27 March 2011

ஆ அ ஆ..கேப்பியா கேப்பியா தமிழிசைனு இனிமே கேப்பே!



”மச்சி இந்த ஆ...ன்னு ஆரம்பிச்சாலே கடுப்பாயிடுது மச்சி” 


ஷெல்லி, என அலுவலக நண்பன். எனக்கு எட்டு வயது இளையவன். இசையை மூச்சாகக் கொண்டவன். ராஜா, ரஹ்மான் குச்சி ஐஸ் பிரச்சனை இல்லாதவன். ஜானகி சித்ரா ஜேசுதாஸ் எஸ்பிபி ஹரி என நேற்றுப் பாடவந்தவன் உட்பட துல்லியமான அபிப்ராயங்கள் வைத்திருப்பவன். அனைத்திலும் சிறந்தது என ஜாஸ் ப்ளூஸ் மேற்கத்திய சாஸ்திர்ய சங்கீதம் எல்லாம் கேட்பவன். சினிமாக் காதலன். நல்ல இலக்கியப் புத்தகங்களை ஆங்கிலத்தில் படிப்பவன். கிறித்துவ மலையாளி. தமிழ் தெரியும் அளவிற்கு மலையாளம் தெரியாது. உதட்டைக் கதுப்பில் அதக்கியபடி ஞாயிறு மாஸ் குடும்பத்துடன் செல்கிற மிதவாதி. கருத்துத் தீவிரன்.

மொழி புரியாததாலேயே கர்நாடக இசை அந்நியமாகி உள்ளதா? பிராமணக் கும்பலுக்குள் முடங்கிக் கிடக்கிறதா? தமிழில் பாடப்பட்டால் எம்.எஸ்.வி இளையராஜா ரஹ்மான்களின் திரைப் பாடல்கள் போல தமிழரனைவரும் கர்நாடக இசையைக் கேட்கத் தொடங்கி விடுவார்களோ?

எனக்குக் கர்நாடக இசையேத் தெரியாது. எனக்குப் பிடித்த கர்நாடக இசைக்கலைஞர் பெயருக்கு இலக்கியத்தில் இணை பாலகுமாரன் அல்லது ராஜேஷ்குமார் என்றாகிவிடும். 

சூப்பர் நுட்பத்துடன் கர்நாடக இசையை அணுஅணுவாய் ரசிப்பவரின் இலக்கிய ரசனை என் இசை ரசனைக்கு மேலானதில்லை. எனக்கு எல்லா வித்வான்களும் நன்றாகப் பாடுவது போலவே அவருக்கு எல்லா இலக்கியவாதியும் நன்றாக எழுதுவதாகவே தோன்றுகிறது.

இதில் பிரச்சனை மொழியா? மொழி மட்டுமேவா?