19 March 2023

உலகச் சிறுகதைகள் 13 ஹொவாவோ கிம்மரேஸ் ரோஸா

கதை அல்லது புனைவு என்பது, வெறும் எழுத்துக்களை வைத்துக்கொண்டு, கண்ணெதிரில் நடப்பதைப் போன்ற உணர்வை வாசகனுக்கு உருவாக்குவதுதான். மிகச்சிறந்த கலைஞர்கள், மிகக்குறைந்த தீற்றல்களில் தத்ரூபத்தைத் தருவித்துவிடுகிற தேர்ந்த ஓவியனைப்போல மிகக்குறைந்த சொற்களைப் பயன்படுத்தி வியப்பில் ஆழ்த்திவிடுகிறார்கள். இன்னும் ஒருபடி மேலே போய், சில பகுதிகளை வாசகனாகப் புரிந்துகொள்ளும்படிச் சொல்லாமலும் விட்டுவிடுகிறார்கள் - குறிப்பாக இலக்கிய எழுத்தாளர்கள்.

என்ன எழுதியிருக்கிறதுஎப்படி எழுதியிருக்கிறது என்பதில் மட்டுமின்றி - எதை எழுதாமல் விடுகிறான் என்பதிலும் இருக்கிறது இலக்கியத்தரம். 

'இப்படி' இருக்கிற அம்மாவையும் மகளையும் வைத்துக்கொண்டு மனைவியும் இல்லாத ஒருவன் வாழ்வதைப் பற்றி - வாசகன் நினைத்துப்பார்த்துக்கொள்ளட்டும் என்பதைப்போல - கதையில் பெரிதாக எழுதுவே சொல்லப்படவில்லை. ஆனால்இந்தக் கதையைப் படிக்கிற யாராலும் அதைக் கொஞ்சமும் நினைத்துப் பார்க்காமல் இருந்துவிடமுடியாது. அதுதான் கதையே என்றாலும் ஆசிரியக் கூற்றாகக் கூட கதையில் அதைப்பற்றிய மெலோடிராமாவே இல்லை என்பதை கவனிக்கவேண்டும். 

வில்லனே இல்லாத கதை. விதியை வில்லனாக்குகிற கதைகள் பெரும்பாலும் வெற்றிபெற்றுவிடும் என்பது எழுதப்படாத விதி. தீர்வே இல்லாத நிலையைக் கதையின் கருவாக எடுத்துக்கொண்டு, எழுத்தாளர்களால் எதிர்மறையாகவே சித்தரிக்கப்படும் அரசாங்கம் கூட உதவுவதாகக் காட்டப்படுகிற, 60 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டிருக்கிற இந்தக்கதை, இன்று வாசிப்பவனையும் நெகிழ வைப்பதாக எப்படி இருக்கிறது. 

புனைவு என்னும் புதிர் - உலகச் சிறுகதைகள் 13 ஸொரொக்கோவும் அவனுடைய அம்மாவும் மகளும்