03 March 2023

ஆபீஸ் அத்தியாயம் 26 விதி

பகீலென்றது. குசு பெறாத விஷயம், கலெக்டர் வரை போய்விட்டதா. பாபுவின் முகத்தைப் பார்க்ககவலை கலக்கமானது. 

சாவித்ரியிடம் சொல்லலாமா என்று தோன்றியது. அவன் யோசிப்பதைப் பார்த்து,

நேரா போய் கலெக்டரைப் பாரு சார். நல்ல மனுசன். தெரியாம நடந்துருச்சினு சொல்லு. திட்டிட்டு விட்டுருவாரு என்றான் பாபு. 

இரண்டு லிஃப்ட்டுகளும் 5ஆவது மாடியில் நின்றிருந்தன. பரபரவென படியேறி மூன்றாவது மாடிக்குப் போனான். மூடியிருந்த கலெக்டரின் பிஏவின் அறைக்கதவிற்கு வெளியில் ஜன்னல் சுவரையொட்டி நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. உட்கார்ந்திருந்த கூர்கா எழுந்து யாரூ என்றான். 

பெயரைச் சொன்னதும் பாபு சொல்லுச்சா என்று, தான்தான் அவனிடம் சொன்னதாகக் கூறி இளித்தான். இதற்கெதற்கு இளிப்பு என்று எரிச்சலாக இருந்தது. 

உல்லே ஏசி இருக்கூ. வெய்ட் பண்ணூ. இப்படி உக்காரூ என்று சொல்லிவிட்டு அவனும் அமர்ந்துகொண்டான். இதுவே தான் இன்ஸ்பெக்டராக இருந்தால் இவன் இப்படி உட்காருவானா என்று தோன்றிற்று. இன்ஸ்பெக்டராக இருந்தால், தானே ஏசியிடம் ஏன் முறைத்துக்கொள்ளப் போகிறோம். விட்டல் ராவ் மாதிரியல்லவா குழையடித்துக்கொண்டு இருந்திருப்போம் என்று தோன்றவே, மெல்ல சிரித்துக்கொண்டான். கொஞ்சம் தெம்பு வந்ததைப் போல இருந்தது.

இருந்தாலும் குர்த்தாவின் கையை இழுத்து மேலே விட்டுக்கொள்வதும் பின்பு தவறாகப் போய்விடுமோ என்று கீழே இழுத்து விட்டுக்கொள்வதுமாக இருந்தான். கூர்க்காவின் பேச்சைத் தவிர நீளமாக இருந்த அந்த வராண்டாவே அமைதியாக இருந்தது. அதுவேறு அவனுடைய கலக்கத்தைக் கூட்டிற்று.