24 June 2011

இயற்கையின் காவியம்

ஏற்றுமதி செய்யப்படும் கண்டெய்னருக்கு, மாதிரிப் பரிசோதனைக்குப்பின் கதவை மூடி இறுதி முத்திரை வைப்பதற்காகத் தொழிற்சாலைக்கு செல்லவேண்டி இருந்தது. வாடிக்கையாளர்கள் கேட்கும் வடிவில் க்ரேனைட்டில் கல்லறைக் கற்களைத் தயாரித்து அயல்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தொழிற்சாலை. முழுமையடைந்த கற்பலகைகள் கண்டெய்னரில் ஏற்றுவதற்கான இறுதிக்கட்ட பேக்கிங்கில் இருந்தன. வேலை முடிய கொஞ்சம் நேரம் எடுக்கும் போல் தெரிந்தது.

பராக்கு பார்ப்பதுதானே வாழ்வின் தலையாயப் பணி.

எந்தத் தொழிற்சாலையிலும் அரசு அதிகாரிக்கான இடம் ’அலுவலக அறை மட்டுமே’ என்றாகிவிட்ட காலம். டீ காபி ஜூஸ் என்று உபசாரக் குளியலில் நனையல். ஆனாலும் பலருக்கு அது ஈரமாக, ஏன் ஓதமாகக்கூடப் படுவதில்லை.  இது என்ன பெரிய சமாச்சாரம் என்கிற பாவனையில் விட்டேத்தியாய் இன்னும் இன்னும் என எருமை மாட்டுக் குளியலுக்குத் தோலைத் தேய்த்துவிட வாகாகத் திரும்பிக் கொள்ளும் முதுகுகள். அமர வைத்த இடத்தில் ஆசனத்தை அசைக்காதவன் தொழிற்சாலை நிர்வாகத்தைப் பொறுத்தவரை நல்ல அதிகாரி.

சும்மா பராக்கு பார்த்தபடி சுற்றி வருவதன் மூலம் மட்டுமே ஒரு தொழிற்சாலையின் உள் இயக்கங்கள் பற்றியப் பல விஷயங்கள் பிடிபடும். முதற்கை அனுபவமாய் மனதில் பதியும். 

தொழிற்சாலையைச் சுற்றிப்பார்ப்பதென்று கிளம்பினால்,மரியாதைக்கு வருவதான பாவனையில் கூடவே துணை வரும். காட்ட வேண்டியது மட்டுமே காட்டப்படும். குறிப்பாக அந்த நிறுவனத்தின் வரித்துறை ஊழியர் நிழலாகத் தொடர்வார். அவர் ‘அனுபவ’சாலியாக இருந்தால் அளந்து பேசுவார். அதிகாரி கூர்மையானவர் எனில் முடிந்தவரை அவரைத் தவிர்க்கப் பார்ப்பார். பொறியியலாளருடன் அல்லது இயந்திரங்களை மேய்க்கும் தொழில் வல்லுனர்களிடம், யாருமே கிடைக்கவில்லை எனில், அந்தஸ்து பார்க்காமல் இயந்திரங்களின் நீட்சியாய் நிற்கும் தொழிலாளர்களிடம் வாயைக் கொடுப்பார்.  பிரதான வாயிலில் இருந்து என்னென்ன பொருட்கள் உள்ளே வந்து எவ்விதமாய் உருமாறி இறுதிப் பொருளாகி பிரதான வாயில் வழியே எப்படி எங்கெங்கு செல்கிறது என்று அச்சுப் பிச்சு தோரணையில் இடையிடையில் சம்பந்தமே இல்லாமல் கேள்விகள் இட்டுச் செல்லும் பாதையின் முன் தடத்தை ஊகிக்க விடாமல் கலைத்தபடி எதிராளியின் வாயைப் பிடுங்கிக் கொண்டிருப்பார். சுற்றிலும் எழுந்து உழன்றுகொண்டிருக்கும் இரைச்சல் புழுதியைப் பொருட்படுத்தாது தகவல்களையும் சூழலையும் தரவுகளாக கிரகித்துக் கொண்டவண்ணம் இருப்பார். தகவல்கள் தன்னிச்சையாய் சேகரப்பட்டுக் கொண்டிருக்கும். வில்லங்கமான கேள்விகள் கேட்கப்படுகிறதோ என்கிற சந்தேகமே, அடுத்த முறை பிரதான கேட்டை மூடவைக்கும் பூட்டு. எனவே அங்கிருக்கும் வரை ’பாவம் பாராக்குப் பார்க்கும் பேக்கு’ போலவே இருப்பதுதான் சாமர்த்தியம்.

முற்றமுழுக்க ஏற்றுமதி நிறுவனம் என்பதால், அறிவிக்கப்பட்ட பொருள் ’மட்டுமே’ கண்டெய்னரில் ஏற்றப்பட்டிருக்கிறதா என்பதைக் கண்காணிப்பது மட்டுமே விதிக்கப்பட்டிருக்கும் அதிகார வரம்பு. 

ஆகவே, அடடா என்ன அழகு என்ன அழகு என கற்களின் அழகு பற்றி அசந்து போய் விதந்தோத, வல்லுனரிடமிருந்து உற்சாகத்துடன் வந்தது விளக்கம்.

உண்மையைச் சொன்னால் இதில் மனிதர்கள் உருவாக்குவது என ஏதுமே இல்லை. இவையனைத்தும் காலங்காலமாக பாறைகளுக்குள்ளே உறைந்திருக்கின்றன. மனித முயற்சி, திறமை மற்றும் அனுபவ முதிர்ச்சி பாறையின் வெளித்தோற்றத்தை வைத்தே உட்சிறப்பை ஊகித்து அடையாளம் கண்ட்டுகொள்வதுதான். பாறையாய் வெட்டிக் கொணர்ந்ததைப் பாளமாய் பலகையாய் அறுத்து மெருகேற்றுவது மட்டுமே எங்கள் வேலை. எட்டு நிலைகளில் படிப்படியாக மெருகேற்றப் படுவதில் உள்ளுறைந்து கிடக்கும் அழகு காட்சிக்குப் புலனாகிறது. பிசிறு எடுப்பதும் ஓரங்களில் வளைப்பதும் தவிர, மனித உழைப்பு பெரிய அளவில் ஏதும் இல்லை.

க்ரானைட் பற்றிக் கேட்டால் இவர் என்ன இலக்கிய உருவாக்கம் பற்றிக் கிளாஸ் எடுக்கத் தொடங்கிவிட்டார் என்று தோன்றியது.

அனுபவத்தில் இருந்தே பிறக்கிறதடா இலக்கியம். உன் அனுபவத்தை நீ ’கண்டு’ அதை அடுத்தவனுக்கு உணரக் காட்டுவதுதானடா இலக்கியம் என்றால், செவ்வாய் கிரகம் பற்றி எழுத செவ்வாய் கிரகத்திற்குப் போவாயா என்கிற சீழ்க்கையடிச் சின்னப்பயல்களின் வெட்டி விவாதக் கேள்விகள் காதைத் துளைக்கின்றன.

செவ்வாய்க் கிரகத்தில் நீ வாழ்ந்தால் எழுது இல்லையேல் மனதால் வாழ்ந்து எழுது. பக்கத்தை நிரப்ப சும்மா புர்ர்ர்ர்ர்ரென்று ஒலியெழுப்புவதென்பது குசுவின் குரல் என்று அறி.

ஜனரஞ்சகக் களைகள் இலக்கிய சூழலில் இல்லை என்று யார் சொன்னது.  இணையத்தைத் தீவிரமான இலக்கியச் சூழல் என்பதும் யார் கொடுத்த சான்றிதழ். இலக்கியத் ’தரம்’ என்பது இருக்கிற இடம் சாந்தததா இல்லை எழுத்தின் வீரியம் சார்ந்ததா?

இரண்டுங்கெட்டான்களுக்கு எழுதப்பட்டதெல்லாம் எழுத்து, எழுத்தைக்கூட்டிப் படிக்க முடிந்ததெல்லாம் இலக்கியம், என்கிற இணையச் சூழலில், ஈயம் பித்தளை செம்பிரும்புத் தங்கம் பிளாட்டினம் என்றெல்லாம் வேறுபடுத்திப் பார்க்கும் விவஸ்தையை எதிர்பார்ப்பது வீணான காரியம்.

வேண்டுமானால் விருது கொடுத்துக்கொள். அதை இலக்கியம் என்றும் கூவிக் கொண்டாடு. இதை எப்படி இலக்கியம் இல்லை எனச் சொல்லப் போயிற்று, இப்போது விவாதித்தால்தான் ஆயிற்று என இணையத்துக் கொசுக்களே சுற்றிச் சுற்றி வராதீர்.

காதுபிளக்கும் விவித ஓசைகளுக்கிடையில் தொழிற்சாலையைச் சுற்றிவந்த போது ஓரிடத்தில் சும்மா படுத்துகிடந்தது இந்தப் பாறைப்பலகை. இதன் சொளந்தர்யம் இந்தத் தருணத்தில் வெளிப்படுவதற்காக என்றே சுயம்புவாய் கருக்கொண்டு எத்துனைப் பல்லாயிர ஆண்டுகளாய் உள்ளே இருந்ததோ என்னவோ யாருக்குத் தெரியும்?