11 November 2012

கலைஞனும் குமுறலும்

மேதைகளுக்குள் பொது அம்சம் கிறுக்குத்தனம் என்றாலும் ஒவ்வொருவரிடமும் அது ஒவ்வொருவிதமாக வெளிப்படும். 

நாதஸ்வர மேதை டி என் ராஜரத்தினம் பிள்ளை அவர்கள் கச்சேரி முடிந்தபின், மேடைக்குப் பின்புறம் ஓய்வெடுத்துக்கொண்டு இருந்திருக்கிறார். சப்பணமிட்டு உட்கார்ந்திருந்தவர் மடியில் அவரது நாதஸ்வரமும் ஓய்வெடுத்துக்கொண்டு இருந்திருக்கிறது. 

கச்சேரி முடித்து பிள்ளை இன்னும் கிளம்பவில்லை, பின்னால்தான் இருக்கிறார் என்று கேள்விப்பட்ட புல்லாங்குழல் மேதை மாலி அவர்கள் மேடைக்குப் பின்புறம் சென்று சந்தித்து அளவளாவிக்கொண்டு இருந்திருக்கிறார்.

பிள்ளை அவர்களோ, எதிரில் யார் இருக்கிறார்கள், நாம் பேசுவதை அவர்கள் எப்படி எடுத்துக்கொள்வார்கள், அதனால் என்ன பின்விளைவுகள் உண்டாகும் என்கிற கணக்குவழக்குகளோ கவலைகளோ இல்லாமல் மனதில் பட்டத்தை முகத்துக்கெதிரில் வெடுக்கென்று பேசும் சத்தியமான கலைஞர்.

மாலியோ எப்போது எப்படி நடந்துகொள்வார் என்று, அவர் உட்பட எவராலும் கணிப்புக்கும் பிடிபடாதவர்.

சுமுகமான சிநேகித பேச்சுக்கிடையில் வாசித்துப்பார்க்க திடீரென எழுந்த வேட்கையில், நாதஸ்வரத்துக்காய் கையை நீட்டி,  'அதக் கொஞ்சம் குடேன்' என்றார் மாலி.

கொஞ்சமும் யோசிக்காமல் வெடுக்கென பதில் வந்தது பிள்ளையிடமிருந்து.

"இது ஒன்னைத்தான் எங்குளுக்குன்னு விட்டு வெச்சிருக்கீங்க. இதையும் புடிங்கிக்கலாம்னு பாக்கறியா"

இது இரண்டாயிர வருடத்துக்கு முந்தைய ஆரிய - திராவிட ஜல்லியடிப்பல்ல. 1930-40களின் வரலாற்று நிஜம்.