19 June 2011

கிக்கிரிபிக்கிரி இலக்கியம்

<நீங்க பஸ்ஸு விட்டாலும் கருத்து சொல்லவும் பயமா இருக்கு...முன் ஏரும் இல்லாம பின்னேரும் இல்லாம ஒத்தையா உழுவ முடியாதுங்களே....அதான்> 


எனக்குத் தெரிந்த அளவுக்கு நான் பஸ்ஸு விட்டால் உங்களால முடிந்தவரை நீங்கள் பயணம் செய்யப் போகிறீர்கள். ஏறலாமா கூடாதா என்றெல்லாம் யோசித்துக் கொண்டே இருக்க வேண்டுமா? 

ஆரம்பத்தில் உளறாமல் கிறுக்காமல் ஆளாக முடியுமா? எத்துனை பேரால் உதாசீனப் பட்டிருப்பேன் என்று எனக்குதானே தெரியும். உங்களில் பெரும்பாலோருக்கு இல்லாததும் எனக்கு இருந்த அனுகூலமும் என் வயது. ஆளாகும் முன்னால் ஈகோ முண்டிக்கொண்டு நிற்காத 19-20 வயது. ஆளுமைகள் திட்டினால் உடைந்து மனதிற்குள் வதங்கி அழுது இன்னார் இப்படிச் சொல்லிவிட்டாரே என்று, சற்று காருண்யத்துடன் பழகும் இன்னொரு ஆளுமையிடம் போய்ப் புலம்பி, 

அட விடுங்க மாமல்லன், அந்தாளு அப்படித்தான் சமயத்துல சள்ளுபுள்ளுனு பேசிடுவாரு, 

என்கிற பதிலால் கண்துடைத்து எழுந்து நின்ற தருணங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. நாம் அச்சு பிச்சென உளறத்தான் செய்திருக்கிறோம் அதன் காரணமாகவே சீதனம் கிடைத்திருக்கிறது என்பதை உணர அதிக நாள் பிடிக்கவில்லை. அதை உணரத்தலைப்பட்டதும் ஆறுதல் தேடவேண்டிய அவசியம் அருகத் தொடங்கியது.

மிகக் குறைந்த கால அவகாசத்திலேயே எனக்கு முக்கியமாகப்பட்ட எழுத்தாளர்கள், நான் சொல்வதையும் பொருட்படுத்திக் கேட்கத் தொடங்கியதில் தன்னம்பிக்கை முளைத்துக் கிளைக்கத் தொடங்கிற்று. கூடவே ஆணவமும்.

மிகச் சாதாரண காரணங்களால் சிலரைத் துச்சமாக நினைத்து நடத்தி இருக்கிறேன். வாழ்வு மசுரெல்லாம் முக்கியமில்லை. இலக்கியம் எழுத்து அறிவு கலைதான் முக்கியம். மடையன்களோடு நட்பு கொண்டிருந்தால் கலாரீதியாகவோ அறிவுரீதியாகவோ நாம் வளர முடியாது. உச்சத்தை அடைய முடியாது என்கிற - ஓரளவிற்கு உண்மையும் உள்ளடக்கிய - மூடத்தனம் காரணமாய் மூர்க்கனாய் நடந்து கொண்டிருக்கிறேன். என் கணிப்புகள் தவறியும்கூடத் தவறாக முடியாத அளவிற்கு என்னைக் கூர்மைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்கிற காட்டுமிராண்டித்தனமான மோகம். எனக்கு முக்கியமற்றவனாகத் தோன்றியவன் ஒரு நாளும் முக்கியமான காரியங்களை செய்துவிட முடியாது என்கிற என் மூளையின் மீதான அதீத கர்வம். இது இரண்டு மூன்றுமுறை இடறிய நேரங்களில் உள்ளுக்குள் நான் உடைந்து நொறுங்கியது எனக்கு மட்டுமே தெரியும். என் கணிப்புப் பொய்யாவது என்னுள் ஏற்படுத்தும் அவமானம் எவனொருவனாலும் கனவிலும் எனக்கு இழைக்க இயலாதது.

எம்.டி.முத்துக்குமாரசாமி ஸில்வியா என்ற பெயரில் எழுதிய குறுநாவல் அல்லது நெடுங்கதை படித்து ஆடிப்போனபோது, எப்படி இவனிடம் இதை எதிர்பார்க்காமல் இவனைப் பொருட்படுத்தாமல் போனோம் என்று உள்ளூர நொந்து போனேன். காரணம் மிக எளிது. புத்தக அறிஞர்களைப் பொதுவாக என் மனம் புறக்கணித்துவிடும். எப்போதாவது இப்படியான ஜோல்ட் கிடைக்கும்.

நிமல விஸ்வநாதன் கணையாழியில் பழக்கப்பட்ட பெயர் சுகுமாரன் வழியே அறிமுகமான நபர். பார்த்த முதல் தருணத்திலேயே மென்மையான பேச்சு உயர்ந்த படைப்புகள் பற்றிய உத்வேக சிலாகிப்பு என மனதிற்கு நெருக்கமானான் எனினும் காசி படித்துக் கலங்கியபோது உள்ளூர உடைந்தேன். எப்படி எப்படி எங்கே தவறியது என் கணிப்பு?

பத்தோ பதினொன்றோ படித்துக் கொண்டிருந்த ஆர்வக்கோளாறு என்று மனதிற்குள் புறந்தள்ளிய சலபதிக்குள் பேராறு சலசலத்துக் கொண்டிருந்தது பிடிபடாமற்போய் ஆ.இரா.வெங்கடாசலபதியானவரிடமிருந்து கிடைத்தற்குப் பெயர் அடியல்ல இடி. 

ஆளெனக் காட்டி ஆர்ப்பரித்த பலர், எவர் போடும் பட்டியலிலும் தலகூடக் காட்டமுடிவதில்லை.

அன்றைய சிறுபத்திரிகை சூழலுக்கும் இன்றைய இணையவெளிக்கும் உள்ள முக்கியமான வேறுபாடு, படைப்பாளியுடனான நேரடித் தொடர்பு. அநேகமாக, அந்த காலகட்டத்தில் வாழ்ந்துகொண்டிருந்தும், நான்நேரடியாக சந்திக்காத ’முக்கியமான’ ஆளுமை மெளனி மட்டுமே. அவர்களில் எவருமே தங்களைத் தனிப்பெரும் ஆளுமையாக சொல்லிக்கொண்டவர்கள் இல்லை. வாசகனை உணர வைத்தவர்கள். தங்களின் அருமைபெருமைகளைத் தாமே விதந்தோதி வாசக மனத்தைக் கட்டுப்படுத்தியவர்கள் அல்லர். சொன்னதெல்லாம் சூத்திரம் என்று நம்ப சிறுபத்திரிகை வாசகனும் சொந்த புத்தியற்ற உடுக்கடி சாமியாடி அல்ல. 

தமிழின் சாதனையாளர்கள் எவருமே இணையத்து முப்பெரும் காமெடியர்கள்போல் பொழுதுபோய் பொழுதுவிடிந்தால் நான் நான் நான் என்று காது அற கம்பீர ஒப்பாறி வைத்துக் கொண்டிருந்தவர்கள் இல்லை. 

முப்பதைத்தொட்ட வயதில்தான் அட்சராப்பியாசம். அதுவும் குட்டிச்சுவரில்தான் ஆரம்பம். கிளியும் குயிலும் கூட கிக்கிரிபிக்கிரி என்று இலக்கியம் பேசுவதில் என்ன ஆச்சரியம்?