01 March 2011

எனக்குப் பிடித்த விக்ரமாதித்யனின் குறுங்கவிதைகள் சில

விக்ரமாதித்யன் எழுதிய

நஹி நஹி ரக்ஷதி டுகுரங்கரணே

என்கிற கவிதை யாரிடமேனும் இருக்கிறதா?

1984ல், மழை தூர ஆரம்பித்த ஒரு இரவு, பதினோரு மணி வாக்கில் ராயப்பேட்டை கேஃப் அமீன் எதிரில் மூடிய கடையின் படியில் உட்கார்ந்து, மூடப்பட்டிருந்த ஷட்டரில் முதுகை தேய்த்துக் கொண்டு, மழைக்கு ஒண்டிக் கொண்டு இருக்கையில் கேட்டேன். 

நம்பி, நாம் உட்கார்ந்திருக்கும் இடம் என்ன கடை தெரியுமா?

அண்னாந்து பார்த்தார். கூரையிலிருந்து நீட்டிக் கொண்டிருந்த தடுப்புதான் தெரிந்தது. அதை அடுத்துதான் பெயர்ப்பலகை.

என்ன கடை?

கடை இல்லை. ப்யூட்டி பார்லர் என்கிற பேரில் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கிற...

ஏய் என்னப்பா இது! நீ சொல்றேங்கறதாலையே ஏதோ இருக்குதுன்னு நெனச்சேன். இங்க ஒக்காந்து பஜகோவிந்தம். ஏ தப்புப்பா.

நீங்க வேற இதுதான் செரிப் பொறுத்தம்.

விக்ரமாதித்யன் சிரிக்கவில்லை. 

அந்தக் கவிதையை எடிட் செய்தேன். படித்துப் பார்த்த நம்பி சொன்னார்.

நல்லா இருக்கு மாமல்லன். ஆனா எந்து மாதிரி இல்லையே!

******

பின்னொருநாள் 1984-85ல் அப்போதுதான் வெளிவந்திருந்த ஊருங்காலம் என்கிற தொகுதியை, ஏதோ ஒரு டீ ஓட்டலில் என்னிடம் படிக்கக் கொடுத்தார். பாண்டி பஜார் டீலக்ஸ் என்று நினைவு. அட்டை ஏதோ முற்போக்குத் துண்டுப் பிரசுரத்தை நினைவு படுத்துகிறது கவிதைப் புத்தகமாகத் தெரியவில்லை எனச்சொல்லி வாங்கியவன், படிக்கப்படிக்க தாறுமாறாக அடித்தும் திருத்தியும் ரகளை செய்தேன். 

பொறுமையாகப் படித்துப் பார்த்தவர், என் கவிதைகளை யாராவது எடிட் செய்யறது சரிதான். ஆனா நீ செஞ்சா உன்னைய மாதிரியே கட்டு செட்டா அளவெடுத்தாப்புல ஆயிடுதப்பா! அப்பிடி கொஞ்சம் நீர்த்து இருந்தாதான் நம்புளுது மாதிரி தோணுது என்றார். நான் களேபரித்த என் பிரதி என்னிடமே இருக்கிறது. பஸ்ஸில் நம்பி பற்றி ஒரு சுட்டி பார்த்தேன். பழைய நினைவுகள்.


என் சக பயணிகள்-5 விக்ரமாதித்யன் - தமிழ் வீதி (வீடியோவை இன்னும் பார்க்கவில்லை)

அந்தத் தொகுப்பிலேயே காடு என்கிற பகுதியில் நிறைய குறுங்கவிதைகள் உள்ளன. அவற்றில் எனக்குப் பிடித்த கவிதைகள் அவர் இயற்றிய/யாத்த/பெற்றெடுத்த நிலையில் (சில என் விமர்சனங்களுடன்) இதோ!

*****
கடல் 

காத்திருக்குமென்றுதான்
நதி
தேங்கி நிற்பதில்லை..

(காத்திருக்குமென்றாலும் என்பது என் தேர்வு) இந்த நிலையில் அதில் என்ன பொருள் வருகிறது என்று எனக்குப் புரியவில்லை.

*****

தீர்மானமொன்றும் இல்லை
தேனீக்கள்
தேன் சேகரிப்பதாகவும்
நான் 
கவிதை யெழுதுவதாகவும் 
சொல்லிக் கொள்கிறார்கள்....

*****

கொஞ்ச நேரம் 
இருப்பதற்காக

ரொம்ப தூரம்
நடக்க வேண்டியிருக்கிறது...

(இது க்ளாஸ்)

****

கட்டப்பட்ட கயிற்றின் வட்ட எல்லைக்குள்
கிடந்து மேய நேர்ந்த உயிர்களுக்குக்
கனவில் வராமல்போகாது காடு
நினைவில் விரியாமல் இருக்காது ஏகாந்தம்

(திரும்ப, கடைசி வரிக்கு முன்பாகவே கவிதை பிரமாதமாகப் பழுத்துத் தொங்கத் தொடங்கிவிட்டது)

******

விழித்திருந்தால்
காட்டு வழி

பயந்து போய்
கண்ணை மூடிவிட்டால்
கருக்கிருட்டு....

*****

பழக்கம் காரணமாகத்தான்
சிகரெட் பிடிக்கிறோம்

பழக்கத்தினால்தான்
அலுவலகம் செல்கிறோம்

பழக்கத்தின் பேரில்தான்
பல் தேய்க்கிறோம்

பழக்கம் பழக்கமாய்த்தான்
வாழ்ந்து கொண்டும் இருக்கிறோம்...

(மறுபடியும் கடைசி வரி மருவாக உபரியாய்த் தொங்குகிறது).

*****

வேலைக்குப் போவாள் பெற்றவள்
வீட்டில் இருக்கும் கைக்குழந்தை

கட்டிய தாய்ப்பாலை
சுவரில் பீய்ச்சிச் சிந்தவிடும் விதி...

*****

ஆலமர நிழலில்
காளான்கள் தோன்றலாம்

கறிவேப்பிலைக் கன்று வளர்ந்ததாகக்
கண்டதுமில்லை... கேட்டதுமில்லை....

(கறிவேப்பிலைக் கன்று வளருமா? என்றாலே போதும் என்பதே என் அபிப்ராயம்)

*****

ஓர்மையற்று...

சித்திரங்களை
வரையாதீர்

வரைந்துவிட்டு
கலைக்காதீர்

கலைத்துவிட்டு
பின்பு

அலையாதீர்....

(அச்சகங்களில் தொடரும் புள்ளிகளே இல்லாமல், நம்பிராஜன் உபயோகிக்கக் கிடைக்காதபடிக்கு .... எல்லாவற்றையும் தூக்கிக் கடாசவேண்டும் எனத் தோன்றும்)

****

தடுமாறும் மனுஷனுக்குத் 
தப்பிக்கக் கிடைத்தது
உண்மையின் பன்முகத்தன்மை....

****

உடம்பிருக்கும் வரை
உடம்பையும்

உயிரிருக்கும் பொது
உயிரையும்

ஒதுக்கி வைக்க முடியாது ஒருபோதும்....

*****

அவன் திருட
இவன் திருட
அதையெல்லாம் பார்த்து
நீயும் திருட
நான் மட்டும்
எப்படிச் சாமியாராக இருக்க...?

*******

செத்தவனுக்குச்
சுடுகாடு

இருப்பவனுக்கோ
இரு வேறு உலகம்...

******

கிழக்கோ
மேற்கோ

கொஞ்சம் நடப்போம்....

******

எல்லோருக்குமாகப்
பெய்கிறது மழை

எல்லோருக்குமாக
விளையவில்லை ஏழிலைக் கிழங்கு

*****

மலை அழகானது

நான்
சமவெளியில்...

*****

அவர்கள்
பேசுவது பகவத்கீதை

பின்னால் இருக்கிறது
பாதுகாப்பான வாழ்க்கை...

(அவர்கள் என்கிற வார்த்தை என் கைவசம் இருக்கும் புத்தகப் பிரதியில் நீக்கப் பட்டிருக்கிறது)

*****

இலக்கியவாதி லேபிளுடன், ஒன்று எழுதப்பட்டு இருந்தாலே புளகிப்பது, ”அனுபவிக்கணும் ஆராயக் கூடாது” என தூபதீபமேற்றி ஆராதிப்பது ஆகிய செயல்கள், அடிமைகளை உருவாக்கவே உதவும். குறைந்தபட்சம் இந்த அடிமைகள் புத்திசாலிகளாகக்கூட இருக்க வாய்ப்பு இல்லை.

****

இந்தியச் சிந்தனை மரபு என 80களில் இருந்தே பேசிக்கொண்டு திரிந்தவர் விக்ரமாதித்யன். 1982ல் ஒரு முறை நான் நம்பி சமயவேல், அவனது சைதை மொட்டைமாடிக் கூரை(?) அறையில் இருந்தபோது, சற்றுத் தள்ளி ஒருக்களித்தபடி சரிந்து, தாஸ்தாவெஸ்கியின் இடியட்டோ, பொஸஸ்டோ ஆங்கிலப் புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தான்.

நம்பி பேசிக்கொண்டிருந்தார்.

......வினோபாதா(ன்) இந்து ஞான மரபோட கடைசி பெரியவர்னு சொல்லணும். வடக்கிருத்தல்ங்கறதை நெஜ வாழ்க்கைலையும் நடத்திக் காட்டினவர். போதும்னு தோணினதும், வடக்கு நோக்கி இருந்து.... முடிச்சிக்கிட்டார்....

பாத்த இல்லே இந்து ஞான மரபு எவ்ளோ மடத்தனமா இருக்குன்னு, என்று குரல் வந்தது, படித்துக் கொண்டிருந்த புத்தகத்தில் இருந்து தலையை எடுக்காமல் சொல்லிக் கொண்டிருந்தான் சமயவேல்.

1983ல் வெளியான அறியாத முகங்கள் தொகுப்பை, ஆறு மாதம் மட்டுமே பழகிய சமயவேலுக்கும் கல்லூரியிலிருந்தே பழக்கமான ஷங்கர் ராமனுக்கும் காணிக்கையாக்கினேன். ”புதுமைப்பித்தனைக் கூட முழுசாப் படிக்காம எழுத வந்துடறீங்க...” என 79-80ல் எழுதத் தொடங்கிய என்னை நிறுத்திப் படிக்க வைத்தவர் என்பதற்காகவும் என் முதல் தொகுப்பை ப்ரூஃப் பார்த்துக் கொடுத்தமைக்காகவும் நம்பிராஜனுக்கு நன்றி சொல்லி இருந்தேன்.