14 December 2011

சென்னை உலக திரைப்படவிழா 14 டிசம்பர் - ஜோனா

JOANNA / Dir: Feliks Falk / Poland / 2010 / 108 / 

உல்க திரைப்பட விழாவுக்கு வந்தாலும் ஷோபா சக்தியின் கப்டன் விடாமல் துரத்துமா? புலிகளுக்கு எதிரான விமர்சனம் அதில் இருப்பதால் அது புளிக்கிறது என்று சொல்பவர்களைப் பார்த்து உலகத்துக் கலை இலக்கியம் இளிக்கவே செய்யும் என்பதற்கு ஜோனா என்கிற இரண்டாம் உலகப்போரின் பின்னணியில் எடுக்கப்பட்ட இந்த போலந்து படம் சிறந்த உதாரணம்.

ஜோனா என்கிற போலந்துப் பெண், சர்ச்சில் பிரார்த்தனை பெஞ்சுக்கடியில் பதுங்கியிருக்கும் குட்டிப்பெண்ணைக் கண்டு வீட்டிற்கு அழைத்துச் செல்கிறாள்.

மேலிருக்கும் முதலாவது இரண்டாவது புகைப்படங்களைப் பார்த்தீர்களல்லவா? இந்தக் கொடுமையை செய்தது ஆக்கிரமிப்பு ஜெர்மானியப் படையா?

இல்லை. தலைமறைவில் இயங்கும் போலந்து நீதிமன்றத்தின் பேரால் அவளை அடித்து அவளது வாயை இருவர் பொத்தியிருக்க வேசைக்கு வழங்கும் தண்டனையாய் அவள் கூந்தலை சிரைத்து அனுப்பி வைக்கிறது.

எதற்காக இந்த தண்டனை?ஜெர்மானிய எஸ் எஸ் அதிகாரியுடன் குலாவியதற்காக. 

அவளது ஆக்கிரமித்திருக்கும் நாஜிப்படையின் எஸ் எஸ் அதிகாரியுடன் அவள் ஏன் உறவு வைக்க நேர்ந்தது?

இந்தக் கேள்வியை யாருமே கேட்கத் தயாரில்லை, உண்மையில் என்ன நடந்தது என்பது யாருக்கும் வேண்டியிருக்கவில்லை அவள் குடும்பத்தினருக்கு உட்பட. எல்லோர் கையிலும் தயாராய் ஒரு துரோகி முத்திரை இருக்கிறது. அவளிடம் முதுகு இருக்கிறது. அப்புறம் என்ன குத்து குத்து என்று குத்தித்தள்ள வேண்டியதுதானே. அதுதான் நடக்கிறது.

கப்டன் போலவே இதில் இன்னொரு ஒற்றுமை என்னவென்றால், தப்பும் தவறுமான ஷாட். 

அவள் வீடிருக்கும் கட்டிடத்தின் சுவரை ஒட்டிய நடைபாதையில் நின்றபடி, ’இன்னும் இரண்டு மணி நேரத்தில் இந்த ஊர்விட்டு செல்கிறேன்’ என்று எஸ் எஸ் அதிகாரி கூறுகிறான் கூடவே அவளது கணவனின் இறப்பையும் தெரிவிக்கிறான். அவள் கலங்கி அவன்மேல் சாய்வதை அந்தக் கட்டிடத்தின் மாடியில் இருக்கும் மூடப்பட்ட கண்ணாடி ஜன்னலின் திரையை விலக்கிப் பார்ர்த்துத் தெரிந்துகொள்ளும் ஒருத்தியின் மூலமாகவே இவர்களுக்குள்ளான கள்ள உறவு போலந்தின் தலமறைவு இயக்கத்திற்குத் தெரியவந்து அவள் தண்டனைக்கு உள்ளாக நேர்கிறது.

கண்ணாடி போட்ட மாடி ஜன்னலில் தலையைக்கூட வெளியில் நீட்ட முடியாதபோது சுவரை ஒட்டி எங்கோ கீழே நிற்பவர்களை எப்படிப் பார்க்க முடியும். அவள் பர்ப்பது என்ன சாலைக்கு அந்தப்புறம் எதிர்சாரியில் இருக்கும் வீட்டின் ஜன்னலா என்ன? கதையில் எவ்வளவு முக்கியமான இடத்தில் எவ்வளவு பெரிய ஓட்டை. இந்தத் தவறான ஷாட்டை வைத்ததன் மூலமாக இந்தப் படமே அதன் சாரத்தை இழந்துவிட்டது என்று நமக்கும் கொட்டை இருக்கிறது என்று காட்டிக்கொள்ள வேண்டுமானால் கும்மலாம்.

யாரோ ஒரு போலந்து பிரஜையல்ல ஒட்டுமொத்த போலந்தின் சார்பாக ஆக்கிரமிப்பு கொடூர ஜ்ர்மானியருடன் களத்தில் தலைமறைவாக நின்று உயிரைத் திரணமா மதித்து போராடிக்கொண்டிருக்கும் ஒரு இயக்கம் கேள்விகூட கேட்காமல் தண்டனை வழங்குவதாகக் காட்டுவதன் பின்னால் இருக்கும் அரசியல் எவ்வளவு மோசமானது? அப்புறம் அது எப்படி கலைப் பிரதியாக முடியும்.? இதை இப்படியும் பார்க்கலாம் அப்படியும் பார்க்கலாம் எப்படியும் பார்க்கலாம் என்றெல்லாம் எவரும் கேட்டதாகவோ சொன்னதாகவோ தகவல் இல்லை. உலக அளவில் எம்டிஎம் தமிழுக்குக் கிடைத்த அபூர்வக் கொடை என்பதால் தமிழில்தான் இப்படியான விவாதங்கள் எழ முடியும்..

திரும்பத் திரும்ப யூதர்களுக்கு எதிரான கொடுமைகளைச் சித்தரிக்கும் படங்களை எவ்வளவு என்றுதான் பார்ப்பது என்று சலித்துக்கொள்வோர் தயவுசெய்து இதைப் பார்த்துவிட்டுச் சொல்லட்டும், தங்களது சலிப்பு நியாயமானதுதானா என்று.

என்றாவது ஒருநாள் நீங்கள் இந்தப் படத்தைப் பார்க்க நேர்ந்தால் கிடைக்க இருக்கும் அனுபவத்தை இதற்கு மேலும் கெடுக்க விரும்பவில்லை. இந்தப்படத்தை தரவிறாக்கம் செய்யும் சுட்டி யாருக்கேனும் கிடைத்தால் எனக்கும் பகிருங்கள் பலருக்கும் உதவியாய் இருக்கும்.


(ஜோனாவை யூதப்பெண் என்று தவறாக எழுதியிருந்தேன் மறுநாள் படம் பார்த்த கவிராஜன் அவள் யூதப்பெண் இல்லை என்றும் அவளுக்கு தண்டனை வழங்குவதும் யூத இயக்கமல்ல, நாஜிக்களை எதிர்க்கும் போலந்து தலைமறைவு இயக்கமே என்றும் சுட்டிக்காட்டினார். சினிமாவில், டிவிடி போல நிறுத்திப் பார்த்து சந்தேகத்தை நிவர்த்தித்துக்கொள்ள வாய்ப்பில்லாத சினிமா என்பதால் ஏற்பட்ட கவனக்குறைவுக்கு மன்னிக்கவும். இரண்டு தவறுகளையும் திருத்தி இருக்கிறேன்.)

12 படங்களுக்கு இடையிலான சூதாட்டத்தில் ஐநாக்ஸில் வைத்த என் குறி இன்றைக்குத் தப்பவில்லை அதுவும் முதல் படத்திலேயே என்பதில் கொஞ்சம் மிதப்பாய்த்தான் இருக்கிறது.

இதுபோல் ஒன்பது படங்கள் பார்க்கக்கிடைக்குமானால் இந்த வருடத்து உலக திரைப்படவிழாவின் அதிருஷ்டம் என்பேன்.


நாளை 15.12.11 அன்றுசத்யம் ஸ்டூடியோ 5இல் 7.30PMக்கு இந்தத் திரைப்படம் ரிப்பீட்டேய்.