05 June 2011

காந்தியின் அஹிம்சைப் போராட்டம் பற்றி பிரமிள்

காந்தி திரட்டிய ஜன சக்தியின் அம்சங்கள் எதுவும் இந்த இயக்கத்தில் இருக்கவில்லை. அஹிம்சா யுத்தத்தின் தீவிர நிலைக்கு இவர்கள் தயார் செய்யப் படாதவர்களுமாவர். பெருமளவிற்கு அரசகருமங்களில் ஈடுபட்டிருந்த ஒரு பூர்ஷுவா அணி இது. திடீரென எழுந்து நின்ற அப்போதைய பிரச்சனையை அன்றைய சரித்திர கட்டத்தில் கெளரவிக்கப்பட்ட அஹிம்சைக் கருவி மூலம் சந்தித்த திடீர் எதிர்வினை மட்டுமே இந்த இயக்கத்தில் தெரிந்தது. எனவே சிங்கள இனவாதக் கருவியாகத் திரண்டு வந்த காலிப்பட்டாளத்தின் தாக்குதலை இந்த ’அஹிம்சைப் போராளிகள்’ தாங்கி ஸ்தலத்திலேயே காயங்களுடனோ பிணங்களாகவோ வீழ்ந்து கிடக்க முடியாத பலஹீனர்களாக தங்களைக் காட்டிக் கொண்டார்கள். சிதறி ஓடினார்கள். இது ஒரு பகுதியினரால் அஹிம்சா ஆயுதத்தின் தோல்வியாகக் குறிப்பிடப்ப்டுவதை ஒட்டி இங்கே விபரம் பெறுகிறது. உண்மையில் இது உட்கார்ந்து தெரிவிக்கும் (Sit-in) முறை மட்டுமே ஆகும்.

அஹிம்சை என்பது காந்தீய இயக்க சரித்திரத்திலும், சித்தாந்தத்திலும் வெறுமே உட்கார்ந்து தெரிவிக்கும் எதிர்ப்பு அல்ல. அஹிம்சைக்கு ஒரு அதிவேக (Dynamic) குணமுண்டு. இந்த அதிவேக குணம், எவ்விதமான சரீர உபாதையையும் பூரணமாக மெளனத்துடன் தாங்குவதாகும். இத்தகைய அஹிம்சைப் போராளிகளை காந்தீய இயக்க சரித்திரத்தில் நாம் சந்திக்கவே செய்கிறோம். சரீர தளத்தில் உபாதையைத் தாங்குவது, மரணத்தை வாழ்விலிருந்து பிரிக்காத விவேகத்தைப் பிரதிபலிப்பது. வாழ்வு என்பது மரணத்தை ஊடுருவி ஜீவிதம் கொள்கிற இயக்கம் என்பதை உணராதவன் அஹிம்சா வாதியாக முடியாது. ஆனால் ‘அஹிம்சை கெளரவத்துக்கு உரிய ஆயுதம். அஹிம்சாவாதியை யாரும் சீண்ட மாட்டார்கள்’ என்ற குருட்டு நம்பிக்கையில் நடக்கும் இயக்கம், அஹிம்சையை கற்பனாதீத (ரொமான்டிக்) கண்மூலம் கண்டதன் விளைவு. இத்தகையவர்கள் காலிப்பட்டாளத்தின் அடியைத் தாங்காமல் ஓடிப்போய் நின்று, “நாகரிகமற்ற இவர்களுக்கு அஹிம்சையின் அருமை தெரியவில்லை” என்று கூறுவது அதைவிட அப்த்தம். அஹிம்சைப் போராளி சாவை நோக்கி மட்டுமே நிற்கிறான். சாவு நாகரிகமானதுமல்ல, அநாகரிகமானதுமல்ல. சாவும் உபாதையும் எவரால் நிகழ்கின்றனவோ அவரை நிந்தனைகூடச் செய்யாமைதான் அஹிம்சையாகும்.

பாமரரான இந்திய வம்சத் தொழிலாளிகளுக்கு நடந்த ஓட்டுரிமைப் பறிப்பின்போது கிளர்ச்சி பெற்றிராதவர்கள், தங்களுடைய கெளரவமான மத்தியதர வர்க்க வாழ்வின் உபாயம் பறிக்கப்பட்டபோது மட்டுமே கிளர்ச்சி பெற்றனர் என்றுதான் நாம் மேலே நிகழ்ந்த அஹிம்சைப் போரைக் கணிக்க முடிகிறது. இவ்வித கணிப்பின் மூலம் நாம் இந்த இரண்டாம்கட்ட பறிமுதலை நியாயப்படுத்தவில்லை. ஒவ்வொரு பறிமுதலுக்கும் எதிராகச் செய்யப்பட்ட கிளர்ச்சிகளின் வலுவின்மை ஆரம்ப கட்டத்திலிருந்தே தர்க்கபூர்வமாகத் தொடர்வதைக் காட்டவே இதனைக் குறிப்பிடுகிறோம்.

முதல் பறிமுதல் நிகழ்ந்தபோதே கிளர்ந்திருக்க வேண்டிய இந்தியவசத் தொழிலாளர்கள் ஏன் சும்மா இருந்தார்கள் என்று கேட்பது அரசியல் விழிப்புக்குரிய மனோபாவங்களை உணராத கேள்வியாகும். முதன்மையாக அவர்கள் இயக்கரீதியாகத் திரள்கிற சகல பாதைகளும் அடைக்கப்பட்ட நிலையிலிருந்தவர்களாவர். இத்தகையவர்கள் எழுச்சிபெற்றால் சாவை நோக்கி பிசகாமல் நடக்கக் கூடியவர்களாகிவிடுவர். இந்த ரகஸியம் காந்திக்கு வசப்பட்டிருந்தமையால்தான், தமது ஆடை முதற்கொண்டு சகல அடையாளங்களையும் அவர்களது அடையாளங்களுடன் ஐக்கியப்படுத்தினார். இதன் நேரடி விளைவாக அவரது தலைமை அவர்களினால் உணரப்பட்டது; அவரது இயக்க சக்தியின் தொடர்நிலையாக அவர்கள் ஆயினர். எனவே அடிகட்ட மனிதர்களின் எழுச்சியினைத் தூண்டி ஒருமுகப்படுத்த உயரிய தலைமைப்பண்பு வேண்டும். வெற்றுக் கவர்ச்சி சிதறி அழிக்கப்பட்டுவிடும்.

-ஸ்ரீலங்காவின் தேசீயத் தற்கொலை