுமேயானது இவருடனான பழக்கம். அலைபேசியில் இவர் அனுப்பியிருந்த கூடங்குளம் போராட்டத்துக்கான ஆதரவு கையெழுத்து அழைப்பிற்கான குறுஞ்செய்தியை அப்படியே ஸ்கீரின் ஷாட்டாகப் போட்டு இந்தப்போராட்டத்தில் கொள்கை ரீதியாக எதிர்மாறான நிலையில் இருப்பவன் என்பதால் ஆதரிக்க இயலாது என்று இணையத்தில் வெளிப்படையாகவே எழுதினேன். 

சிறையிலிருந்து அன்று காலையில்தான் பெயிலில் வந்திருந்த ராஜன் லீக்ஸ் திருவல்லிக்கேணி பெல்ஸ் ரோடருகில் தங்கியிருந்தான். அவனை சந்திக்கச் செல்லும் முன் கவின்மலரைதான் அரசு விருந்தினர் மாளிகை அருகில் சந்திக்க நேர்ந்தது. நடந்துகொண்டிருந்தது கூடங்குளம் போராட்டம்தான். ஆனால் என் கருத்து நிலைப்பாடு, எந்த விதத்திலும் உறுத்தலை சிறு  முகச்சுளிப்பைக்கூட அவரிடம் ஏற்படுத்தவில்லை. போகவும் கைகுலுக்கியபின், ’என்ன பத்திரிகையைவிட்டுட்டு முழுநேர களப்போராளி ஆயிட்டீங்களா’ என்று நக்கல்தான் அடித்தேன். அதற்கும் சிரித்தபடியே போராட்ட இடத்தை நோக்கிப்போனார் கவின்மலர். 

பெண் என்கிற சொல்லில் தட்டச்சுப் பிழையாய் இரண்டு சுழி போட்டுவிட்டாலே பெண்களை அவமதித்தாய் என்கிற அளவில் பேயாட்டம் போடும் பெண்ணிய ஹோல்சேலர் போல அல்லவா இருக்கிறது இந்த தர்மபுரி களப்போராளியின் காரியம். இவர் கலந்துகொண்ட கூட்டத்துக்கு வராமற் போனது கொலைக்குற்றமா? இல்லை இந்த நிகழ்ச்சிக்கு வராமல் தவிர்த்த காரணத்தால் நான் சாதீயக் கொடூரன் ஆகிவிடுவேனா?

ஃபேஸ்புக் என்பது அரசும் ஊடகங்களும் கண்டு அஞ்சும் வலிய ஆயுதக்கூடம். அதை ஒண்ணுக்கு அடிக்கக்கூட லாயக்கில்லாத இடமாக ஆக்கிக் கொண்டிருப்பவர்கள் இவரைப்போன்ற அறச்சீற்ற அடலேறுகள்தாம். 

ஊர் என்னை கண்டுகொள்ள வேண்டும் என்பதற்காக எதையும் சொல்பவனில்லை. உணர்ந்ததைச் சொல்பவன் முடிந்தவரை என் மனதுக்கு உண்மையெனப்பட்டதைச் சொல்ல முயல்பவன். என்னை ஊர் கண்டுகொள்ளாதது என்பது, என் கீழ்தேகக் கேசத்தில் ஏதோ ஒரு மசுரு உதிர்ந்ததுக்கு ஒப்பானது.