17 November 2011

தூக்கு - ஜார்ஜ் ஆர்வெல் தமிழில் - பு பித்தன்

Pu Pithan ***@gmail.com 2:13 PM (4 hours ago) to me

மாமல்லன்,

ஒரு பதிவில் A Hanging பற்றி எழுதி, 'பெயர்க்க'ச் சொல்லிக் கேட்டது ஞாபகம் இருக்கிறதா? அனுபவியுங்கள்!
***************


இந்தப் பதிவில் பின் குறிப்பாய் இப்படி எழுதி இருந்தேன்.

பி.கு: இயன்றவர்கள் இதைத் தமிழில் மொழிபெயர்க்கலாமே. என் போன்ற பெரும்பாலோருக்கு உதவியாய் இருக்கும். ஆயிரம்தான் சொன்னாலும் தமிழில் படிப்பது தமிழில் படிப்பதுதான். 
**************
பர்மா. மழையில் தொப்பலான ஒரு காலை நேரம். சீக்காளித்தனமான மஞ்சள் வெளிச்சம், உயரமான மதிலைத் தாண்டி சிறைச்சாலைக்குள் சரிந்து கொண்டிருந்தது. சிறை அறைகளுக்கு வெளியே நாங்கள் காத்துக் கொண்டிருந்தோம். இரட்டைக் கம்பிக் கதவுகள் கொண்ட பத்துக்குப் பத்து அடி அறைகள், மிருகங்களை அடைத்து வைக்கும் கூண்டுகள் போல ஒரு வரிசையில் இருந்தன. படுப்பதற்கான பலகையையும், தண்ணிக்குடத்தையும் தவிர்த்து விட்டால், கிட்டத்தட்ட காலி அறைகள். சிலவற்றில், உள்கதவுக்குப் பின்னால், போர்வையை இழுத்துப் போர்த்திய மாநிற மனிதர்கள் அமைதியாய்க் குத்துக்காலிட்டு உட்கார்ந்திருந்தார்கள்.அவர்கள் எல்லாரும் தண்டனை விதிக்கப்பட்டவர்கள். இந்த வாரமோ, அடுத்த வாரமோ தூக்கிலிடப்படுவதற்கு காத்திருப்பவர்கள்.

ஒரு கைதியை வெளியில் கொண்டு வந்தார்கள். இந்துக்காரன். பூஞ்சைக் கண்கள். மொட்டைத் தலை. ஒடிசல் தேகம். ஆளுக்கு சம்பந்தமில்லாத, தடித்து முளைத்த மீசை. நாகேஷூக்கு கிடா மீசை வைத்த மாதிரி. அவனுக்கு காவலாய், நெட்டையான ஆறு காவலன்கள். அவனைத் தூக்கு மேடைக்கு தயார் படுத்திக் கொண்டிருந்தார்கள். இரண்டு பேர், முனையில் கத்தி பொருத்திய குழல் துப்பாக்கிகளோடு அவனருகில் நிற்க, மற்றவர்கள் அவன் கைகளில் விலங்கிட்டு, விலங்கில் ஒரு சங்கிலியைக் கட்டி, சங்கிலியின் மறுமுனையைத் தங்கள் இடுப்பு பட்டையோடு கட்டிக் கொண்டார்கள். அவன் கைகளிரண்டையும் உடம்போடு இறுக்கிப் பிணைத்தார்கள். ‘இன்னமும் அங்கே தான் இருக்கிறானா?’ என்று தடவிப் பார்ப்பது போல எந்நேரமும் அவனை மெலிதாகப் பிடித்த படி நெருக்கி நின்று கொண்டிருந்தார்கள். துடித்துக் கொண்டிருக்கும் உயிருள்ள விறால் மீனைக் கையாள்வதைப் போல. ஆனால் அவனோ, ‘இதெல்லாம் யாருக்கோ நடப்பது’ போல எந்த எதிர்ப்பும் இன்றி நின்று கொண்டிருந்தான். நீட்டிய கயிற்றில் கைகளைத் தொய்வாய் நீட்டினான்.

மணி எட்டு அடித்தது. அதைத் தொடர்ந்து, தூரத்து ராணுவ விடுதியின் சங்கொலி, ஈரக்காற்றின் வழியே ஈனஸ்வரமாய் கசிந்து வந்தது. எங்களிடமிருந்து சற்று தள்ளி நின்று, சரளைக் கற்களை குச்சியால் நோண்டிக் கொண்டிருந்த அதிகாரி, இந்த சத்தம் கேட்டு நிமிர்ந்தான். அவன் ராணுவத்தில் வைத்தியனாய் இருந்த ஆள். நரைத்த ஈர்க்குச்சி மீசை. கட்டைக் குரல். “சீக்கிரம் ஆகட்டும், ஃப்ரான்ஸிஸ்!” எரிச்சல் தொனிக்க, “இந்நேரத்துக்கு அவன் பொணமாயிருக்கனும். இன்னும் என்னய்யா பண்ணிட்டிருக்க?”

ஃப்ரான்ஸிஸ், தலைமை சிறைக் காவலன். குண்டன். திராவிடன். வெள்ளை நிற உடற்பயிற்சி ஆடையும், தங்க சட்டமிட்ட கண்ணாடியும் போட்டிருந்தான். கறுத்த கையை ஆட்டிக்கொண்டே, “ஆச்சு சார்! ஆச்சு சார்!” வார்த்தைகளைக் கொப்பளிக்கிற மாதிரி பேசினான். ”எல்லாம் தயார் சார்! தூக்கில போடறவனும் வந்து காத்திட்டிருக்கான். நாம கெளம்ப வேண்டியது தான்”

“அப்ப, சீக்கிரம் நடங்கய்யா! இந்த வேல முடிஞ்சப்பறம் தான் மத்த கைதிகளுக்கு நாஷ்டா கொடுக்கணும்”

நாங்கள், தூக்கு மேடை நோக்கி நகர ஆரம்பித்தோம். கைதியின் ஆளுக்கொரு பக்கமாய் இரண்டு துப்பாக்கி சகித காவலர்களும், அவன் தோள்பட்டையை அழுந்தப் பிடித்த படி பின்னால் இருவருமாய்ப் போக நடந்தோம். ஒரே நேரத்தில் தள்ளிவிடுவதைப் போலவும், தாங்கிக் கொள்வதைப் போலவும் அவனை நடாத்திக் கொண்டு போனார்கள். பத்தடி கூட போயிருக்க மாட்டோம், ‘திடுதிப்’பென்று இந்த ஊர்வலம் நின்று போனது. பாதையில் ஒரு நாய்! அடர்ந்த ரோமத்தோடு பெரிய நாய்! எப்போது வந்தது என்று தெரியாத படிக்கு, ‘திடும்’ என நாலு கால் பாய்ச்சலில், குரைத்த படி எங்களுக்கிடையில் தாவியது. ‘எத்தனை பேர் மொத்தமாய்!’ அதிஉற்சாகத்தோடு, முழு உடம்பையும் உதறிய படி எங்களைச் சுற்றிக் குதியாளம் போட்டது. நாங்கள் உஷாராகி அதை பிடிக்கும் முன், ஒரே பாய்ச்சலில் கைதியிடம் போய்விட்டது. எவ்விக் குதித்து அவன் மூஞ்சியை நக்கப் பார்த்தது. அதைப் பிடிக்கக் கூடத் தோன்றாமல், வாய் பிளந்த படி…நாங்கள்.

“யார்யா இந்த காட்டுமாக்கான உள்ள விட்டது?” அதிகாரிக்கு கோபம் “யாராச்சும் அதப் பிடிச்சுத் தொலைங்கய்யா!”

ஒரு காவலன், நாயைப் பிடிக்க குத்துமதிப்பாய் எத்தனித்தான். ஆனால் நாயோ, ‘இது ஏதோ விளையாட்டு போல’, அவனிடம் பிடி படாமல், குதித்து, கும்மாளமிட்டது. ஐரோப்பிய-ஆசியா கலந்தடித்த சின்ன வயசுக் காவலன் ஒருத்தன், சரளைக்கல்லை அள்ளி வீசி அதை விரட்டப் பார்த்தான். சுளுவாய்த் தப்பி, எங்களைப் பார்த்து வந்தது. அதன் தொடர் குரைப்பு சத்தம் சிறைச்சுவர்களில் மோதித் திரும்பியது. இன்னமும் இரண்டு காவலர்களின் பிடியில் இருந்த கைதி, இதுவும் தூக்குவதற்கு முன்னான ஒரு சம்பிரதாயம் போல வெறித்துக் கொண்டிருந்தான். நாயை ஒருவழியாய்ப் பிடித்து விட்டார்கள். அதன் கழுத்து வாரில், என் கைத்துண்டைப் போட்டு இழுத்துச் சென்றார்கள். நாய் அவ்வளவு சாமானியமாய்ப் போய்விடவில்லை. முரண்டிக் கொண்டும், முனகிக் கொண்டும் போனது.

இன்னும் நாப்பதடி தூரத்தில் தூக்கு மேடை. எனக்கு முன்னால் போய்க்கொண்டிருந்த கைதியின் மாநிற வெற்று முதுகைப் பார்த்த படி நான் அவன் பின்னால். கைகள் இறுக கட்டியதில் ‘தத்தளாங்கு’ தடுமாற்ற நடை. முழங்காலை விரைக்காமல், தவ்வி தவ்விப் போகும் இந்திய நடை. ஈரத்தரையில் கால் பதித்து அவன் எடுத்து வைத்த ஒவ்வொரு எட்டிலும் அவனது உச்சிக்குடுமி ‘அப்படியும், இப்படியும்’ ஆடியது. வழியில் இருந்த சகதிச்சேற்றை, காவலர்களின் பிடி தந்த அழுத்தத்தையும் மீறி, கால் படாமல் தாண்டிப் போனான்.

அந்த நொடி வரைக்கும், ஒரு சீக்குபோக்கு இல்லாத, பிரக்ஞையுள்ள சக மனுஷனைக் கொல்வதின் விபரீதம் எனக்கு உறைக்கவே இல்லை. ஆனால், சேறு காலில் படாமலிருக்க அவன் தாண்டிய நொடியில், முழு துடிப்புடன் இருக்கும் ஒரு உயிரை அநியாயமாய் சாகடிப்பதன் அபத்தம் எனக்கு விளங்கியது. அவன் ஒன்றும் சாகக் கிடக்கவில்லை. எங்களை மாதிரி திட காத்திரமாய்த் தான் இருந்தான். உடம்பில் எதும் கோளாறு கிடையாது. தின்பதை செரிக்கும் வயிறு, செத்தழிந்துப் புத்துயிர்த்துக் கொண்டேயிருக்கும் தோல், வளர்ந்து கொண்டிருக்கும் நகங்களென…என்ன பயன்? இன்னும் கொஞ்ச நிமிடங்களில், அந்தரத்தில் காலை விலுக்கப் போகும் அந்த ஒரு கணத்துக்கும் குறைவான நேரத்தில் கூட இவன் நகங்கள் வளர்ந்து கொண்டுதான் இருக்கும். கண்கள் சரளைச் செம்மண்ணையும், நிறமழிந்து போன சுவர்களையும் பார்த்துக் கொண்டு, மூளை ஞாபகங்களை தேக்கிக் கொண்டு, நடக்கப் போவதை அனுமானித்து, பகுத்தறிந்து…இந்த சமயத்திலும் தேங்கின தண்ணீர் காலில் படாமல் தாண்டும் அளவுக்கு. இவனும், நாங்களும் ஒரே உலகத்தைப் பார்த்து, கேட்டு, உணர்ந்து ஒன்றாய் நடந்து போய்க் கொண்டு…இன்னும் இரண்டு நிமிடம் தான், ‘சட்’டென ஒருத்தன் விட்டுப் போய்விடுவான். ஒரு ஆன்மா காலி, ஒரு உலகமும்.

தூக்கு மேடை, சிறைச்சாலை இருந்த இடத்திலிருந்து தனியே தள்ளி இருந்த கோரை மண்டிய சின்ன வெளியில் இருந்தது. மூன்று பக்கங்களில் ஒரு கல் வரிசை வைத்துக் கட்டின செங்கல் சாவடி. மேலாக மரப்பலகை தளம். தளத்துக்கு மேலே இரண்டு தூண்கள். அவற்றை இணைத்து ஒரு விட்டம். விட்டத்துக்கு நடுவே தொங்கும் கயிறு. தூக்கப் போகிறவன், வெள்ளை நிற, சிறைச் சீருடையில், அவன் இயக்கப் போகும் கருவிக்கருகே காத்துக் கொண்டிருந்தான். அவனும் ஒரு கைதி. நரைத்த தலை. உள்ளே நுழைந்த எங்களைப் பார்த்து ஒரு கூழைக் கும்பிடு போட்டான். ஃப்ரான்ஸிஸ் கண் காட்டியதும், இன்னும் இறுகப் பிடித்த படி, கைதியை தூக்கு மேடை நோக்கி நகர்த்தி, தக்கி, முக்கி ஏணியில் ஏற்றிவிட்டார்கள். பின்னாடியே, தூக்கில் போடுபவனும் ஏறிப் போனான். கயிற்றைக் கைதியின் கழுத்தில் போட்டான்.

ஐந்தடி தூரத்தில் நாங்கள் காத்துக் கொண்டிருந்தோம். காவலர்கள் தூக்கு மேடையைச் சுற்றி ஒரு சுமார் வட்டமாய் நின்றார்கள். சுருக்கு முடிச்சு போடும் போது, கைதி அவனுடைய சாமி பேரைச் சொல்லிக் கூப்பிட ஆரம்பித்தான். உச்சஸ்தாயியில் “ராம்! ராம்! ராம்!”, மீண்டும், மீண்டும், “ராம்! ராம்! ராம்!” பயந்தாங்கொள்ளியின் அபயக்குரல் மாதிரி அலறாமல், அவசரமில்லாத தொனியில் மணி அடிக்கிறாற் போல, லயந் தவறாத உச்சாடனம். எசப்பாட்டாய் நாய் ஊளையிட்டது. தூக்கப் போகிறவன், இன்னுமும் மேடையில் தான் இருந்தான். ஒரு துணிப்பை போட்டு, கைதியின் முகத்தை மூடினான். துணியால் சன்னப் பட்டுப் போனாலும், அந்த சத்தம் ஒலித்துக் கொண்டு தானிருந்தது. “ராம்! ராம்! ராம்! ராம்!ராம்! ராம்!” திரும்பத் திரும்ப.

மேடையில் இருந்து இறங்கிவந்து, தூக்கில்நெம்புவதற்கானதடியைப்பிடித்தபடி, தூக்கில்போடுபவன் தயார். கைதியின்குரல்சன்னமாய், ஒருகணம்கூடநிதானம்இழக்காமல் “ராம்! ராம்! ராம்!”, தொடர்ந்துஒலித்துக்கொண்டிருந்தது. கீழேபார்த்தபடி, அதிகாரி, குச்சியால்தரையை மெல்லக் குத்திக்கொண்டிருந்தான். கைதியின்கூப்பாட்டைஎண்ணிக்கொண்டிருப்பதுபோலநின்றுகொண்டிருந்தான்; அம்பதுஅல்லதுநாறுவரைக்கும்போகட்டும்எனகணக்குவைத்திருந்ததுபோல. எல்லோரும் ‘ஒருமாதிரி’ ஆகிவிட்டோம். இந்தியாக்காரன்களுக்கு, பால் திரிந்தமாதிரிமுகம் மாறிப்போனது. கைகள் பிணைக்கப்பட்டு, முகத்தை மூடி மேடையில் நிறுத்தப் பட்டிருந்தவனின் கூப்பாட்டைக் கேட்டுக் கொண்டிருந்தோம்.ஒவ்வொரு கூப்பாடும், மிச்சமிருக்கும் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடி. அப்போது எங்கள் எல்லோருக்கும் ஒரேயொரு நினைப்பு தான். ‘அவனை சீக்கிரம் கொன்னு போட்டு விடுங்கள். சகிக்க முடியாத இந்த சத்தத்தை நிறுத்துங்கள்’

திடீரென முடிவெடுத்தவனாய், அதிகாரி தலை நிமிர்த்திய படி, கையிலிருந்த குச்சியை ‘விஷ்க்’ என்று வீசி ‘ச்சலோ!’ என்று கூவினான்.

‘சடக்!’ என்று ஒரு சத்தம். தொடர்ந்து மயான அமைதி. கைதியைக் காணவில்லை. கயிறு மட்டும் பின்னிக் கொண்டிருந்தது. நாயை பிடியிலிருந்து விட்டு விட்டோம். அது தூக்கு மேடைக்கு பின்னால் ஓடிப் போனது. போன வேகத்தில் நின்று, குரைத்தது. பிறகு, ஒரு மூலையில் ஒடுங்கி, எங்களை அச்சத்துடன் பார்த்தது. நாங்களும் மேடைக்குப் பின்னால் போனோம். கால் விரல்கள் தரையைப் பார்த்து விறைத்த வாக்கில், மெதுவாய் சுற்றிய படி ஜடமாய்த் தொங்கிக் கொண்டிருந்தான்.

அதிகாரி, குச்சியால் அந்த வெற்றுடம்பைக் குத்திப் பார்த்தான். அது லேசாக சாய்ந்தாடியது. ‘கத முடிஞ்சிரிச்சி!’ அதிகாரி, தூக்கு மேடையின் கீழே இருந்து பெருமூச்சு விட்டபடி நகர்ந்தான். அவன் முகத்திலிருந்த கடுப்பு போய் விட்டது. கைக்கடிகாரத்தை ஏறிட்ட படி, ‘மணி எட்டடிச்சு எட்டாயிரிச்சி. நல்ல வேளை, இன்னிக்கி இவ்வளவு தான்’ என்றான்.

துப்பாக்கிமுனை கத்திகளை உருவி எடுத்திக் கொண்டு காவலர்கள் கிளம்பி விட்டார்கள். நாய், சேட்டை பண்ணியதை உணர்ந்த மாதிரி, வாலையிடுக்கிக் கொண்டுஅவர்கள் பின்னாலே நழுவியது. நாங்களும், தூக்கு மேடை இடத்திலிருந்து கிளம்பி, சாகக் காத்திருக்கும் கைதிகளின் அறைகளையும் கடந்து, சிறைச்சாலையின் நடுவில் இருந்த பெரிய வெளி வழி நடந்தோம். காவலர்களின் லத்திக் கண்காணிப்பில், கைதிகள் நாஷ்டா பெற்றுக் கொண்டிருந்தார்கள். தகரக் கும்பாக்களை ஏந்திய படி, நீண்ட வரிசைகளில் குத்துக்காலிட்டு அவர்கள் உட்கார்ந்திருக்க, இரண்டு காவலர்கள், வாளியிலிருந்து சோற்றை அள்ளிப் போட்டுக் கொண்டிருந்தார்கள். தூக்கில் போடுவது முடிந்த பிறகு, இந்த சாதாரண தினப்படி நிகழ்ச்சி, ஒரு ஆறுதலான காட்சி. ‘ஒரு வழியாய் முடிந்து போனது’ என்பதில் எல்லோருக்குமே ஒரு நிம்மதி. பாடலாம், ஓடலாம் இல்லை சத்தமாய் சிரிக்கலாம் என்று ஒரு உத்வேகம். கொஞ்ச நேரத்தில், எல்லோரும் கலகலப்பாகி விட்டோம்.

ஒரு ஐரோப்பிய-ஆசிய பொடியன், என் பக்கத்தில் வந்து, தூக்கு மேடை இருந்த திசையில் கண் காட்டி அர்த்தமாய் சிரித்தான். ‘உங்களுக்கு கத தெரியுமா, சார்? நம்மாளு இல்ல, (செத்தவனை சொல்கிறான்) அவரு முறையீட்ட தட்டிக் கழிச்சிட்டாங்கன்னதும், அப்டியே பயத்தில ஒன்னுக்குப் போயிட்டாப்ல! …ஒரே ஓரு சிகரெட் வாங்கிக்க சார்! இந்த வெள்ளி டப்பா பிடிச்சிருக்கா சார்? ரண்டு ரூவா எட்டணா தான் சார்! டப்பாக்காரன்ட்ட வாங்கினது. அசல் ஐரொப்பா பாணி சார்!’

ஏனென்று தெரியாமலே நிறைய பேர் சிரித்தார்கள்.

அதிகாரியோடு நடந்து வந்த ஃப்ரான்ஸிஸ் உளறிக் கொட்டிக் கொண்டு வந்தான். “எல்லாம் நல்ல படியா நடந்திரிச்சி சார்! ‘இப்டி!’ங்கிறதுகுள்ளாற முடிஞ்சி போச்சி! ஆனா, எல்லா தடவயும் இப்படி இல்ல சார். சில சமயம் டாக்டர் எல்லாம் வந்து, ‘செத்துட்டானா?’ன்ட்டு காலப் பிடிச்சி இழுத்துப் பாத்து…ச்சே! துப்பரவா பிடிக்காத விசயம்”

“என்ன, அளம்பறியா? ம்? ” என்றான் அதிகாரி.

“அப்படி இல்ல சார்! செல சமயம் இவனுகள சமாளிக்க முடியாது. ஒரு தடவ, ஒர்த்தன இட்டார போனப்போ, கூண்டில இருந்த கம்பிகள இறுக்கிப் பிடிச்சிக்கிட்டான். சொன்னா நீங்க நம்ப மாட்டீங்க சார்! நாங்க ஆறு பேரு, காலுக்கு மூணு பேரா பிடிச்சி இழுக்க வேண்டி ஆயிப் போச்சு! நா அவன்ட்ட இதமா, பதமா சொல்லிப் பாத்தேன். ‘இந்தா பாருப்பா! ஒன்னால எங்களுக்கு எவ்வளவு சிரமன்னு யோசிச்சிப் பாரு!’ ம்ஹூம்! அவன் அசரல. ரொம்பவே படுத்திட்டான்!”

என்னையறியாமல் பலமாக சிரித்து விட்டேன். எல்லோரும் சிரித்தார்கள். அதிகாரியும் மெதுவே புன்னகைத்து விட்டு, ‘என்ட்ட, கார்ல ஒரு பாட்டில் விஸ்கி இருக்கு. வாங்க, ஆளுக்கொரு ரவுண்ட் வரும் னு நெனைக்கேன்’ கொஞ்சம் சுமூகமாகவே கூப்பிட்டான்.

சிறைச்சாலையின் பெரிய இரட்டைக் கதவுகளைத் தாண்டி, வீதிக்கு வந்தோம். ஒரு பர்மிய நியாயஸ்தன், ‘Pulling at his legs!’ திடீரென குலுங்கி சிரித்தான். எங்களுக்கும் சிரிப்பு வந்து விட்டது. ஃப்ரான்ஸிஸ் சொன்ன கதை, அந்த சமயத்தில் அபூர்வ ஹாஸ்யமாய்ப் பட்டது. ஐரோப்பாக்காரன், உள்ளூர்க்காரன் எல்லாரும், ஒன்றாக சகஜமாய்த் ’தண்ணி’யடித்தோம். நூறடி தள்ளி, செத்தவன் கிடந்தான்.
Original: A Hanging - By George Orwell