22 March 2011

எழுதிப் பார்ப்பதும் எழுதியதைப் பார்ப்பதும்

இளைஞர் ஒருவர் (இளைஞர் என்பது கூட அவரை வயதானவராய் ஆக்கிவிடக் கூடும்) மின்னஞ்சலில் சுட்டி கொடுத்து, அவரது கதையைப் பற்றிய, என் கருத்தைச் சொல்லும்படிக் கேட்டிருந்தார். 

படித்துப் பார்த்தேன். பதில் எழுதத் தொடங்கினேன். எழுதி முடித்த போது அவருக்கான பிரத்தியேகமாக அல்லாது, பொதுவாக வந்திருப்பதாகப் பட்டது. பிறகு அவருக்கு கீழ்க்கண்ட வரிகளை அஞ்சல் செய்தேன்.

<இதைப் பதிவாக என் தளத்தில் ஏற்றிக் கொள்வ்தில் உங்களுக்கு ஏதும் ஆட்சேபனை இல்லை எனில் வலையேற்ற உத்தேசம்.>

அவரது பதில்,


<ஓ மச்சி சார் தாரளமாக. முட்கள் நிரம்பிய ஒத்தையடிப்பாதை வேகமாக சாவுக்கு இட்டுச்செல்கிறது கதைசொல்லியை என்பதாக எழுதபட்டது அந்த ஆரம்பம். உங்கள் கருத்துகளுக்கு நன்றி ,கவனத்தில் கொள்கிறேன் அடுத்த முறை.> 

கதை எழுதுவதைவிட இது அல்லவா முக்கியம். இந்த சகஜ உணர்வு. எனக்கும் அவருக்கும் 28-27 வயது வித்தியாசம் இருக்கக்கூடும்.

உங்களிடம் நீங்கள் எவ்வளவுக்கெவ்வளவு கடுமையாக தயவுதாட்சண்யமற்று இருக்கிறீர்களோ அவ்வளவுக்கவ்வளவு நீங்கள் உருப்படுவதற்கான வாய்ப்பு  பிரகாஸமாக இருக்கிறது. எழுதி முடித்ததாய் நினைப்பதை நெஞ்சிலே ஈரமே இல்லாமல் தள்ளி வைத்து உங்கள் எதிரி எழுதியது போல் படித்துப் பாருங்கள். கிழிந்து நார்நாராய்த் தொங்கும் அதலிருந்து ஒரே ஓர் இழை, அடிக்கிற காற்றுக்கு எதிர்த்திசையில் ஜீவனுடன் அசைந்தால், முன்தீர்மானம் இல்லாத முகம் தெரியாத ஒருவன் மனத்தில் அது பேரலைகளை உண்டாக்க வாய்ப்புள்ளது.

அவருக்கு எழுதியதை ட்ராஃப்ட்டில் வைத்துப் படித்துப் பார்த்தால் இடையிடையில் எழுதியதாய் நினைத்து நான் விட்டிருந்த பொக்கும் பொகறையும் கண்ணில் உறுத்தின. திருத்தத்தொடங்கினேன். இதை அவர் படித்தால் அவரிடம் அஞ்சலில் இருப்பதன் இரட்டை என நினைக்கக்கூடும். சாரம் மட்டுமே ஒன்று சதையும் சாயலும் வேறுவேறு.

************

<ஒத்தையடி பாதையில் போயிருக்கிறீர்களா?>

 என்று கதை தொடங்குகிறது

<அதற்க்கென்ன உயிரா இருக்கிறது என்று சிரித்துக்கொண்டே கேட்டார்> என்பதற்கு அடுத்த வரியில் கதை முடிகிறது. 

வாழ்வு இயந்திரமயமானதை சொல்ல முயலும் கதை. இந்த வரிகளுக்குள் இருக்கும் கருத்தைக் கதையாக்கும் முயற்சி - கதையை எங்குமே கொண்டு செல்லவில்லை.

ஏராளமான எழுத்துப் பிழைகள். ற்-க்குப்பிறகு ஒற்று மிகவே மிகாது ஒருபோதும். இதைப் பெற்றவர் பெயர் மனதில் நிற்பதைப்போல நினைவில் நிறுத்தவும்.

காட்சிகளை அல்லது மன ஓட்டத்தைச் சொல்ல முயல்கையில், முதலில் அது நம் மனதிற்குள் விரிகிறதா என்பது முக்கியம்.

பொறுமை பொறுமை மகா பொறுமை தேவை. ஒவ்வொரு காட்சியாக மனம் காண வேண்டும். இதை முழுக்க மனத்தில் கண்ட பிறகு எழுதுவதா ?காணக்காண வெவ்வேறு தருணங்களில் குறிப்புகளாக எழுதி வைத்துக் கொள்வதா? அல்லது எழுத்த எழுதக் காண்பதா? என்பதெல்லாம் அவரவர் தேர்வு. எது உங்கள் இயல்புக்கு ஒத்துப் போகிறதோ அதன்படி செய்யலாம். ஆனால் விசில் கூவாமல் குக்கர் மூடியைத் திறப்பது விபத்திலேயே முடியும். 

இணையத்தில் மிகப் பெரும்பாலானோர் எடுத்தவுடன் வடிவ பரிசோதனையில் இறங்குவதிலேயேக் குறியாய் இருக்கிறார்கள்.எல்லாமே எல்லோருமே சொல்லியாயிற்றே நாம் புதிதாகச் சொல்ல என்ன இருக்கிறது? சொல்லுகிற விதம்தானே முக்கியம் என்கிற மனோபாவம். சொல்லுகிற விதம் என்பது வடிவம் மட்டுமேவா? ஒரு விஷயத்தைச் சொல்லத் தொடங்கும் முன் மனத்தில் பார்க்காமல் சொல்ல முடியுமா? சொந்த வாழ்வைப் பார்ப்பதிலும் சுற்றி நடக்கிற வாழ்வைப் பார்ப்பதிலும் பார்த்ததைத் திரும்பச் சொல்ல முனைகையிலும் எல்லாவற்றையும் சொல்லி விடுகிறீர்களா? 

அங்கேயே ’தேர்வு’செலெக்‌ஷன் வந்து விடுகிறது அல்லவா. எதைச் சொல்லத் தேர்ந்தெடுக்கிறீர்கள்? உதாரணமாக இங்கு சொல்வதானால் ’இயந்திரமய வாழ்வில் சுயம் தக்க வைத்துக் கொள்ளப் போராட்டம் அல்லது முயற்சி’

இந்த விஷயத் தேர்வு மட்டுமே தேர்வு அன்று. இதையே சினிமாவாக இருந்தால், இதைச் சொல்ல கோடம்பாக்க மொழியில் ’சீன் பிடிப்பார்கள்’ டிஸ்கஷன் என்கிற பெயரில்.சிறுகதை எனில் காட்சி பூர்வமாக எண்ணபூர்வமாக இதை அடுத்தவனுக்கு சொல்ல விழைகிறீர்கள். எண்ணங்களைக் காட்சிகளாப் புனர் நிர்மாணித்தல். பார்வையாளனை வாசகனை அவன் இருக்கும் மோன நிலயிலிருந்து போத நிலைக்குக் கொண்டு போதல்.

இந்தக் கதையில் நீங்கள் சொல்ல முயன்ற ’இயந்திரமயமாதல்’ உங்கள் வாழ்வில் நிகழ்ந்துள்ளதா? அப்படி ஆகியதை முதலில் எந்தத் தருணத்தில் உணர்ந்தீர்கள்? அந்தத் தருணத்தை நினைவு கூறுங்கள். அதில் காட்சியாகவோ ஒரு வாக்கியமாகவோ இதை உணர்ந்தீர்களா? அல்லது சொந்த வாழ்வில நடந்தது அல்ல ஒரு நண்பன் சொல்ல, கேட்டதா? அவன் சொன்னதில் காட்சி இருந்ததா? அவன் கூறியதில் உணர்ச்சி இருந்ததா? அதைக் கேட்டுக் கொண்டிருந்த தருணத்தில் நீங்கள் உணர்ச்சிவயப்பட்டு மனதால் முன் நகர்ந்தீர்களா? அதைத் திரும்ப வாழப் பாருங்கள் அந்த நண்பனுக்கு பதில் அதையே இன்னொருவனுக்கு சொல்வதாய் இருந்தால் நீங்கள் எப்படிச் சொல்வீர்கள்? 

இணையத்தில் எழுதுவதால் ஏற்படும் வரம் /சாபம் இரண்டுமான ’வார்த்தைகளின் எண்ணிக்கை’ பற்றியெல்லாம் அறவே நினைக்காதீர்கள். மெல்ல மிகமிக மெல்ல எழுதுங்கள். இது வேகமாக எழுத வேண்டாம் என்கிற பொருளில் சொல்லவில்லை. நிதானமாக விரித்து எழுதுங்கள் என்கிற பொருளிலேயே சொல்கிறேன். பெரிதாகப் போய்விடுமோ என்கிற கவலையே வேண்டாம். பெரிதாகப் போய்விட்டால்தான் என்ன? அப்புறமாக இழைக்கையில் வெட்டலாம் சீவலாம் எதைப் பற்றியும் யோசிக்காமல் மனதில் இருக்கும் விஷயத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து, அந்த காட்சியின் முழு கனபரிமானத்தையும் எப்படிச் சொன்னால் உங்களுக்கு ருசிக்கும் அல்லது நீங்கள் கவரப் படுவீர்களோ அப்படிச் சொல்ல முயலுங்கள். நடந்ததிலிருந்து கொஞ்சம் மாற்றினால்தான் இன்னும் முழுமை கூடும் எனத் தோன்றுகிறதா தாராளமாய் மாற்றிக் கொண்டு செல்லுங்கள். சொல்ல வந்த விஷயத்திற்கு அதுவரை எழுதிவந்த விஷயம் ஒவ்வாமல் ஆகிவிடாத அளவிற்கு கற்பனையில் செல்லுங்கள். சொல்லிக் கொண்டு செல்வது கையை மீறி ரொம்ப நாடகீயமாய் செல்வதாகப் படுகிறதா? இப்போது கவலைப் படதீர்கள். எழுதி முடித்தபின் பார்த்துக் கொள்ளலாம். எழுதிவிட்டோமே என்பதற்காகவே பிரசுரிக்க முனையாதீர்கள். பயிற்சி என நினைத்து, தூக்கி தூர வையுங்கள். பின்னொரு நாள் அது கச்சாப் பொருளாக உபயோகப்படக்கூடும்.

எழுதுவது பற்றி எவ்வளவுதான் சொன்னாலும் அது முழுமையே அடையாது. ஏனெனில் அது ஒவ்வொருவருக்கும் பிரத்தியேகமானது. 


இலக்கிய வித்தைகளை யார் கற்றுத்தர இயலும்? அதன் நயங்கள் சொல்லப்படுகையில் பாழ்பட்டுப்போகின்றன. பின்பற்றப்படுகையில் காலைவாரி விடுகின்றன. தன்னுடைய சுனைகளைத் தானே தேடும் முயற்சி அது. - நாகராஜனின் உலகம் - சுந்தர ராமசாமி