11 November 2011

எதற்கு எழுதுகிறோம்? - ஜான் பால் சார்த்தர்

படிகள் 6/7 ஜூன் 1980 இதழில், ஜான் பால் சார்த்தரின் எதற்கு எழுதுகிறோம் என்கிற, தமிழவன் அலைபேசியில், படிகளில் சார்த்தரின் எது இலக்கியம் என்கிற கட்டுரை கூட வெளியாகி இருக்கும். இன்றைக்கும் கூட அந்த கட்டுரை முக்கியமானது”  என்று குறிப்பிட்ட கட்டுரை வெளியாகி உள்ளது. எது இலக்கியம் என்கிற சார்த்தரின் புத்தகத்தில், Why write என்பது இரண்டாவது கட்டுரை. அதற்கு சிறிய அறிமுகக் குறிப்பொன்றையும் எழுதி அதில் ”வாசகனை நினைவில் கொள்ளவே கூடாது என தமிழில் அரை குறை இலக்கிய அறிவுடன் க.நா.சு. போன்றோர் இருக்கும் சூழலில்” என்கிற அர்ச்சனையுடன் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பிற்கோ மொழிபெயர்ப்புக்கோ எவர் பெயரும் போடப்பட்டு பொறுப்பேற்கப்படவில்லை.அநேகமாக இது ஆசிரியர் குழுவிலிருந்த தமிழவனாகவே இருக்க வேண்டும்.

இப்படியான தடாலடித் தாக்குதல்கள் காரணமாகவே,அன்றைய சிறு பத்திரிகைச் சூழலில், இவர்கள் எந்த புத்தகத்தை ’அப்போதுதான்’ எடுத்துப் படிக்கிறார்களோ உடனே புல்லரித்து, ஏதோ இவர்களே ‘கண்டுபிடித்தது’ போல் இதெல்லாம் இங்கே எவனுக்கும் தெரியாது என்று முதிற்சியற்று குதிக்கத்தொடங்கி விடுவார்கள், அடுத்த புத்தகத்தைப் பார்க்கும் வரை என்றும் ’பற்றி’ கட்டுரை எழுத்தாளர்கள் என்றும் தமிழில் ’கதை எழுதும் படைப்பாளி இலக்கியவாதிகளின்’ இடதுகை ஒதுக்கலுக்கு ஆளாயினர். 

எவர் எவருடன் அடித்துக்கொண்டால் என்ன? எதற்காக அடித்துக்கொள்கிறார்களோ அதன் சாரம் மட்டுமே எனக்கு அவசியம் என்று ’அர்ச்சுணன் கண் அலகாய்’ தேடியவர்கள் எண்ணிக்கையில் குறைவு எனினும் இவர்களே இருபுறம் இருந்தும் பயனடைந்தனர். 

படிகள்காரர்களின் தமிழும் கூறிய விஷயங்களும் கடினமாகவும் அந்நியமாகவும் இருப்பினும் அறிமுகப்படுத்திய எழுத்தாளர்களின் ‘படைப்புகள்’ அபாரமாகவும் புதிய வாசல்களைத் திறப்பவையாகவும் இருந்தன. மார்க்வெஸ்ஸுக்கு 82ல் நோபல் பரிசு கொடுக்கப்பட்டது தமிழுக்குப் பெரும் கொடையாக அமைந்தது. மார்க்கேஸைப் பெரிய அளவில் அறிமுகப்படுத்தியதில் படிகளுக்கு முக்கிய பங்குண்டு. இது தமிழ் மட்டுமே படிக்கத் தெரிந்த இலக்கிய சிறார்களுக்கு பேருதவியாய் அமைந்தது. 

தமிழவனின் தடாலடி சாடல்கள் எந்த விதத்தில் புதிது என்றால் அதற்குப் பத்துப் பதினைந்து வருடங்கள் முன்பாக வெகுஜனப் பத்திரிகைகளைச் சாடிய சிறு பத்திரிகை இலக்கியவாதிகளையும் சேர்த்து இவர் சாடினார். ஆனால் மார்க்கேஸுக்குப் பின்னால், பெரிய அளவில் தமிழ் இளம் படைப்பாளிகளிடம் ’முதிர்ச்சியற்ற தாக்கத்தை’ உருவாக்கப்போகிற போர்ஹேவை அழுத்தத்துடன் அறிமுகப்படுத்தியவர்கள் இவர்களும் இவர்களின் வழித்தோன்றல்களுமே எனினும் கசடதபற இதழ் 9ல் ஜூன் 1971லேயே போர்ஹேவின் வட்டச்சிதைவுகள் கதையை தருமு சிவராமு என்கிற பிரமிள் மொழிபெயர்த்து இருந்தார் என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும். 

ஆரம்பத்திலேயே படிகள், தடாலடிக் கட்டுரைகளால் பெரிய அளவில் பரபரப்பை உண்டாக்கிப் பல இளைஞர்களை தீவிர இலக்கியத்திற்கு ஈர்த்ததை மறுக்க முடியாது.

நேற்றுப் பகல் முழுக்கவும் Why writeஐ இணையத்தில் தேடி what  is Literature என்கிற சார்த்தரின் இந்த ஆங்கில மொழிபெயர்ப்புப் புத்தகத்தைப் பிடிக்க முடிந்தது. அதை Wordஆக மாற்றி Why Writeடுடைய ஆங்கில மொழிபெயர்ப்பின் ’அசல்’ வடிவத்திலேயே (சாய்வுகள், அடிக்குறிப்புகள் ஆகியவற்றுடன்) இங்கே கொடுத்து, அதனுடன், தமிழவனின் தமிழ் மொழிபெயர்ப்பையும் வெளியிட எடுத்த முயற்சிகளிலேயே வெற்றியின்றி நேற்றைய இரவும் தொலைந்தது.
பி.கு: ஜெயமோகனுக்கு அடுத்து, வேகமாய் தமிழில் தட்டச்சும் அவரது பிரதம சீடர் சென்ஷி சார்வாளின் பார்வை இதன் மேல் பட்டால் எல்லோருக்கும் பாக்கியம்.