10 November 2011

தவறியும் போகாதவை

என் நினைவில் தவறில்லை. ஆம் படிகளில்தான் ழான் பால் சார்த்தரின் ’சுவர்’ கதையின் மொழிபெயர்ப்பு வெளியாகியுள்ளது. அதைத்தேடி பலநாட்களாக கைபேசியில் அலைந்தது வீண்போகவில்லை.

இணையத்து சிறுசிடம் தப்பித்தவறி படிகள் இருக்கக்கூடுமோவென நப்பாசையில் கேட்டால், தான் பீர்மணம் மாறா பாலகன் ஆகவே தன்னிடம் எப்படிக் கேட்கலாம் என்றும் இன்னொரு பால்மணத்திடம் இருந்து பொள்ளாச்சி நசனிடம் கேட்டால் கிடைக்கக்கூடும் எனவும் பதில் வந்தது. நசன் அவர்களோ பத்திரிகையின் பெயரை உறுதியாகக் கூறினால்தான் உதவமுடியும் என்றார். கூடவே பழைய இதழ்கள் இருந்தாலோ கிடைத்தாலோ அனுப்பிவைக்கும்படிக் கூறிவைத்தார்.

சாரு நிவேதிதாவிடம் கேட்டதற்கு, தனக்குப் பெரிய நினைவாற்றல் எல்லாம் கிடையாது, ஆனால் கண்டிப்பாகச் சொல்ல முடியும் சார்த்தரின் ‘சுவர்’ சிறுகதை படிகளில் நிச்சயம் வரவே இல்லை என்றார்.

ராஜன் குறை கிருஷ்ணன் எம்டிஎம் பிரக்ஞை சிவசங்கரா சுகுமாரன் போன்ற பெருசுகளிடம் சுவர் கதை வந்த பத்திரிகை படிகள்தானே என்று ஃபேஸ்புக்கில் அலைபேசியில் என்று கேட்டும் பாதகமான பதிலே வந்துகொண்டு இருந்தது.

நேற்று கிண்டியில் வண்டிவிட்டு இறங்கியதும் விக்ரமாதித்யனிடம் இருந்து மிஸ்டுகால், அண்ணாச்சியின் மனைவியார், நான் கேட்டுக்கொண்டதைப் போலவே வீட்டுக்கு வந்துவிட்டேன் உங்கள் அக்கப்போரை இப்போது வைத்துக்கொள்ளுங்கள் என்பதுபோல மிஸ்டுகால் கொடுத்து இருந்தார். நம்பியிடம் கதையின் பெயரைச்சொல்லி கொஞ்சம்போலக் கதையும் சொல்லிக் கேட்டேன். மொழிபெயர்ப்புக் கதையா அப்படியெனில் ஆர்.சிவக்குமாரைக் கேள் சிவக்குமார் நம்பரை சுகுமாரனிடம் கேள் என்று ஒளி கிடைத்தது.

நம்பிக்குத் தோன்றியது உனக்குத் தோன்றவில்லை பார்த்தாயா என சுகுமாரனைக் கொஞ்சம் காய்த்துவிட்டு, தருமபுரியில் இருக்கிறார் என்ற எண்ணத்தில் நம்பரை வாங்கிக்கொண்டு சிவக்குமாரைத் தொடர்புகொண்டேன். ஏழுவருடங்களாய் அவர் சென்னையில்தான் இருக்கிறார் என்பதே தற்போதுதான் தெரிய வந்தது. 1985ல் கன்யாகுமரி-காஷ்மீர் சைக்கிள் பயணத்தில், தருமபுரியைக் கடந்தபோது, மதிய இளைப்பாறலில் தங்குமிடம் விட்டு நழுவி, முகவரி தேடி,. சிவக்குமார் வீடா எனக்கேட்க, ஆமாம் எனச்சொல்லி கதவைத் திறந்த அவர் மனைவியைப் பார்த்ததும், சிவக்குமாரிடம் இவர்கள் பச்சையப்பாஸில் படித்தவர்தானே எனக்கேட்டது நினைவுக்கு வந்தது.

சார்த்தரின் ‘சுவர்’ கதை வெளியானது படிகளேதான் என்று சொன்னதோடல்லாது அந்த இதழ் தன்னிடம் இருப்பதாகவும் அட்டைப்பெட்டிகளில் இருந்து தேடி எடுக்க ஒரு நாள் அவகாசமும் கேட்டார் ஆர்.சிவக்குமார்.

மறுநாள் காலையே, ரயில் வண்டியின் இறைச்சலுக்கிடையில், இதழையே தேடி எடுத்துவிட்டதாகவும் மொழிபெயர்ப்பாளர் பெயர் ஜனனி என்று இருப்பதாகவும் தெரிவித்தார். ஜனனி யாராயிருக்கும் என்பதை யார் என்று எப்படித் தெரிந்து கொள்வது? ஒரே வழி தமிழவன்தான். அவர் நம்பரை சிவக்குமாரிடம் பெற்றுக்கொண்டேன்.

அலைபேசியில் நான் மாமல்லன் பேசுகிறேன் என்றதும் அவ்வளவு சத்தத்திற்கிடையிலும் எந்த மாமல்லன் என்று சற்றும் தயங்காமல், 28 வருடங்களின் இடைவெளியே இல்லாது, ஆ! மாமல்லன் எப்படி இருக்கிறீர்கள் என்றார். இத்துனைக்கும் அவரை இரண்டுவருட காலத்திற்குள் இரண்டுமூன்று முறைக்குமேல் நேரில் சந்தித்ததில்லை. மிஞ்சிமிஞ்சிப்போனால் அப்போது என் வயது 21-23 ஆக இருந்திருக்கும். இதைவிட எழுத்துலகத்தில் சம்பாத்தித்தது என்று சொல்லிக்கொள்ள வேறென்ன வேண்டும்.

சார்த்தரின் Wallகதையா? படிகளில் வந்ததா? என்று ஆச்சரியப்பட்டுக்கொண்டார். ஜனனி என்பது தானில்லை என்றும் சாரு நிவேதிதாவாகத்தான் இருக்கவேண்டும் என்றும் கூறினார். இல்லையே இண்டிமசிதானே 'இங்கே இன்று'வில் அவன் மொழிபெயர்த்திருப்பதாய்க் கூறினான் என்றேன். அவனும் மறந்துவிட்டானா? ஜனனி என்பது அவன்தான் என்றார்.

படிகளில் சார்த்தரின் எது இலக்கியம் என்கிற கட்டுரை கூட வெளியாகி இருக்கும். இன்றைக்கும் கூட அந்த கட்டுரை முக்கியமானது என்றார். (அந்தக் கட்டுரையின் தலைப்பு ’எதற்கு எழுதுகிறோம்’) அதற்கென்ன இரட்டிப்பு மகிழ்ச்சி, அதையும் வலையேற்றினால் போயிற்று என்றேன். அழியாச்சுடர்கள் உலக இலக்கியம் போன்ற தளங்கள் பற்றிக்கூறியதும் மிகுந்த உற்சாகமடைந்தார்.

செங்கையில் 5.30 பிடித்து கிண்டியில் 6.48க்கு இறங்கி வண்டியை எடுத்தால் எதிரில் எக்மோர் மட்டும்தான் தெரிந்தது. அலுவலக வேலையாகப் பேப்பர்கள் இடுப்பில் இடித்தபடி வந்துகொண்டிருந்தன. நாளைக்கு விடுமுறை ஆனாலும் வரவேண்டும் என்கிற குழைவுக் கட்டளைக்கு, இரவே முடித்து காலை 11 மணிக்குள் மெயிலில் அனுப்பிவிடுவதாக வாக்களிப்பு.என்பொறுப்பில் இருக்கும் பெரும்பாலான தொழிற்சாலைகளின் மாதாந்தர ஆவணங்களையெல்லாம் மென்நகலாய் மெயிலில் வாங்கி அச்செடுத்து வைத்தாயிற்று. உட்கார்ந்து அடித்துவிட்டுத்தான் மறுவேலை.

ஆனால் கை போனதோ ஸ்கேனர் பக்கம்.பதிவாகப்போட்டுவிட்டால் படிப்போர் படிக்கலாம். பார்க்கிற சென்ஷி சார் தானாக முன்வந்து தட்டச்ச மாட்டாரா. அந்த இடைவெளியில் ஆபீஸ் வேலையும் பார்த்தால் பொயிற்று. அப்படியே போனாலும் காலையில் எழுந்து 7லிருந்து 11க்குள் ஆபீஸ் வேலையை முடித்துவிட முடியாதா?

மொழிபெயர்ப்பில் வரும் பாத்திரங்களின் பெயர்கள் ரோம(ன்) க்ரி(ஸ்), ழுவா(ன்) என்று ஃப்ரெஞ்சு உச்சரிப்பின் துல்லியத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதப்பட்டிருப்பதைப் பார்த்தால் தமிழவன் சொன்னதே சரியாக இருக்குமோ என்று தோன்றுகிறது.

பதிமூன்று என்பதைத்தவிர பத்திரிகையில் எங்குமே வெளியான் ’காலம்’ குறிப்பிடப்படவில்லை. அட்டைபோக முதல் பக்கத்தில் இருக்கும் ‘துக்ளக்கின் அரசியல்’ என்ற கட்டுரை ’துக்ளக் 1-3-82 இதழில்’ என்று தொடங்குகிறது.

08.03.82தான், கடைநிலை குமாஸ்தாவாக நான் வேலைக்கு சேர்ந்த நாள். அப்போதெல்லாம் ஆங்கிலத்தில் நிறைய வார்த்தைகளுக்கு ஸ்பெல்லிங்கே தெரியாது. ஆகவே வங்கியில் எடுக்கப்படும் பணத்தைத் தீர்மானிப்பது தேவையை விடவும் ஆங்கிலமாகவே இருந்தது. எளிதான ஸ்பெல்லுங்குடன் இருக்கக்கூடிய கூடிய எண்களுக்கு மட்டுமே நுங்கம்பாக்கம் இந்தியன் வங்கிக் கிளையில் வித்ட்ராயல் ஸ்லிப்பில் எழுதப்படும பாக்கியம் கிடைத்து வந்த காலம். பத்தும் இருபதுமே சில நாட்களுக்குப் போதுமானதாய் இருக்கும். அதிகமாகப் பணம் தேவை என்றால், இடைவெளிவிட்டு, தெரிந்த ஸ்பெல்லிங்கிற்கு ஏற்றார் போல், இரண்டு மூன்று தவணையாகப் பணம் எடுக்கப்படும்.

ஆனால் அப்போதே, ஈஸு வாஸுனு பேசிகிட்டு கோத்தா, உங்குளுக்கு சேஸ் படிக்கத்தான் தெரியும். ஆனா ங்கொம்மாள எனக்கு சார்த்தரை காம்யூவைத் தெரியும், போங்கடாப் புடுங்கிங்களா என்று, நெஞ்சு நிமிர உதவியவர்களை எப்படி மறக்க முடியும்?

அற்ப காரியங்களுக்காக மற்றவர் நினைவில் நாம் தங்கிவிடுவதும் நாம் செய்த அபூர்வமான காரியங்களை நாமே மறந்துவிடுவதும் சரியா தவறா என்றால், முழுக்க சரியென்றோ முழுக்க தவறென்றோ எதுவுமே இல்லை என்றுதான் சொல்லத்தோன்றுகிறது.