26 June 2011

ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது பறை!

கட்டியக்காரிகள் நிகழ்த்திய பாமாவின் மொளகாப் பொடி

நாடகம் முடிந்து நான்குமணி / ஆறுமணி நேரமாகிவிட்டது. ஆனால் இன்னமும் உள்ளே அதிர்ந்து கொண்டிருக்கிறது பறையின் உன்மத்தம் உண்டாக்கிய ஒலி.


தனியாட்சி நடத்தும் பண்ணையம்மாவைத் தட்டிக் கேட்கத் துணியும் கூலிக்குப் புல்லறுப்பவளின் கதை. நடப்புகள் ஆசைகள் கெடுபிடிகள் எதிர்ப்புக்குப் பழிவாங்கல் கஞ்சிக்குக் களவு களவுக்கு தண்டனை என்று போகிற கதை. 

கதைச்சுருக்கமாய்ச் சொன்னால் உப்புசப்பு கூட இருக்காது. சுருக்கத்தில் அனுபவத்தின் சுவடுகூடக் கிட்டாது. நாடகத்தின் உயிர், கதாபாத்திரங்களாக மேடையில் அல்லவா துடித்துக் கொண்டிருக்கிறது. 

கெங்கம்மாவைக் கேள்வி கேட்கும் பச்சையம்மாவாக வரும் லிவிங் ஸ்மைல் வித்தியாவின் ’அறிமுகத்தை’த் தாமதமாகப்போய் தவறவிட்டீர்கள் என்றால் இன்னொருமுறை நேரத்தில் போய் பார்த்தால்தான் இழந்தது என்ன என்று புரிபடும்.

வளைவு மூங்கிற்பாலம் பின்னணியில் இருக்க, லாந்தர் ஏந்திய கரங்களுடன் ஆண்களும் பெண்களும் அரங்கிற்குள் வரும்போதே பின்னணிப் பறையொலியில் சென்னை மாநகரத்தின் மேட்டுக்குடிப் பகுதியான பெஸண்ட் நகரும் பீச்சும் மறைந்துவிட்டன. கண்ணெதிரில் இல்லாத காடும் புல்லறுப்பும் பருத்திப் பறிப்பும் எனக் காட்சிமேல் காட்சியாய் மனித உடல்வீச்சின் விகசிப்பால் மனதிற்குப் புலனாகிறது.

ஏழெட்டுப் பெண்களைச் சுற்றி செவ்வக வடிவில் கட்டப்பட்ட கயிறு டிராக்டர் ஆக முடியுமா? மூன்று மூலையில் கயிற்றை இடுப்பில் உரசியபடி நின்று அதட்டிக்கொண்டிருக்கும் தடியும் தொப்பியும் போலீசாகி, கயிற்று வளையத்திற்குள் உட்கார்ந்திருக்கும் பெண்கள் குலுங்கியபடி அங்கலாய்க்கக் கண்ணெதிரில் டிராக்டர் உயிர்க்கிறது. பூசப்பட்ட பெளடரில் அல்ல, உள்ளிருக்கும் ஆன்மாவின் நரம்பில் இருக்கிறது நடிப்பின் வசியம். 

பண்ணைக்காரியின் மாடி வீடாகக் காட்டப் போடப்பட்ட திரையின் உயரத்து  சட்டகத் திறப்பில் அமர்ந்திருக்கும் கெங்கையம்மா மற்றும் அரங்கின் குறுக்காய் கருப்பு வெள்ளைத் திரையை இழுத்துவிட்டு கருப்புப்பகுதியின் துளைகளில் துருத்திய முகங்களின் வசனங்கள் ஆகியவை மனித உடல்களை மட்டுமேப் பக்கங்களாய்க் கொண்டு படைக்கப்பட்ட சிறந்த புத்தகத்தின் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டிய எழுத்துப் பிழைகள்.

இப்படி அப்படி அசையவிடாமல் உங்களை இது ஒரு மணி நேரத்திற்குக் கட்டிப் போடவில்லை என்றால் தாராளமாய் வந்து என்னைத் தப்பி விட்டுப் போகலாம். 

நகரத்தின் நைச்சிய நாகரீகப்பூச்சு அற்று கிராமத்தின் நேரடி மொழி எழுத்துப் பயிற்சியால் அல்ல வாழ்ந்ததால் வருவது. வாழ்வின் வேரோடு வேரடி மண்ணோடு பிடுங்கி எடுத்ததன் சூட்டோடு இருக்கிறது எதிரில் நிகழ்கிறது நாடகம். எளிய மனிதர்களின் இயல்பான கெட்டவார்த்தைப் பிரயோகங்களைக் கேட்டு இன்புற விரும்புவோர் தவறாமல் காணவேண்டிய நிகழ்ச்சி. மனதிற்கு நெருக்கமாய் உணர்வதற்கு இது இன்னுமொரு காரணம்.
மொளகாயோ மிளகாயோ சாரத்தில் சமரசம் இல்லையெனில் ஒருபோதும் காரத்தில் குறையாது.