02 November 2012

விதைகளும் வதைகளும்

புஷ்பவனம் குப்புசாமி ஆரம்ப நாட்களில் சாஸ்தரீய சங்கீதம் கற்றுக்கொள்ள கர்நடக சங்கீத வித்வானிடம் சென்ற போது, உனக்கெல்லாம் சங்கீதம் வராது அல்லது சொல்லித்தர முடியாது (இது போன்ற அர்த்தத்தில்) கூறிவிட்டார் என்று, அவர் கொடுத்திருந்த பத்திரிகை செய்தி/பேட்டியைப் படித்திருப்போருக்கு, இன்றைய விஜய் டிவி நிகழ்ச்சியில் பூவே செம்பூவே பாடலின் இசைக்கோர்வை பற்றி சிலாகித்துவிட்டு அதை ஸ்ரீராம் பாடுகையில் அவர் நெகிழ்ந்து அழுததோ அப்புறம் அந்த மேடையிலேயே இளையராஜாவுக்கு மானசீகமாக சாஷ்ட்டாங்க நமஸ்காரம் செய்ததோ மெலோடிராமாவாகப் படாது. 

ஆனால் அவரது நெகிழ்ச்சி சிலரால் கிண்டலடிக்கப்பட்டிருந்ததைப் பார்க்க வருத்தமாக இருந்தது. வருத்தம் புஷ்பவனத்தை எண்ணியல்ல  - கிண்டல் செய்தவர்களை நினைத்து. 

மேற்குறிப்பிட்ட நேர்காணலில் இசையைக் கற்றுத்தர மறுத்த சம்பவத்தைக் குறிப்பிட்டவர், கர்நாடக சங்கீத வித்வானின் பெயரைக் குறிப்பிடாது தவிர்த்திருந்தார். அனைத்தையும் ஆழமாய் அலசி மறு மறு பக்கங்களை ஆராய்ந்து கண்டடைந்து சமூகத்துக்குக் கொடையளிப்பவர்கள், அதை அவரது சமூக ஜாக்கிரதை  உணர்ச்சியின் சான்றாகக் கொள்ளலாம் என்றுகூட சொல்லக்கூடும். என்னைய்யா இப்படி என்று கேட்டால்,  சரியோ தவறோ ஜனநாயகத்தில் அப்படிச் சொல்வதற்கு அவர்களுக்குக் கருத்துச் சுதந்திரம் கிடையாதா என்றுகூட அறிஞர்கள் வாதாடலாம். தமக்கு பிரத்தியேக பிதுரார்ஜித சொத்துக்களாய் கிடைத்த  பெருந்தன்மை முதிர்ச்சி நாகரிகம் என்பவையெல்லாம் அடித்தட்டிலிருந்து வருபவனுக்கும்கூட இருக்கக்கூடும் என்று எடுத்துக்கொள்வதற்கான பெரிய மனம் துரதிருஷ்டவசமாய், மெத்தப் படித்து சமூகத்தின் மேல் நிலையில் இருப்பவர்களுக்கு பெரும்பாலும் இருப்பதில்லை என்பதையே இது காட்டுகிறது. 

கருப்பர்கள் சட்டபூர்வ அடிமைகளாய் இருந்த காலத்தில், சீமாட்டியொருவர் தனது வருங்காலக் கணவருடன் காலார நடந்து சென்றுகொண்டிருந்தாராம். தொலைவில் பண்னையடிமகளான ஏதோ ஒரு கறுப்பு ஜோடி முத்தமிட்டுக் கொண்டிருக்கிப்பதைத் தற்செயலாய் பார்க்க நேர்ந்திருக்கிறது. சீமாட்டி ஆச்சரியமாய்க் கேட்டாளாம், காதல் கலவி போன்ற உணர்ச்சிகளெல்லாம் கூட நம்மைப்போலவே இந்த அடிமைகளுக்கும் உண்டா என்று. 

பல வருடங்கள் முன்னால் படித்தபோதே சம்பவத்தைக் கூறிவிட்டு வித்வான் பெயரை அவர் தவிர்த்திருந்ததிலிருந்து - இது தனிநபர் தவறல்ல அவர் வளர்ந்த வளர்ப்பு அப்படி - என்று வித்வானை மன்னித்த புஷ்பவனத்தின் பெரிய மனம் தெரிந்து என்னை நெகிழ வைத்தது. சமூகம் கொடுத்த  இப்படியான வடுக்களுக்கு எல்லோரும் புஷ்பவனம் போலவே பெருந்தன்மையாய் எதிர்வினையாற்றவேண்டும் என்று எதிர்பார்ப்பதும் முறையன்று. இதுபோன்ற சம்பவங்களுக்கு பதிலடியாக இன்றைய தலைமுறை தீவிரமாக  மறுமொழி கொடுத்தால், சமயத்தில் வரம்பும் மீறினால் சம்பவத்தை சாதாரணமாய் கண்டித்துவிட்டு என்ன இருந்தாலும் வரம்பு மீறி  எப்படிப் பேசலாம் என்றல்லவா தர்க்கித்துக்கொண்டிருக்கிறோம். ஒருபடி மேலேபோய், வயிற்றில் பல் வளர்த்தவர்கள், தகுந்த தருணத்தில் வேறு ஏதோ தவறு செய்து மாட்டிக்கொண்டால் பார்த்தாயா இது வெறும் பொறுக்கி, அன்றே அது எப்படிப் பேசியது, இதுகளெல்லாம் வேறெப்படி இருக்க முடியும் என்று எப்படித் தம் வன்மத்தைத் தீர்த்துக்கொள்கிறார்கள் என்பதை நம் மனசாட்சியைக் கீறி கேட்டுக்கொண்டாலே  சரியான விடைகிடைத்துவிடும்.

இந்தக் குறிப்பிட்ட பேட்டி, புஷ்பவனம் அவர்கள் புது வீடு கட்டி இருந்ததைப் பெருமையுடன் நிருபருக்குக் காட்டியதைப்பற்றியது என்றும் அந்த வீட்டின் படங்களும் அந்த இதழில் வெளியாகி இருந்தன என்றும் நினைக்கிறேன். 

இன்னும் சொல்லப்போனால் அதை நான் படிக்க நேர்ந்ததே, புஷ்பவனம், வீட்டை எப்படிக் கட்டியிருக்கிறார் பாருங்கள் என்று சொல்லி, என் மனைவி பத்திரிகையை என்னிடம் பார்க்கக் கொடுத்ததால்தான். அப்போதெல்லாம் என் மனைவிக்கு, சொந்த வீடு என்பது கலர் கனவு; எனக்கோ காணல் நீர். எனவே படங்களைப் பார்க்காமல் என்னதான் சொல்கிறார் என்று அதைப் படிக்கப்போக, ஆரம்பத்தில் குறிப்பிட்ட அந்தப் பகுதி கண்ணில்பட்டு என்னை நெகிழ வைத்தது. அதை என் மனைவிக்குப் படித்துக்காட்டியபோதுதான் தெரிந்தது, அவள் வீட்டின் படங்களை மாத்திரமே பார்த்திருந்தாள் இன்னும் படிக்கவே இல்லை என்பது. பத்திரிகை குங்குமமாக இருக்கலாமோ என்னவோ சரியாக நினைவில்லை.

எந்த விதை என்றாலும் மண்ணைப் பிளந்துதானே வெளிவந்து விருட்சமாகவேண்டும்? இது எல்லா விதைகளுக்குமான பொது விதி அல்லவா என்று, சட்டக எழுத்தாய் சொல்லிப்போவது எல்லோருக்கும் எளிது. ஆனால் சில விதைகள் பல வதைகளை கூடுதலாக சந்திக்க வேண்டி இருக்கிறது என்பதுதான் எல்லோராலும் உணரமுடியாத உண்மை. 

எல்லா விஷயங்களையும் எல்லோராலும் புரிந்துகொண்டுவிட முடியாது என்கிற புரிதல் எல்லோருக்கும் அதிலும் குறிப்பாக மேட்டுக்குடி நியாயஸ்தர்களுக்கு என்றெனும் வரக்கூடும்  என்பது என்றைக்குமே கனவுதான் போலும்.