19 June 2011

கடவுள் நமக்கு நண்பன்

பொதுவாக பிறந்த நாள், பண்டிகைகள் தன்னார்வத்துடன் கொண்டடுவதில்லை. ஃபேஸ்புக்கில் தவறான தினத்தில் வாழ்த்தியவரை திருத்தப் போய் மாட்டிக் கொண்டேன். பிறந்த தினம் அம்மாவின் நினைவிலும் அதன்பிறகு மனைவியின் நினைவிலும் மட்டுமே இருந்துகொண்டு இருக்கிறது. புதிது போடாமலும் வித்தியாசமாக ஏதும் செய்யாமலும் இருப்பதால் அலுவலகத்திலும் நன்பர்கள் மத்தியிலும் தேதி தெரிந்தாலும் அவர்கள் நினைவில் மேலெழும்பாது கடந்துவிடும்.


ஏழாம் எட்டாம் வகுப்புகளில் பாண்டிச்சேரியின் நடராஜர் கோவிலில், ”அகஸ்த்ய உவாச ஹயக்ரீவ தயாசிந்தோ பகவன் சிஷ்ய வத்சல...” என்று தொடங்கினால் முடித்துதான் நிற்கும் அளவிற்கு மனப்பாடம் ஆகி இருந்தது. வற்றிய நதியின் வண்டலாய் தற்போது நினைவில் இருப்பது மேற்கண்ட வரி மட்டுமே! 

ஒன்பதாம் வகுப்பில் ‘கடவுள் இல்லை இல்லை இல்லவே இல்லை என்கிற கடவுள் வாழ்த்துடன் வகுப்பைத் தொடங்கும் தமிழாசிரியர் நாமதேவன் என்கிற திமுகவின் இலக்கிய அணியின் பொறுப்பில் இருந்த அரிமதி தென்னகன் எதிர்த்து நின்றவன், பத்தாம் வகுப்பு படிக்கையில் பழைய காங்கிரஸ்காரரான ஆர் சுப்பிரமணியன் என்கிற இரா.திருமுருகனால் நாத்திகனானேன்.

தீபாவளி போன்ற விசேஷ நாட்களில் குளிக்காமல் புதிது போடாமல் முரண்டி, அடிவாங்கி கருப்பு சட்டை போட்டு பெருமிதத்துடன் திரிந்த நாட்கள். பின்னாளில் கருப்பும் ஒரு கலர் என்றானது.

கல்லூரி காலத்தில், ஆறு பெண்கள் புடை சூழ தெருவில் நடக்கும் வாய்ப்பு கிடைக்கிற போது, கோவிலுக்குப் போவது கொலைக் குற்றமா என்ன? உதவிக்காக இரண்டாம் தாரம் மணந்த பெரியார் இதைக்கூடப் புரிந்துகொள்ள மாட்டாரா? ஆகவே டூபைடூவில தைத்த ஜிப்பாவுடன் கபாலி கோயில் ஆலயப்பிரவேசம். (தீபாவளிக்கா? பிறந்த நாளுக்கா? பத்மாவுக்காவது நினைவிருக்குமா?) திருவல்லிக் கேணியில் இருந்து கிளம்பும்போது, கூடவே வந்த பள்ளிப் பொடியனைப் பார்த்து, இவன் வேறு எதற்கு என்று செம கடுப்பு! ஏதோ பாரதி பாரதி என்று பினாத்திக் கொண்டு இருக்கிறான் சலபதி என்று அலட்சியமாக இருந்தேன். பின்னாளில் அண்ணாந்து பார்க்கும் அளவிற்கு ஆராய்ச்சியாளனாகப் போகிறேன் என்று அவன் அப்போது சொல்லவே இல்லை. அவர்தான் ஆ.இரா.வேங்கடாசலபதி.

அந்த ஒருமுறை தவிர புதிது போடும் சில விலகல்கள் வழுக்கல்கள் சிநேகிதிகளுக்காக எப்போதேனும் நடந்ததுண்டு. அன்பிற்காக விட்டுக் கொடுப்பதெல்லாம் ”சமரசமா? இல்லையா?” என சட்டை கிழித்துக் கொள்ளும் அளவிற்குத் தத்துவக் கொள்கைப் பிரச்சனைகளா?

பல வருடங்களுக்குப் பின், பாய் சாமியாரின் பழக்கத்தால்,கடவுள் இருக்கலாமோ என நம்பத் தொடங்கி, கடவுள் அருளால், அந்த சூஃபி சாமியார் டுபாகூர் என்று தெரியவந்து, சங்கிலி வளையத்துள் இருந்த அவரது கருப்புடை கழன்று அம்மணப்பட்டது. இல்லாத கடவுளை இல்லை என்று நிரூபித்துக் கொண்டு இருப்பதைவிட, இருப்பதாகக் கற்பித்துக் கொள்வது பல தருணங்களில் அருமருந்தாய் இருப்பதைப் பட்டறிவு கற்பித்தது. நாம் இழுக்கும் கோடு நம் விருப்பப்படி நேர்கோடாய் நீளாமல் சண்டித்தனமாய் வளைந்தும் நெளிந்தும் கொண்டையூசியாய்த் திரும்புகையில் கடவுளின் பெயரால் சுய கவுன்சிலிங்கில் மனதைத் தேற்றிக் கொள்வது நல்லது என்று பிடிபட்டது?

இல்லாத கடவுள் தனிமனித மனதிற்குள் வாழ்வதில் சமூகத்திற்கு என்ன பெரிய சங்கடம் வந்துவிடப் போகிறது? எதன் பேராலும் கூடும் கும்பலே எல்லாப் பிரச்சனைகளுக்கும் காரணம். கும்பலாய்க் திரண்டு எதிர்க்காமல் சமூகப் பிரச்சனைகள் ’சரி’ ஆவதும் இல்லை.

ஆசையைத் துறக்கிறேன் பேர்வழி என்று தன்னை அழித்து கடவுளாக ஆக முயல்வது பேராசை இல்லையா? 

கஷ்டப்பட்டுக் கடவுளை நெருங்குவதாய் எண்ணி மதத்தின் பேரால் கட்சியில் ஐக்கியமாகிறோம். மதக்கட்சிகள் முக்தி கிடைக்கும் எனக்கூறி,மனித வெடிகுண்டுகளாக நம்மை மாற்ற முயல்கின்றன.

‘தான்’ அழித்த சரணாகதி நல்லதுதான். ஆனால் எதனிடம் சரண் அடைகிறோம் என்பதுதான் கேள்வி! 

சரி என்னதான் சொல்ல வருகிறாய் என்கிறீர்களா? எல்லாவற்றிலும் எதையாவது செய்தியாய் சொல்லிக்கொண்டே இருக்க நான் என்ன ஜெயமோகன் அவதாரமா? 

அவதரித்த நட்சத்திரம் அடுத்த வாரம்தானாம் (இருவருக்கும் ஜலதோஷம் உடம்புவலி என்பதுதான் இந்த சால்ஜாப்புக்கு மூலகாரணம்) திருவல்லிக்கேணி பார்த்தசாரதிக்குப் பின்புறம் அழகிய சிங்கராய் அமர்ந்திருக்கும் நரசிம்மா! அர்ச்சனைக்கு அதுவரை பொறுத்திரு!