05 March 2023

ஆபீஸ் அத்தியாயம் 33 மண்ணும் மனிதர்களும்

ஜீவா, உள்ளேயிருந்து வெள்ளைச் சட்டை வெள்ளைப் பேண்ட்டுடன் வந்தார். குளிச்சிட்டு வந்தா டிபன் சாப்பிடலாம் என்றார். கிட்டத்தட்ட டூட்டிக்குக் கிளம்பிவிட்டவர் போல இருந்தார். பரபரவென பல் விளக்கிக் குளித்து முடித்துவிட்டு வந்தவன் அவருடன் மேசையில் அமர்ந்து இட்லி சாப்பிட்டான்


காலையில் டிபன் சாப்பிடுகிற பழக்கமெல்லாம் அவன் வீட்டில் இருந்ததே இல்லை. காலையில் எழுந்ததும் காப்பியோடு சரி. அப்புறம் மூன்று வேளையும் சாப்பாடுதான். அதையும் டேபிள் நாற்காலியில் உட்கார்ந்து சாப்பிட நேர்ந்தது வேறு ஓட்டல் போல உணரவைத்தது


அதற்குமுன் ஷங்கர் ராமன் வீட்டிலும் பத்மினி கோபாலன் வீட்டிலும்தான் அப்படி சாப்பிட்டிருந்தான். இரண்டுமே, ஒருகாலத்தில் ஊரில் பண்ணையார்களாக பெரும் செல்வமும் செல்வாக்குமாக இருந்த குடும்பங்கள். இந்த ஊரில் இவர்களும் அப்படித்தான் இருக்கவேண்டும் என்று தோன்றிற்று. அவனுக்கு, சொந்த வீடு இருந்தாலே அவர்கள் பெரிய பணக்காரர்கள் என்கிற நினைப்பு சமீபகாலம்வரை இருந்தது. அவனுக்குத் தெரிய சொந்த வீட்டில் வசித்தவர்களெல்லாம் பெரிய தனவந்தர்களாகவே இருந்தனர். அப்போது இல்லாவிட்டாவிட்டாலும்கூட ஒரு காலத்தில் பெரிய குடும்பங்களாக இருந்தவர்களாக இருந்தார்கள்


நீங்க ஆபீஸ் போய்ட்டு வந்துடுங்க. சாய்ங்காலம் தங்கறதுக்கான இடம் தேடலாம். சரியான இடம் கெடைக்கறவரை இங்கையே இருந்துக்கலாம் என்றார்


ஆபீஸ் அத்தியாயம் 33 மண்ணும் மனிதர்களும்