24 March 2011

தர்க்கமும் தகவலும் நம்பகத்தன்மையும் - வினவிக் கொள்ளாத வினவு

பாரதி : ஒரு அபலையின் கதை! – சந்தனமுல்லை
//அனாதையாக இருந்த குழந்தையை மருத்துவரொருவர் நுங்கம்பாக்கத்திலிருக்கும் காமராஜ் இல்லத்தை ஒட்டி இருக்கும் சத்யமூர்த்தி பவனில் கொண்டுவந்து விட்டிருக்கிறார்.//

இது சந்தியமூர்த்தி பவன். இடம்: திருவல்லிக்கேணி ஜெனரல் பேட்டர்ஸ் ரோடு. தற்போது திருவிக சாலை.
இது காமராஜர் இல்லம் இடம்: தி.நகர். திருமலைப் (பிள்ளை) ரோடு.

நமக்குத் தெரிந்து, காமராஜர் திருமணம் தவிர்த்தவர். மேலும் அரசியல்வாதியாய் இருந்தும், அவருக்கு இருந்தது இந்த ஒரு வீடுதான்.

<நுங்கம்பாக்கத்திலிருக்கும் காமராஜ் இல்லத்தை ஒட்டி இருக்கும் சத்யமூர்த்தி பவனில்>

அரசியலில் காமராஜரின் குரு சத்யமூர்த்தி என்பதற்காக அவர்களின் பெயர் தாங்கிய கட்டிடங்களும் அருகருகில் இருக்க வேண்டும் என்பது கட்டாயமா? அல்லது இதுதான் கட்டுரையாளரின் சென்னை மாநகரம் பற்றிய பொது அறிவா? தளத்தில் பதிப்பித்த ஆசிரியருக்கும் தெரியாதா? பின்னூட்டப் பேராசான்களும் அறியாததா சென்னை மாநகரம்? பம்மல் பல்லாவரம் கிரோம்பேட்டையோடு நமது வரைபட எல்லை வரண்டதா?

காமராஜர் இல்லத்திற்கும், சத்தியமூர்த்தி பவனுக்கும் இடையில், கிட்டத்தட்ட 4 -5 கிலோமீட்டரேனும் இடைவெளி இருக்கக்கூடும். 

இரு மருங்கும், மோட்டார் பாகங்கள் விற்கும் கடைகளால் கோர்க்கப்பட்ட நெளிந்த மாலையாய் நெரிந்து கொண்டிருக்கும், ஜெனரல் பேட்டர்ஸ் ரோட்டில், அடித்துத் துவைத்துக் கஞ்சியால் விடைத்த வெள்ளை வேட்டிகளின் உறுதியைப் பரிசோதிக்கும் ஆய்வுக்கூடமாய் விளங்குவது சத்தியமூர்த்திபவன். அதற்கு அந்தப் பக்கம் ஆத்தும சரீர சுகமளிக்கும் படங்களை ஒரு காலத்தில் ஓட்டிக்கொண்டிருந்த,பலகாலமாய் மூடப்பட்டிருக்கும் ஜெயப்ரதா தியேட்டரின் கட்டிடம்.  பின்பக்கமோ, இடறினால் இரும்புப் பட்டரைகள் இருக்கும் சந்துகள். இந்தப் பக்கம் ஜிபி ரோடு வளைந்து ஒன்வேயில் ரவர்ஸில் வந்தால் குருதேவ் & கோ விவித பிராண்டுகளின் என்ஜின் ஆயில் விற்கும் கடை. விற்பதுதான் அவர்கள் வேலை என்றாலும், இரண்டு இளைஞர்கள், வண்டிக்கு என்ஜின் ஆயில் போட்டுக் கொடுப்பதையும் பிரமாதமாக செய்வார்கள். 200 எம்மெல்லை அழுத்திக்கொள்ளும் மெக்கானிக் யோக்கியரை வெல்ல ஒரே வழி, திருநெல்வேலிக்கே போய், கண்ணெதிரிலேயே அல்வா கிண்டிக் கொள்வதுதான். 

அரை மணி நேரத்திற்கும் மேலாக வண்டியை ஆட்டியசைத்து பழைய எண்ணையைச் சொட்டவிட வேண்டும். இருசக்கர என்ஜின் ஆயில் டாங்கின் அடியில் இருக்கும் பெரிய நட்டு, பலசமயம் ஸ்பானரில் அசங்காமல் அமைவாய் உட்கார்ந்து திருகாமல் மக்கர் பண்ணும். தலையே மழுங்கிப் போனாலும் போவேனேத் தவிர அவ்வளவு சுலபத்தில் கழல்வேனா என அழிச்சாட்டியம் பண்ணும். தரையோடு படுத்தாலும் தெரியாத நட்டு. ஓட்டிவந்த வண்டி என்பதால் கொதிக்கிற இரும்பு டாங்கின் அடியில் கையால் தடவியே நட்டில் ஸ்பானரைப் பொருத்த முடியும். ஆனாலும், கஸ்டமர்கள் தாமாக முன்வந்து தரும் டிப்ஸையும் முறுவலித்து தவிர்க்கும் தன்மான உழைப்பாளிகள். அவர்களின் சிரமத்தை சீராட்டாமல் வருவது நம் மானத்திற்கு இழுக்கு என்பதால் ஒவ்வொரு முறையும் அந்த இளைஞர்களோடு மல்யுத்தம்தான்.

<இன்றும் 3000 ஆண்களும் பெண்களுமாகச் சிறார்கள் அங்கு வளர்ந்து வருகிறார்கள்.>

சத்தியமூர்த்தி பவனுக்குப் பக்கத்தில் எங்கு என்று தகவல் கொடுத்தால் நம்மால் இயன்ற உதவியைச் செய்ய இயலும். அது முழுப் புரட்சிக்கு ஊறு விளைவிக்கும் என்றாலும் தளத்தில் ஏற்றப்பட்டிருக்கும் காரணத்தால், தான தருமத்திற்கு அதிகாரபூர்வ அங்காரம் இருக்கிறது என்பதாகவே எடுத்துக்கொள்ளக்கூடும் எளிய உள்ளங்கள். 

3000யிரம் சிறார்கள் தங்கிப் படிக்கும் அளவிற்கு ஜிபி ரோடு ஏரியாவில் இடமா? அதுவும் எக்ஸ்ப்ரஸ் மாலுக்கு எதிர்ப்புறமா? 

ஹிந்துத்துவ இலக்கிய சாம்ராட்டின் இலக்கிய தீவட்டிகள், கேட்கும் அடிப்படைக் கேள்வியே, இப்படியான தவறான தர்க்கம் தகவல்களால் என்ன தலையா முழுகிவிடப் போகிறது? கதையாய் இருந்த காலத்தில் இருந்த அளவு கோல்களைக் கொண்டு புனைவு காலத்தில் அளக்கலாமா? ஆளாளுக்கும் அளந்து விடுகிறீர்கள் என்பதே அளந்து பார்த்தால்தானேத் தெரிகிறது. வினவுக்குப் புனைவு ஆகாதே! அவர்களுமா இப்படி நம்பகத்தன்மையே கிஞ்சித்தும் அற்று, இது கட்டுரையா கதையா என ஐயத்தில் குழம்பித் தவிக்கும் அளவிற்கு வியாசக் கதை புனைவது? இலக்கியவாதிகள்தான் புரியாத மொழியில் எழுதி  மக்களுக்கு எதிரான சதியில் சதாகாலமும் ஈடுபட்டுக் கொண்டிருப்பவர்கள். புரட்சிகர இலக்கியமும் அப்படித்தானா?

நுங்கம்பாக்கத்திலிருக்கும் / காமராஜ் இல்லத்தை ஒட்டி இருக்கும் / சத்யமூர்த்தி பவனில் /

ஓ1 இது மாய யதார்த்தவாதக் கதைட்டுரையோ?

<பாரதியின் எக்ஸ்போர்ட் கம்பெனி வேலையால்தான் குடித்தனம் நடந்திருக்கிறது. பலநாட்கள் ஓவர்டைம் செய்துதான் குடும்பத்தை ஓட்டியிருக்கிறார் பாரதி.

அதாவது, காலை எட்டு மணிக்கு முதல் ஷிஃப்ட்.  மாலை ஆறரை மணிக்கு அடுத்த ஷிப்ட் ஆரம்பிக்கும். அப்படி இரவு பகலாக உழைத்து, அந்த பணத்தில் சீட்டுக்கட்டி வீட்டிற்குத் தேவைப்படும் பொருட்களாக வாங்கியிருக்கிறார். அதாவது, சாமான் செட்டுகளிலிருந்து, வீட்டு உபயோகப் பொருட்கள் முதல் நகைகள் வரை.>

அடடே இவ்வளவு வாங்க முடிந்தவருக்கு, நகை உட்பட வாங்க முடிந்தவருக்கு, வாடகை கொடுப்பது பெரிய பிரச்சனையா?  எட்டாங்கிளாஸ் வியாசத்தில் என்னென்ன கருத்துக்கள் வரவேண்டும் என்கிற மண்டைக் குடைச்சல் மாணவனுக்கா அல்லது வீட்டுப் பாடம் எழுதிக்கொடுக்கும் மாதாவுக்கா?.

ஓவ்ர் டைம் எனச்சொல்லி சோகப் பல்லவியை ஆரம்பித்து ஷிஃப்ட்டுக்கு ஷிஃப்ட்டானால் சிரிப்பு வராதா படிப்பவனுக்கு? வராது. புது ஆளா படிக்கிறான் இதனால் பாதிப்படைந்து புரட்சிக் கனலில் புடம் போடப்பட்டு கிளர்ந்தெழ?

எஸ்.ராமகிருஷ்ணனேகூட இதைவிட நெகிழ்வான கதையொன்றை எழுதித் தரக்கூடும். எழுதியது கிருஷ்ணவேணி எனப் பெயர் மாற்றிக் கொண்டால் பெண்ணெழுத்தாகிவிடக்கூடும் தானில்லையா? 

சுய வாழ்வின் அனுபவத்தை இலக்கியமாக்கினாலோ அல்லது வாழ்க்கையை அதன் வெம்மையின் தகிப்பை மெய்யுலகில் நேரடியாய் உணர்ந்தாலோதான் உண்மையான எழுத்து லபிக்கும்.

கட்டுரையாசிரியர் கற்றுக்குட்டி இலக்கியச் சிறுமி. அவரது எழுதிப் பார்க்கும் முயற்சியைக் குறைகூறுவது அல்ல நமது நோக்கம். 

எதை வாசிப்பது எப்படி வாசிப்பது என வகுப்பெடுக்கும் கமிசாருக்கு என்ன ஆயிற்று? கட்டுரைக்கு ஒடுக்கெடுக்கக் காளமேகம் அண்ணாச்சியின் கரம் என்னாச்சி? ஒருவர் பெயரில் வரினும் கும்பல் முயற்சி அல்லவோ நமது கூட்டுப் பண்ணையின் விளைச்சல்! 

பொட்டிதட்டி சுகித்து, போகாத பொழுதைப் புரட்சிகர புல்லரிப்பால் நெட்டித்தள்ள வேண்டி, எழுத்தைக் கையில் எடுத்தால், தத்துபித்தெனத் தானாக முளைக்க முனையும் புல்லும் கருகிவிடும்.

எழுத்துக்கு பெண் ஆண் என்கிற பேதமில்லை. எழுத்தின் வலிமை நேரடி உணமை வாழ்வனுபவத்தில் இருப்பதை இங்கே காணலாம். 

இறந்த பூதத்தின் தொடரும் நிழல் முதலாளித்துவப் பத்திரிகையில் வேலைபார்ப்பவர் எழுதி அற்பவாத இலக்கியப் பத்திரிகை என இழிக்கப்படும் காலச்சுவடில் வெளியான கட்டுரை. எச்சில் தொட்டுக் கண்ணில் வைக்க வேண்டிய கட்டாயமில்லாமல், எப்படி இயல்பாக, நம் மனத்தை உலுக்குகிறது! இதற்குப் பெயர் எழுத்து.

நமக்கு நாமே எழுதி நமக்கு நாமே படிக்கும் புரட்சிகர இலக்கிய நாளிதழ்.நாம் இயற்றுவதே மக்கள் கலை. நாம் எழுதுவதே மக்கள் இலக்கியம். நமது ஒட்டு மொத்தக் கூடாரமே கழகம். 

நினைவின் குட்டை கனவு நதியில், கால்கழுவக்கூட நீரில்லை என்று குட்டையைப் பார்த்து இளிக்கிறதாம் கூவம்.

தேடு வார்த்தைகளில் இருக்கும் விஸ்தாரத் தீவிரம் அப்பட்டமாகத் தெரிகிறது. புரட்சி ஹிட்டாக வேறு வழி? 

1ஆவது ரேங்க் 2ஆவது ரேங்க் 1001ஆவது ரேங்க் எல்லாமே ஒருவருக்கேவா? ஆமாம்.  
போட்டி என்ன? 
................

உளறுவதா? ஓ! அப்ப சரிதான்.