24 March 2023

ஆபீஸ் அத்தியாயம் 42 உட்காருதல்

இருந்த பணத்தில் சிக்கணமாக பிரெட் ஆம்லேட்டுடன் மதிய உணவை முடித்துக்கொள்வதற்காக பல்கலைக் கழகத்திற்கு பஸ் பிடித்தவன், பெல்ஸ் ரோடு கனையாழி ஆபீஸ் கண்ணில்பட்டதும் படக்கென இறங்கிக்கொண்டான். சும்மா உள்ளே போனவன், குனிந்து எழுதிக்கொண்டிருந்த  தி. ஜாவைப் பார்க்க நேர்ந்ததில் மெய்சிலிர்க்க,பரவசப்பட்டுப்போய் வாயில் சத்தம் வராமல், அறை வாயிலில் நின்றபடியே வணக்கம் வைத்தான். நிழலாடியதில், நிமிர்ந்து பார்த்தவர், 

'நீங்க?' என்றார். 

பெயரைச் சொன்னதும், 'அடடா நீங்களா. உக்காருங்கோ. தோ வந்துடறேன்.' என்று எழுதுவதில் மும்முரமானார். 

சரசரவென அவர் எழுதிக் கொடுத்துக்கொண்டிருந்த தாளைகணையாழியின் கம்பாஸிடரான சுவாரசிய ஜொள்ளு பெரியவர், வந்து நிற்பதும் வாங்கிக்கொண்டு போவதுமாக இருந்தார். 

எப்படி எழுதுகிறார் என்று பிரமித்துப்போய் பார்த்துக்கொண்டிருந்தான். ஒரே ஒருமுறை மட்டும் உள்ளே போனவரை அழைத்து, கொடுத்த பேப்பரின் இறுதியை ஒருதடவை பார்த்துக்கொண்டு கொடுத்துவிட்டார். எப்படிவடையைத் தட்டி வாணலியில் போடுவதைப்போல, துளிகூட சிரமமில்லாமல்இப்படி ஒருவரால் எழுதிக்கொண்டே போகமுடியும் என்றுஎழுத்தில் இருக்கிற சரளத்தைப் போலவே அவர் எழுதுகிற விதத்தில் இருந்த ஓட்டத்தையும் பார்க்கப் பார்க்க ஆச்சரியமாக இருந்தது. அந்த மாத அத்தியாயத்தை முடித்துக் கொடுத்துவிட்டு, 'வாங்கோ காபி சாப்பிடலாம்' என்றார். அதுகூட நளபாகத்தின் தொடர்ச்சியோ என்பதைப்போல கிறங்கடித்தது. 

ஆபீஸ் அத்தியாயம் 42 உட்காருதல்