02 March 2023

ஆபீஸ் அத்தியாயம் 25 ஏன்

தூரத்தில் போலீஸைப் பார்த்ததும் போலீஸ் நம்மைப் பார்க்காவிட்டாலும் விளக்கில்லாத சைக்கிளை வீட்டிலிருந்தே தள்ளிக்கொண்டு வருவதைப் போலஅவர் முன்னால் இறங்கிச் செல்வதில்லையா அதைப்போல், போலீஸுக்காக இறங்காததைப்போல நாமும், நம்மைத் தாண்டினால் ஏறி ஓட்டிக்கொண்டுதான் செல்லப்போகிறான் என்று நன்றாகவே தெரிந்தாலும் நமக்காக இறங்கியிருக்கிறானே அந்த மரியாதையே போதும் என்று போலீஸ்காரரும் பரஸ்பரம் திருப்திபட்டுக்கொள்வதைப் போல ஏசியும் அவனும் சமாதானத்தில் இருப்பதாக எண்ணி தனக்குத்தானே சிரித்துக் கொண்டான். எனவே எவ்வித டென்ஷனுமில்லாமல் செக்‌ஷனில் ஜெண்டில்மேனாக இருந்தபடியே - டிரைவ் இன்னில் பச்சையப்பாஸ் பையனாக இருந்துகொண்டு இருப்பதைப்போல - ஆபீஸ் வளாகத்துக்குள்ளேயே ஜாலியாக கிளுகிளுத்துக்கொண்டு இருந்தான் அவன். 

அந்த நேரத்தில் வந்தால், எடுப்பாகத் தெரியும் நான்கு பெண்களின் அணி ஒன்று அரட்டையடித்துச் சிரித்தபடி கேண்ட்டீனில் இருந்து வெளியில் வரும் என்பது தற்செயலாகத் தெரியவந்திருந்தது. ஒல்லியாக வெள்ளையாக வெள்ளைக்காரியைப் போல ஒட்டிய கன்னங்களுடன் இருந்த ஒன்றைத் தவிர மற்ற மூன்றும் அதற்கு நேர் எதிராக பொம்பொம்மென்று இருந்தன. எல்லாம் புடவையில்தான் இருந்தன என்றாலும் அமேரிக்க தூதரகத்தில் வேலை பார்க்கிற நம் ஊர் பெண்கள்சீருடை போல பாதிப்பக்கம் காத்தாட இருக்கும்படியாககவனமாக சேலையை உடுத்திக்கொண்டு இருப்பதைப் போல இருந்தன.