05 March 2023

ஆபீஸ் அத்தியாயம் 35 இடம்

சாப்பாடு எப்படி. 

நல்லா இருந்துது. எனக்குதான் அவ்ளோ சாதமெல்லாம் சாப்பிட முடியாது. 

என்னங்க இது. சோறு திங்க சொணங்கற ஆளை மொதல் தடவையா பாக்கறேன் என்று சொல்லிச் சிரித்தார். 

இல்ல பொதுவாவே சாதத்தை விட சப்பாத்தி தோசை பரோட்டா மாதிரி டிபன்தான் எனக்குப் பிடிக்கும். 

வீட்ல. 

வீட்லையும் அடிக்கடி சப்பாத்தி உப்புமா இருக்கும். 

காத்தால எங்க வீட்லையும் இட்லி தோசைதான். 

இல்லயில்ல எங்க வீட்ல நைட்ல, சமயத்துல மத்தியானம் கூட சப்பாத்தி சப்பிடுவோம். 

நீங்க தமிழ்தான. ஐயருங்க வீட்லையும் இங்கயெல்லாம் சோறுதான திம்பாங்க. 

தமிழ்தான். ஆனா... 

உங்களைப் பாத்தா தமிழ் மாதிரி தெரியிலங்க. மீச தாடிய எடுத்துட்டா வடக்கத்தி நடிகர் மாதிரிதான் இருப்பீங்க. 

மராத்தி என்றான். 

தம் கணிப்பு உண்மையாகிவிட்டதில் குதிக்காத குறையாய், அதான பாத்தேன் என்று துள்ளினார். 

எழுத படிக்கல்லாம் தெரியாது. வீட்ல மட்டும் பேசிப்போம். அம்மா கன்னடம் அப்பா மராத்தி.

அடேங்கப்பா அந்தக் காலத்துலையே கலப்புத் திருமணமா. 

அப்படியெல்லாம் இல்லே. ரெண்டுபேரும் ஒண்ணுதான். பேசற பாஷை மட்டும் வேற அவ்வளவுதான். அவங்களுக்கும் கூட எழுத படிக்கல்லாம் தெரியாது.

இந்தப் பக்கம், வீட்ல கன்னடம் பேசற நாயக்கருங்க இருக்காங்க. பெரியாரே அப்படித்தான. 

நீங்க வேற. நாங்க பேசற மராத்தியும் ஒரிஜினல் மராத்தியில்ல கன்னடமும் ஒரிஜினல் கன்னடமில்லே. எல்லாம் லோக்கல்.