26 November 2011

இருபத்துநான்குமணிநேர அடிமை

பெரும்பாலும் விளையாட்டுச் செய்திகளைப் படிக்காமல், வெறும் படம் மட்டுமே பார்த்து நகர்ந்துவிடுபவனுக்கு, 90களில் நிர்மல் சேகரைப் படி என்று புல்லரித்து அறிமுகப்படுத்தியவன், ட்ரைவ்-இன் நண்பன் ஸ்வரன் என்கிற ஸ்வர்னகுமார் தான்.

பெரும்பாலும் டென்னிஸ், எப்போதேனும் கிரிக்கெட்பற்றி எழுதுவார். இலக்கிய உலகத்துடன் முற்றாக விலகியிருந்த காலங்கள் எனினும் நிர்மல் சேகர், விம்பிள்டன் சீசனில் சாம்பிராஸ் பற்றி எழுதியவற்றைப் படித்து அவரது பழைய பத்திகளை எல்லாம் இணையத்தில் தேடித்தேடி சேமித்து வைத்திருந்தேன்.

பெரும்பாலான இலக்கிய ஆர்வலர்களிடம் இருக்கும் பெரிய பிரச்சனையே வெறும் பெயர் உதிர்ப்புதான். அநேக தருணங்களில் சம்பந்தா சம்பந்தமில்லாமலேயே உதிரும். தனக்கு என்னவெல்லாம் தெரியும் என்று ’மாட்டிக்கொண்டவனிடம்’ ஆடிக் காட்டுவதிலேயே குறியாய் இருப்பார்கள். பெரும்பான்மையான இலக்கியக் காலட்சேபங்களும் இதற்கு விலக்கல்ல.

வாரியார் நக்கீரன் உபன்யாசங்கள் இன்று ஒலிவடிவில் கிடைக்கின்றன. கேட்டுப்பாருங்கள். எடுத்த எடுப்பில் பார்த்தால் பேசிக்கொண்டிருந்த விஷயத்திற்கு சம்பந்தமே இல்லாத விஷயத்திற்கு திடீரென ஏன் தாவுகிறார்கள் எனத் தோன்றும். அதை கொண்டுவந்து முடிச்சிடும் போது ஆஹாவென இருக்கும்.

இலக்கியத்தில் நல்ல ரசனையுடன் கூடிய தேர்ச்சியும் சரியான நினைவாற்றலும் கொண்டுகூட்டும் சாதுர்யமும் இருந்தால்தான் இது சாத்தியம்

நேற்று, அருகில் அமர்ந்திருந்த, சின்ன உருளை பரணூர் பயணி, செல்ஃபோனில் பார்த்து சே என்று வாய்விட்டுக்கூவி நொந்துகொண்டார். அப்படித்தான் சச்சின் 94 ரன்களில் ஆட்டம் இழந்ததை அறிய நேர்ந்தது.

அதைப்பற்றி, இன்றைய ஹிண்டுவில் கமெண்ட் என்கிற பத்தியில் நிர்மல் சேகர் இப்படித் தொடங்குகிறார்.

A milestone too far Opinion » Columns » Nirmal Shekar

“The struggle itself toward the heights is enough to fill a man's heart. One must imagine Sisyphus happy”— Albert Camus inThe Myth of Sisyphus.

இதே இதழில் இன்னும் சில பக்கங்கள் பின்னோக்கிப் போனால் ஒரு பக்கம் முழுக்க இருக்கும் ஒரு மரணச்செய்திக்கும் கூட காம்யூவின் இந்த மேற்கோள் முற்றிலும் பொருந்திப்போவது ஆச்சரியமாக இருக்கிறது.

இருபத்துநான்குமணிநேர அடிமையால் முடிந்தது இவ்வளவுதான்.