அவ்வளவு வெடிச்சத்தங்களுக்கிடையிலும் தீபாவளியன்று எட்டு மணிக்குதான் எழுந்தான்.
கிண்னத்தைக் கொண்டுவந்தாள் அம்மா.
பல்தேச்சுட்டு அப்படியே தலைக்கு எண்ணெய் வெச்சுக் குளிச்சுடுடா என்றாள்.
பே. உனக்கு வேற வேலயே கிடையாது. எல்லாத்தையும் உன்னோட வெச்சுக்கோனு எத்தன தடவை சொல்றது என்று எரிந்துவிழுந்தான்.
குளித்துமுடித்து வந்தவன், பட்சணம் என்று கொடுத்ததை இரண்டு கடி கடித்துவிட்டு, உனக்குதான் சப்பாத்தியத் தவிர உருப்படியா ஒண்ணும் பண்ணவராதே ஏன் கஷ்டப்பட்டு காசைக் கரியாக்கி அடுத்தவங்களையும் கஷ்டப்படுத்தறே.
பாயசமாவது கொஞ்சம் சாப்பிடுடா என்று சேமியா பாயசத்தை டபராவில் ஸ்பூனுடன் நீட்டினாள். சிவப்பும் வெள்ளையுமாக சேமியாக்கள் கிடந்தன.
சேமியாவையும் தீய்ச்சிட்டியா.
சுவாமி வெளக்க ஏத்திட்டு இந்தப்பக்கம் திரும்பறதுக்குள்ள கொஞ்சம் தீஞ்சுடுச்சு.
சாமி சாமினே கெடந்தா தீஞ்சிப்போகாம என்ன செய்யும். வெளக்க ஏத்திட்டு உடனேவா திரும்பியிருப்பே அங்கையே நின்னு தபஸ்ஸில்ல செஞ்சிருப்பே என்று சொல்லி சிரித்ததும் அவன் இந்த மட்டாவது தன்னிடம் பேசுகிறானே என்கிற திருப்தி அவள் முகத்தில் பரிபூரணமாகத் தெரிந்தது. அதை கவனிக்காமல், இனிப்பு என்பதால் சேமியா பாயசத்தை இரண்டாவது முறை கேட்டு வாங்கித் தின்றுவிட்டு, அடியில் இருந்த பாலை உறிஞ்சிவிட்டுக் கிளம்பினான்.
அவளுக்கு சந்தோஷம் பிடிபடவில்லை. கதவுக்கு வெளியில் வந்து கீழே எட்டிப் பார்த்தவள்,அவன் வண்டியெடுத்துக்கொண்டு போனபின்பும் கொஞ்சநேரம் அங்கேயே நின்று கொண்டிருந்துவிட்டு கண்களை முந்தாணையில் துடைத்தபடி உள்ளே வந்தாள்.