02 March 2023

ஆபீஸ் அத்தியாயம் 22 கெளரவமாக வாழ்வது எப்படி

பரீக்‌ஷாவில் இருந்தது என்னவோ ஒன்றரை வருடம்தான் என்றாலும் சுற்றிலும் இலக்கியவாதிகளாக இருந்ததாலோ என்னவோஉள்ளே வரும்போதுமு. மேத்தா முற்போக்கு என கல்லூரி கவிதைப் போட்டிகளின் விட்டகுறை தொட்டகுறையாக ஊசலாடிக்கொண்டிருந்தவன்பரீக்‌ஷாவை விட்டு வெளியேறும்போது  தீவிர இலக்கியம் சினிமா என்று முழுவதுமாகத் தலைகுப்புறக் குதித்துவிட்டிருந்தான்.
 
பரீக்‌ஷாவை விட்டு விலகினாலும் மாலை நேர பீட்டர்ஸ் காலனி சந்திப்புகள் குறையவில்லை. 

எதற்கோபேச்சுவாக்கில் தருமுவை, தட் ஃபெலோ என்று ஞாநி குறிப்பிடஅப்படி எப்படிச் சொல்லப்போயிற்று என்று அவருடன் பெரிய சண்டையே ஆகிவிட்டது. 

உழைக்கமாட்டேன் என்று சொல்பவன். தன் தேவைகளுக்காகக் கூட வேலை செய்யமாட்டேன் என்பவன் சமூகப்பொறுப்பற்ற ஒட்டுண்ணி. அப்படியாப்பட்ட ஆளையெல்லாம் நான் மதிக்கமாட்டேன் என்றார். 

அப்படினா அவர் கவிதை எழுறது உழைப்பு இல்லையா. 

அவன் நல்ல கவிஞன்தான். அத நா மறுக்கல. 

அப்பறம் என்ன. 

கமான். எத்தனையோ பேர் எழுதறாங்க. எல்லாரும் இப்படியா இருக்காங்க. அதுவும்போக,அவன் இப்ப என்ன பெருசா எழுதறான். எல்லாரோடையும் சண்டை மட்டும்தான போட்டுக்கிட்டு இருக்கான். இதான் இலக்கிய வேலையா.