14 March 2011

அன்பு வழி - பேர்லாகர்குவிஸ்டு எழுதிய ஸ்வீடிஷ் நாவலுக்கு க.நா.சு முன்னுரை



முன்னுரை

பத்தொன்பதாம் நூற்றாண்டிலே ரஷ்ய இலக்கியத்திலே, அதுவரை ஐரோப்பிய இலக்கியத்தில் தோன்றத ஒரு ஆழம் தோன்றியது-டர்ஜெனிவ், டால்ஸ்டாய், டாஸ்டாவ்ஸ்கி, செகாவ் இவர்களின் நூல்கள் இதற்கு ஒரு சான்று. அந்த ஆழத்துக்கும், பிரான்சு இங்கிலாந்து முதலிய தேசங்களின் இலக்கிய யுக்தி அமைதிகளுக்கும் வாரிசாகத் தோன்றியது போல இப்போது ஒரு எழுபது எண்பது வருஷங்களாக, ஸ்காண்டினேவிய இலக்கியம் எழுந்து பல சிகரங்களை எட்டியுள்ளது. ஸ்காண்டிநேவிய தேசங்களின் இலக்கியம்-அதுவும் முக்கியமாக ஸ்வீடன் தேசத்து இலக்கியம்-இந்த அமைதிகளைஅமோஹமாகப் பெற்று இப்போது ஐரோப்பாவிலே சிறந்த பாஷை இலக்கியங்களில் ஒன்றாக விளங்குகிறது என்று சொல்லிவிட வேண்டும். ஒருவிதத்தில் பார்க்கப்போனால் ஸ்வீடிஷ் இலக்கியம் இந்தியர்களின் மனத்தைக் கவரக்கூடிய அளவுக்கு மற்றைய இன்றைய ஐரோப்பிய பாஷை இலக்கியங்கள் கவர முடியாது என்பது நிச்சயம். அப்படிக் கவராதிருப்பதற்கு ஒரே ஒரு காரணம்தான் எனக்குத் தெரிகிறது. ஸ்வீடிஷ் இலக்கியத்தின் பல சிறந்த நூல்கள் இன்னும் தமிழில் வெளிவரவில்லை, எனினும் ஜோதி நிலையம், தமிழ்ச்சுடர் நிலையம் முதலிய பிரசுரகர்த்தாக்களின் முயற்சியால் சில நூல்கள் வெளிவரத்தான் வந்திருக்கின்றன. இந்த முயற்சியில் ஓரளவு எனக்கும் சந்தர்ப்பம் அளித்தத்து பற்றி இங்கு இந்தப் பிரசுரகர்த்தர்களுக்கு என் நன்றியை நான் தெரிவித்துக் கொள்ளுகிறேன். 

எந்த பாஷையிலுமே நல்ல புஸ்தகங்களைத் தேர்ந்தெடுத்து அவற்றை வாசகர்களுக்கு எட்ட வைப்பது என்பது உண்மையில் சிரமமான காரியமே. நல்ல இலக்கியம் சினிமாவையோ அது போன்ற லக்ஷக்கணக்கான மக்கள் சாதனங்களையோ எட்டுவதில்லை என்பது பிரசித்தமான விஷயம். நல்ல நூல் ஒன்றை உலகில் வாசிப்பவர்கள் நூற்றுக்கணக்கானவர்கள்கூட இருக்கமாட்டார்கள் என்பதும் பிரசித்தமான விஷயம்தான். தமிழ் வாசகர்களுக்கும் மற்ற பாஷை வாசகர்களுக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால் நல்ல நூல் ஒன்றைத் தேர்ந்தெடுத்துத் தேடி வாசிக்க மற்ற பாஷைகளில் நூறு பேர்வழிகளாவது இருக்கிறார்கள். த்மிழில் நூறு பேர்கூட இல்லை என்பது வருந்தத்தக்க விஷயம். தமக்குள்ளே மறைவாகப் பழங்கதைகளும், பழங்கதைகளை ஒட்டிய புதுக் கதைகளும் பேசத் தமிழர்கள் தயாராக இருக்கிறார்களே தவிர, புதிதாக விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆர்வமுள்ளவர்களின் எண்ணிக்கை, அதுவும் இலக்கியத்தில் மிகமிகக் குறைவாக இருக்கிறது. 

இந்தக் குறையைப் போக்க மொழிபெயர்ப்புகள் பெரிதும் உபயோகப்படும். பிற பாஷைகளில் எப்படி எப்படி நாவல்கள் எழுதியிருக்கிறார்கள், எந்தெந்த விஷயங்களை எப்படி எப்படிக் கையாண்டிருக்கிறார்கள் என்று அறிந்துகொள்ள மாட்டேன் என்று கண்களை மூடிக்கொண்டு எங்களூர் வறட்டு ராஜனே ராஜா-வேறு ராஜாவோ மந்திரியோ எங்களுக்குத் தேவையில்லை என்று இருந்துவிடுகிற மனோபாவம் மாறுவதற்கு மொழிபெயர்ப்புகள் பெரிதும் உதவ வேண்டும். இந்தப் பணியை ஓரளவுக்குச் சிறப்பாகப் பல வருஷங்களாக தமிழ்ச்சுடர் நிலையம் செய்து வருகிறது அதில் நான் பெருமை கொள்கிறேன்.

நிலவளம், மதகுரு, அன்னை, அன்னா கரீனா, புத்துயிர், துண்பக்கேணி, கடலும் கிழவனும்-போன்ற நாவல்களின் வரிசையில் இப்போது வெளிவருகிற இந்த அன்பு வழி என்ற நாவலும் இடம்பெறுகிறது. இன்றைய ஸ்வீடிஷ் இலக்கியத்தின் கொழுந்தென்று இதைச் சொல்ல வேண்டும். இருபது நூற்றாண்டுகளாக உலகத்தின் போக்கையே ஒரு குலுக்கு குலுக்கி ஆட்டிவைத்துள்ள கிறிஸ்துவ சகாப்தத்தின், கிறிஸ்துவ மதத்தின் ஆரம்பத்தை, ஒப்பாதவன் ஒருவனின் கண்களின் மூலம் நமக்கு மிகவும் அற்புதமாக அறிமுகம் செய்து வைக்கிறார் பேர் லாகர்குவிஸ்டு. இந்தச் சிறு நாவலுக்கு 1951-ல் நோபல் இலக்கியப் பரிசு அளிக்கப்பட்டது. அதற்கு முன் அந்தப் பரிசுபெற்ற பேராசிரியர்களையும் கெளரவிப்பது போலத்தான் என்று அபிப்ராயம் தோன்றியதில் ஆச்சரியமில்லை. சிறிய அளவில் பிரமாதமான ஒரு கலா சிருஷ்டியை நடத்திவைத்துள்ளார். லாகர்குவிஸ்டு பிற்ந்தது 1891-ல். அவர் பல நாடகங்களும், நீளக் கதைகளும், கவிதைகளும் எழுதியிருக்கிறார். அவர் எழுதிய ஒவ்வொரு பதமும் ஆழம் நிறைந்தது, உணர்ச்சியைத் தூண்டும் சக்தி நிறைந்தது என்று சொல்லலாம். அவருடைய நூல்களில் குள்ளன் என்கிற நாவலும் சீக்கிரமே தமிழில் வர ஏற்பாடாகி இருக்கிறது.

ஆண்ட்ரே ழீடு என்கிற பிரெஞ்சு இலக்கிய மேதை, இதன் ஆங்கில மொழிபெயர்ப்பாலருக்கு எழுதிய ஒரு கடிதத்தில் பின்வருமாறு குறிப்பிடுகிறார். “கிறிஸ்து என்கிற பிரச்சனையை இன்றையத் தேவைக்குத் தக்கபடிச் சித்தரித்திருப்பவர்களிலே இந் நூலாசிரியரை முதல்வராகச் சொல்ல வேண்டும். குருட்டு நம்பிக்கைக்கும், நாஸ்திகத்துக்கும் இடையே உள்ள போராட்டத்தை அதி அற்புதமாக, கலை உணர்ச்சியுடன் சித்தரித்திருக்கிறார் ஆசிரியர். உண்மை உலகுக்கும், நம்பிக்கை சிருஷ்டிக்கக்கூடிய உலகத்துக்கும் இடையில் உள்ள கயிற்றில் வெகு லாவகமாக நடந்து வித்தைகள் பல புரிந்திருக்கிறார் ஆசிரியர்.” இதைச் சொல்லிவிட்டு, ழீடு தொடர்ந்து சொன்னார்; “ஸ்வீடிஷ் பாஷை நமக்கு இந்த மாதிரிச் சிறந்த நூல்கள் பலவற்றைத் தந்திருக்கிறது-தந்துகொண்டுமிருக்கிறது. பண்புள்ளவன் என்று சொல்லிக் கொள்பவன் ஒவ்வொருவனுக்கும் ஸ்வீடிஷ் இலக்கியம் நன்கு தெரிந்திருக்க வேண்டும் என்கிற காலம் சமீபித்துக் கொண்டிருக்கிறது. ஐரோப்பிய இசையிலே, ஸ்வீடிஷ் குரல் தனியாக அழுத்தமாகக் கேட்கவேண்டும் - இனிக் கேட்கும் என்பதில் எனக்குச் சந்தேகமேயில்லை.”

பல இடங்களில் நின்று நின்று சிந்தித்துப் படிக்க வேண்டிய நாவல் இது. பக்கங்கள் அதிகமில்லாவிட்டாலும், வைத்துப் போற்றி நிதானமாகப் படித்து அனுபவிக்கவேண்டிய நாவல். ஒரு தரம் லாகர்குவிஸ்டின் பாரபாஸை அறிந்து கொண்டவர்கள் அவனை மறக்கவே முடியாது என்பது நிச்சயம்.
                                                                                                                             
க.நா.சுப்ரமண்யம்

பதிப்புரை

பாஷாவாரியாக உலகத்துச் சிறந்த நாவல்கள் பலவற்றையும் தமிழில் வெளியிட ஆர்வம்கொண்டு பல வருஷங்களாக நல்ல மொழிபெயர்ப்புகள் பலவற்றைத் தமிழ் வாசகர்களுக்கு நாங்கள் சமர்ப்பித்து வருகிறோம். தொடர்ந்து செய்து வருகிற இந்தக் காரியத்தில் தமிழ் வாசகர்களின் ஆதரவு இன்னமும் அதிகமாக இராதா என்று எண்ணக்கூடிய நிலையில்தான் இருக்கிறது. வரிசையாக எங்கள் நூல்களை வாங்கி தொடர்ந்து இன்னும் பல நோபல் பரிசு நாவல்கள் வெளிவரத் தமிழ் ரஸிகர்கள் ஆதரிப்பார்கள் என்று நம்புகிறோம். 

மொழிபெயர்ப்புகளை மூல ஆசிரியருடைய அனுமதியுடன் வெளியிட்டு வருகிறோம். இந்த அன்பு வழியின் மூல ஆசிரியர் பேர் லாகர்குவிஸ்டுக்கு எங்கள் நன்றியை இங்கு தெரிவித்துக் கொள்கிறோம்.

நல்ல நூல்களைத் தேர்ந்தெடுத்து, அவை வெளியிடுவதற்கு வேண்டிய அத்தனை முயற்சிகளிலும் கை கொடுத்தும் அப்பட்டமாக மொழிபெயர்த்தும் உதவி வருகிற ஸ்ரீ க.நா.சு அவர்களுக்கு எமது இதய பூர்வமான நன்றி.

அ.கி.கோபாலன்.

அன்பு வழி மீள் பிரசுரம் - காலம் பத்திரிகையில் அறிவிப்பு
சினிமா காசு கொடுக்காமல் கையும் கொடுத்ததால்
கானலாய்ப் போன என் கனவு

(மீள் பிரசுரத்தில் முனைந்தேன் என அறிந்ததும் நண்பர்கள் உற்சாகத்துடன் பழைய புத்தகங்களை அள்ளிக்கொண்டு வந்தனர். அவற்றில் ஒன்றுதான் மேலே ஸ்கேன் செய்யப்பட்ட அன்பு வழி)

க.நா.சு அவர்களின் படைப்புகள் இன்று நாட்டுடைமை. உலக எழுத்தாளர்கள் நேரடியாகத் தமிழில் எழுதியது போல் மொழிபெயர்ப்பாளரின் பெயர்கூடப் போடாமல் புத்தகங்கள் பதிப்பிக்கப்படுகின்றன. இன்று அன்பு வழி இரு முறை மீள் பிரசுரம் செய்யப்பட்டும் சுற்றில் இருப்பதாய்த் தெரியவில்லை. 

நல்ல பிரதி ஒன்று கிடைத்தால் இணையத்தில் பிரசுரிக்க ஆசை. இப்போதைக்கு....