04 June 2011

இப்படி ஒருவர் இருந்தார் - எல்லாமாக

(கடிதத்தின்) நகல்

அன்பான ராமசாமி,
13.06.86

தங்களுக்குக் க்டிதம் எழுதி அநேகமாக ஒரு மாதம் ஆகிறது என நினைக்கிறேன். இந்த ஒரு மாதத்தில்தான் எத்தனை ஏற்ற இறக்கங்கள் எனக்குள்.

பயணம் முடிந்து வந்ததும் முதல் பதினைந்து இருபது நாட்கள் மிக சந்தோஷமாய் மனம் தக்கையாய் மிதந்து கொண்டிருந்தது. ஒன்றும் தேவையற்ற சந்தோஷம். செய்ய ஒன்றுமற்ற சந்தோஷம். இப்படியான நிலை எனக்கு மிகவும் புதிது. மெல்ல நடந்து தனித்திருந்து காபி குடித்தபடி, பரபரக்கும் உலகத்தைப் புகாரின்றி பார்த்துக் கொண்டிருந்தேன். பெருமளவிற்கு எண்ணங்கள் கருத்துகளின் தப்புதலற்ற பிடியிலிருந்து மெல்லத் தளர்த்திக் கொண்ட இளைப்பாரல். அந்த மனநிலையில் வசந்தகுமாரின் உற்சாகம் கூட ச்ற்று அசட்டுத்தனமாய்ப் பட்டது. அவனது காரியம் மட்டும் என்ற அளவில் இருந்திருக்குமெனில் எனக்கு எந்த அபிப்ராயமும் தோன்றியிராது. ஆனால் படிக்கட்டில் உட்கார்ந்து பராக்குப் பார்க்கிறவனை உற்சாகக் குளத்தில் நீயும் குதி என்ற மறைமுக வற்புறுத்தலைக் கொண்டிருந்தது அவன் பாங்கு.

தனித்துவம் என்பது முட்டி மோதிப் போராடித்தான் கிடைக்கிறது எனினும் அது சற்றே சுயப் பிரக்ஞையற்ற பாதை என்றே தோன்றுகிறது. தனித்துவத்திற்கான பிரக்ஞைபூர்வ முயற்சியின் முடிவு, என்னதான் அசல் எனத் தோற்றமளிக்கும்படி திறமையின் நேர்த்தி ஏறியிருப்பினும், ஒட்டுதாடி மீசை ஒரு சமயமில்லை எனினும் இன்னொரு சமயம் இயல்பான தருணத்தில் இளித்துக் காட்டிக்கொண்டு விடுகிறதைப் போல முடிந்து விடுகிறது.

எனவே சில நாட்களுக்குப் பின் பழைய இயல்பின் பாதி தூரத்திற்குத் திரும்பி வந்தேன். இந்தத் தருணத்தில் இயல்பாகவே எழுதுவதில் எனக்கிருக்கும் கனவு ததும்பும் ஆர்வம் காரணமாய் கட்டுரைகள் எழுத சற்றே நப்பாசையுடன் இசைந்தேன்.

எழுத்திற்கு பெருமளவிற்கு உள்ளுணர்வே வழிகாட்டி. ஆனால் கட்டுரைகளைப் பொருத்தவரை உள்ளுணர்வு மட்டுமே போதுமானதாக இல்லை என்பது பிரத்யட்சமாய்த் தெரிந்துவிட்டது. 

கட்டுரை சிந்தனையின் கட்டமைப்பில் எழுந்து நிற்கும் கோட்டை. கதை கடற்கரை. நிற்பவர் நிற்கலாம், ஓடலாம், ஏற்கெனவே எத்தனையோ பேர் நடந்து முடித்திருந்தாலும் இனி வரும் குழந்தைகளுக்கும் அது எல்லையற்ற காலமற்ற நவீனத்துவத்துடனேயே இருக்கிறது. எனில் எளிது என்ற அர்த்தத்தில் அல்ல, எனினும் கோட்டையைக் கட்டவும் ஆளவுமான வலிமை கடற்கரைக்குக் கட்டாயமில்லை. இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம்.

அனுபவத் துணுக்குகள் திரண்டு பார்வை உருக்கொள்கிறது. பார்வையின் வழியே திரும்பவும் வாழ்க்கையைப் பார்க்கையில் எண்ணங்கள் உருவாகின்றன. எண்ணங்கள் திரண்டு கருத்தாகவும் தத்துவமாகவும் பரிணமிக்கின்றன. இந்த முழு ப்ராசஸிற்கும் சிந்தனை என்று பெயர் கொடுக்கப் பட்டிருக்கிறது என்று தோன்றுகிறது. 

ஆரம்பத் தாக்கங்கள் விலகி தனித்த பார்வை கூடுகிறது. இதுவே பெரிய காரியம்தான் நமது குருட்டுச் சூழலில். ஆனால் இது அடிப்படை மட்டுமே. புதிதாக அன்றி ஏற்கெனவே இருக்கும் எண்ணங்கள் கூட புதிய கோணத்தில் பார்க்கையில் புதிது போன்ற லகரியை ஊட்டுகின்றன. எண்ணத்தைக் கருத்து நிலைக்கு உயர்த்தத்தான் படாதபாடு படவேண்டி இருக்கிறது.

இதில் குறிப்பாக என் சரிவு ஆரம்ப நிலையிலேயே வந்து விட்டது. ஏற்கெனவே இருக்கிற பார்வையில் ஏற்கெனவே இருக்கிற எண்ணங்களைத்தான் என்னால் சொல்ல முடிந்தது. எனில் அது எப்படி என்னுடையது? பார்வையும் எண்ணமும் பரந்த அளவில் இல்லை என்பதால் என்னுடையதாகி விடாதே. இதுதான் பிரச்சனை. போதக்குறைக்குப் பேச வந்த விஷயத்திலும் எனது போதாமை பட்டவர்த்தனப் பட்டுவிட்டது. 

இந்த இடத்தில்தான் பரந்த படிப்பறிவு கட்டுரையாளனுக்கு தவிர்க்கவியலா அவசியமாகிறது. வெவ்வேறு கோணங்களில் இருந்து எழுந்த எண்ணங்களைத் தன் பார்வையில் ஏற்று அதன் மூலம் செழுமையுற்ற தன் பார்வையுடன் அணுக்வேண்டிய அவசியம் புரிகிறது.

உள்ளுணர்வற்ற படிப்பறிவு லென்ஸ் இல்லாத ஃப்ரேம். படிப்பறிவும் உள்ளுணர்வும் கூடப்பெற்றவனுக்கும் வெளிப்பாடு பெரும் பிரச்சனை. இதை ஓரளவிற்குப் பயிற்சியின் மூலம் சரிப்படுத்திக் கொள்ளலாம் எனினும் ஓரளவிற்குத்தான்

பேச்சிலும், ஓரளவிற்குக் கடிதத்திலும், திடுமென கிளம்பும் பொறிகள் நிலையற்ற அந்தத் தருணத்திற்கான பரவசத்தைத் தந்து வெற்றி பெற்றுவிட முடியும். கட்டுரை எனக்கு சாத்தியமில்லை என்பதை ஸ்தூலமாகத் தெரிந்து கொண்டேன். எப்படியோ ஏதோ ஒன்று தெரிய வந்ததே அதுவரை சந்தோஷமே.

அன்புடன்
மாசுந்தர ராமசாமி
நாகர்கோவில்
20.6.86.

அன்புள்ள மாமல்லன்,

உங்கள் 13.6.86 கடிதம். உங்கள் முன் கடிதத்துக்கும் என் பதிலை - சுருக்கமாக - என் அசெளகரியத்தைத் தெரிவித்து - எழுதி இருந்தேன். அந்தக் கடிதம் உங்களுக்குக் கிடைக்கவில்லையோ என்ற சந்தேகம் வருகிறது, இந்தக் கடிதம் படிக்கும்போது.

பயணம் முடிந்தபின் ஒரு ஏற்றம் இருந்தது போல் ஒரு இறக்கமும் பின்னால் ஏற்படும் என்று அனுமானித்து இருந்தேன். சுமார் மூன்று நான்கு வாரங்களுக்கு முன் எழுதிய ஒரு சிறு கட்டுரையில் - பயணத்தின் போது நீங்கள் எனக்கு எழுதிய கடிதத்தின் பகுதிகள்தான் அதில் அதிகமும் - சாகசம் தரும் மனவிரிவு பற்றியும் லெளகீகத்தில் அது மீண்டும் சுருங்கிப் போனது பற்றியும் தொட்டிருக்கிறேன்.

தனித்துவம் பற்றிய உங்கள் கவலைகள் அவசியம் அற்றவை என்று தோன்றிற்று. கட்டுரை பற்றியும் கூட. நீங்கள் உங்கள் இயற்கை படி ஊக்கமாகவும் உற்சாகமாகவும் செயல்படும்போது உங்களை அறியாமலேயே உங்களுக்கான சம்பத்துக்கள் உங்களிடம் சேர்ந்துகொண்டுதான் வரும். அதில் துளியும் சந்தேகமில்லை. புற உலகின் களங்கங்களை ஏற்க மறுக்கும் உண்மையின் அடிக்குரலுக்கு விடாமலும், நிர்பந்தமாகவும், சமரசமின்றியும் இடம் தந்து கொண்டு போவதைத் தவிர வேறு தேர்வு ஒன்றுமில்லை. இயற்கையாகக் கொள்ளும் அனுபவங்கள் மூலமும் உண்மை மீது கொள்ளும் வெறியினாலும் இந்த அடிக்குரல் எண்ணற்ற வெளிச்சங்கள் கொள்ளும். அவற்றின் சுகந்தம் நம்மையும் சந்தோஷப்படுத்தி - இடைக்காலத்தில் பல சங்கடங்களளைத் தந்தாலும் - இறுதியில் பிறரையும் சந்தோஷப்படுத்துகிறது. மனநிறைவு கொள்ளச் செய்கிறது.

மூன்று முக்கியமான காரியங்களில் ஈடுபாடுள்ளவராக இருக்கிறீர்கள் என்பது தெளிவு. ஒன்று: படைப்பு. இரண்டு: மேலான புத்தகங்களைத் தமிழிலும் ஆங்கிலம் வழியாகவும் படித்தல். மூன்று: பார்வைக் கலைகளிலும் நுண்கலைகளிலும் உள்ள அக்கறைகள். இவை இயற்கையாகக் கூடி நிற்கின்றன. இவற்றின் வழியாகவே வெகுதூரம் போகலாம். வெகு தூரம். நொள்ளைக் கட்டுரைதான் எழுத வேண்டும் என்பது இல்லை. நிம்மதியாக இருங்கள்.

மோகனுக்கு நான் ஒரு கடிதத்தின் நகலை அனுப்பி இருந்தேன். அதை நீங்களும் படித்துப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு உண்டு.

அன்புடன்
சுரா.