30 December 2011

எக்ஸைல்

ஒரு நாவலை எப்படி எழுதவேண்டும் என்று எனக்குத்தெரியாது. தெரிந்திருந்தால் எழுதியிருக்கமாட்டேனா? ஆனால், நாவலை எப்படி வேண்டுமானாலும் எழுதலாம் அதில் சம்மந்தா சம்மந்தமில்லாமல் எதை வேண்டுமானாலும் எழுதலாம் என்பது சாரு நிவேதிதாவுக்குத் தெரிந்திருக்கிறது. அதனால்தான் ஆண்டுக்கொன்றாய் எழுதிக்கொண்டே இருக்கிறார் போலும். ஆரம்ப வாசிப்பில், ஆசிரியரின் மேலை வாசிப்பு காரணமாக அதை அப்படியே இறக்கிக் கீழ் வாசிப்பாக எழுதிக்கொண்டு போவதுபோல் தோன்றியது. 

ஆட்டோஃபிக்‌ஷன் மேல் பாரத்தைப்போட்டு, எழுதுவதையெல்லாம் நாவலாக்கிவிடலாம் போல இருக்கிறதே என ஆச்சரியமாக இருந்தது.. சாதாரண விஷயத்தை சிறுகதையாக எழுதினால் கூட நம்மை ஏற்க மாட்டேன் என்கிறார்கள். நமக்கு நாமே வைத்துக்கொண்ட தாண்டு கழியே தடையாய் இருப்பது மகிழ்ச்சியே.

நாவல் முடிய இருக்கையில் எழுதப்பட்ட கடிதமாகக் கூறப்படும், உதயா அஞ்சலிக்கு எழுதும் கடிதமும் அஞ்சலி உதயாவுக்கு எழுதும் கடிதமும் அப்புறம் அவர்கள் இருவரும் பண்ணுவதுமாக கவர்ச்சிகரமாக நாவல் ஆரம்பிப்பதே ரொம்ப சீப்பாக இருக்கிறது. 

உதயா அஞ்சலிக்கு எழுதிய கடிதம் வலிந்து எழுதப்பட்ட தோற்றமே காட்டுகிறது. என்னதான் லகுவாக வாசிக்க முடிகிற விதத்தில் எழுதப்பட்டிருந்தாலும் அடர்வின்மை காரனமாய் போலி உணர்வாய் இளித்துவிடுகிறது. எளிதாக வாசிக்க முடிவது என்பது ஒரு நல்ல அம்சம், அதற்காக எளிமை மட்டுமே உயர்வுக்கு உத்தரவாதமன்று.

உறுப்புகள் எல்லோரிடமும் இருப்பவைதான். சொல்லும் விதத்திலும் தொனியிலும் அதே விஷயம் உடற்கூறு விளக்கமாகவும் கிளுகிளுப்பாகவும் வசையாகவும் மாறிவிடுவதில்லையா. ஃபாரீனில் உயர் இலக்கியவாதிகளால் எழுதப்படும் நாவல்களில் இருக்கும் அதே உறுப்புகளை வைத்துத்தானே நானும் எழுதி இருக்கிறேன் அதே விஷயம் அங்கே உயர்வாகவும் இங்கே இழிவாகவும் பார்க்கப்படுவது ஏன்?

மேலோட்டப் பார்வைக்கு இது மாபெரும் கேள்விபோலவும் இதை விமர்சிப்பவனெல்லாம் இலக்கியப் போலி என்றும் மேலோட்டமான வாசகர்களுக்குத் தோன்றக்கூடும். ஆனால் உறுப்பு மேட்டரோடுகூட மனித மனத்தின் இறுக்கம் நெகிழ்வு எப்படிச் அங்கு எப்படிச் சொல்லப்பட்டிருக்கிறது இங்கு எப்படிச் சொல்லப்படுகிறது என்பதுதான் எனக்கு முக்கியம். 

நான் ஒரு மூடன். எனக்கு சுத்தமாகப் படிப்பறிவு கிடையாது. இதைக்கூட கேட்டிருக்காவிட்டால் படித்திருப்பேனா என்பதே சந்தேகம். அடிப்படையில் சினிமா பைத்தியம். கிட்டத்தட்ட 19-20 வயதிலிருந்தே, எழுத ஆரம்பிக்கும் முன்பாக இருந்தே ஏதோ கொஞ்சம் சினிமா பார்த்த பழக்கம். ஆங்கிலம் படிப்பது முடியாத காரியமாய் இருந்த காரணத்தால் உலக இலக்கியம் படிக்க இயலாமையை சினிமாக்களைப் புத்தகம்போல் பார்த்து ஈடுகட்ட முடியுமா என்கிற எளிய குறுக்குவழியாகத்தான் தொடங்கியது. தொடக்கத்தில் புரியாதிருந்த படங்கள் கொஞ்ச நாட்களிலேயே கொஞ்சம்போலப் புரியத்தொடங்கின.

மனிதனின் எல்லா அம்சங்களையும் வெளிப்படையாய் விவாதிக்கும்போது செக்ஸை மட்டும் ஏன் இலைமறைவு காய்மறைவாகப் பேச வேண்டும் என்பதுபோல் உலக சினிமாவில் உடைகள் அவிழ்க்கப்பட்டன. ஆரம்ப அதிர்ச்சியும் கிளுகிளுப்பும் நீராகி வெளியேறிய பின் ’அது’ என்னவென்றுப் புரிந்தது. உலக சினிமாவில் ’அது’ இருக்கிறது என்பதற்கும் ‘அதை’ அதிர்ச்சி மதிப்பீட்டிற்காக பயன்படுத்துவதற்கும் ’அதை’ மட்டுமே வைத்துக்கொண்டு கொண்டாட்டம் கொண்டாட்டம் என்று கூத்தடிப்பதற்குமான வேறுபாடுகள் தெளிவாயின.

அஞ்சலிக்கு உதயாவும் உதயாவுக்கு அஞ்சலியும் கடித பரிவர்த்தனை பண்ணி முடிக்கையில் பண்ணுகிற காட்சி வருகிறது.அதுவும் அஞ்சலி தன் கணவனோடு ஃபோன் பேசிக்கொண்டு இருக்கையில் பண்ணுகிற காட்சி என்பதால் கிளுகிளுப்பு கூடுகிறது. 

முக்கோணக் காதல் கதை புதிதல்ல முக்கோணக் காதல் கதைகளில் குறைந்தது மூன்று சாமான்கள் இருந்துதானே ஆகவேண்டும். அவற்றின் கூடவே மூன்று மனங்களும் தட்டுப்படுகின்றனவா என்பதே வாசிப்பில் என் தேடல்.

கருப்பு வெள்ளையில் 1962ல் ரோமன் பொலான்ஸ்கி இயக்கிய Knife in the Water ஏன், போட்டில் எழுதிய கவிதையாக இருக்கிறது. அவரே, சரியாக முப்பது வருடம் கழித்து 1992ல் அதே முக்கோனத்தை நவீனமாய் கப்பலில் வைத்து எடுத்த Bitter Moon ஏன் அப்படி இல்லை என்பதையும் பார்ப்போர் புரிந்துகொள்ள முடியும். 

பிட்டர் மூனையும்விட,கட்டற்ற கருத்துசுதந்திர அமெரிக்காவிலேயே சென்சாருக்கு உள்ளான, உடலுறவுக்காட்சிகள் அப்பட்டமாய் இடம்பெற்ற படம் பெர்னார்டோ பெர்ட்டுலூச்சி இயக்கிய Last Tango in Paris. வயசாளிக்கும் இளம்பெண்ணுக்கும் தற்செயலாய் ஏற்படும் உறவைப் பற்றிய படம். அதில் ஏன் செஞ்சிகிட்டே மட்டும் கிடக்காமல் அத்துனைப் பேச்சு பேசுகிறார்கள்? அந்தப் பேச்சில் வெளிப்படுவது என்ன? காமம் காதலாகும் படமில்லையா அது. 

இதையெல்லாம் நான் சொல்லி சாரு தெரிந்துகொள்ள வேண்டுமென்றில்லை. எனக்குத் தெரிந்து 70-80களின் இலக்கியச் சூழலில் உலக சினிமாவை ஆர்வத்துடன் அதிகம் பார்த்தவர்கள் என்று வெ.சா, செ.ரவீந்திரன் மற்றும் சாருவைத்தான் கூறுவேன். குறைந்தபட்சம் தில்லியில் இருந்தவரையிலேனும் எக்கச்சக்கப் படங்கள் பார்த்தவர் சாரு. அதற்கு தில்லியில் இருந்தது மட்டுமே காரணமன்று. அப்படிப்பார்த்தால் நிறையபேர் தில்லிவாசிகள்தான். ஆனால் எல்லோருக்கும் இலக்கியம் அளவிற்கு உலக சினிமாவில் பெரிய ஆர்வம் இருந்ததென்று சொல்ல முடியாது. அப்படி இருந்துதான் தீரவேண்டும் என்கிற கட்டாயமும் கிடையாது. எழுத்தாளனுக்கு இதெல்லாம் வெறும் பின்னணிதான். தான் வாழ்ந்த வாழ்வை எவ்வளவுதூரம் ஜோடனை செய்யாமல் உண்மையாகப் பார்க்கிறான். அவனையும் மீறி அவனுக்கு எதிரானவற்றை எழுத்தில் வெளிப்பட தன்னை எழுத்துக்கு எவ்வளவுதூரம் திறந்து வைத்திருக்கிறான் என்பதே எனக்கு முக்கியம்.

ஆறாம் பக்கத்தில் ஆரம்பிக்கும் எக்ஸைல் நாவலில் 9ஆம் பக்கத்தில் அஞ்சலியின் உறுப்பை உதயா சுவைத்து ஈரமாக்கும்போது, அஞ்சலியின் கணவன் ஃபோனில் கேட்கிறான். சுவரெல்லாம் வெட் ஆகறதுன்னு சொன்னியே மேரில (முனுசிபாலிட்டி) புகார் குடுத்துட்டியா?

எக்ஸைல் 10ஆம் பக்கத்தில் உதயா தன் பைப்பைத் தூக்கி வைக்கும்போது அஞ்சலியின் கணவன் கேட்கும் கேள்வி ப்ளம்பர் வந்துட்டானா?

முனிசிபாலிட்டியும் ஈரமான சுவரும் ப்ளம்பரும் பைப்பும் வெறும் இரட்டை அர்த்த கிளுகிளுப்புக்காகவே உபயோகிக்கப் பட்டிருக்கின்றன எனில் இது சரோஜாதேவி ரகம் மட்டுமே. ஆனால் பாரீசில் முனுசிபாலிடியால்தான் எல்லா வீட்டுச்சுவர்களும் செப்பனிடப்படுகின்றன என்றோ அல்லது அரசுக் குடியிருப்புகள் மேரியால் மட்டுமே பராமரிக்கப்படுகின்றன என்றோ அல்லது அஞ்சலி வாழ்வது முனுசிபாலிடியால் பராமரிக்கப்படும் வீடு என்றோ இருந்தால் குறைந்தபட்சம் இதை சீப்பான செய்திறன் என்றாவது ஏற்கலாம் இவை எதுவும் இல்லையெனில் இது வெறும் அச்சிலிருக்கும் காமலோகம்.காம் மட்டுமே அல்லவா? 

16 வயதினிலே படத்தின் கிளைமாக்ஸில், மயிலை பரட்டை கற்பழிக்க முயலும் காட்சியில் இடைவெட்டி ”வெளக்கக்கொஞ்சம் அமத்துங்கன்னு பொண்ணு சொன்னாளாம், ஹூஹும் விடியவிடிய எரியட்டுன்னு மாப்ள சொன்னானாம் இந்த மாப்ள சொன்னானாம்” என்று சப்பாணி பாடிக்கொண்டு வரும் உச்சுக்கொட்டவைக்கும் பாரதிராஜா சுவீகரித்த கே.பி மார்க் டக்கர் டைரக்‌ஷனை அல்லவா இந்த இலக்கியக் கொண்டாட்டம் நினைவுறுத்துகிறது.

உதிரிப்பூக்கள் என்கிற நல்ல படத்தின் உறுத்தலாய் இருப்பது, செடியையோ பூவையோ ஒவ்வொன்றாய் நாயகன் கிள்ளக்கிள்ள இடைவெட்டி அவன் கட்டிக்கொள்ளப்போகும் நாயகியை, வில்லன் கட்டாய துகிலுரிப்பாய்க் காட்டப்படும் காட்சி. இந்த நாவலில் இந்த இடம் அதுபோன்ற பிசிறாக மட்டுமே இருக்குமென்றால் ஒழிகிறது போகட்டும் மீதி 450 பக்கங்கள் எப்படி எனப் பார்க்கலாம் எனத் தாண்ட வைக்கும் நல்ல பகுதிகள் பின்னால் வரக்கூடுமோ என்கிற நப்பாசையில் தொடர்ந்தால், 11-13ஆம் பக்கங்களில் ஆரோகன அவரோகனத்துடன் வழக்கமான புளித்துப்போன தமிழ் எழுத்தாளனின் வாழ்வின் அவலம் பற்றிய புலம்பல் தொடங்கிவிடுகிறது 

இந்தப் புலம்பலைப் படிக்கையில்தான், கிளுகிளுப்பு தடவி ‘இதுதான் இந்த நாவலின் க்ளைமாக்ஸ்” என்று எழுதியது வெறும் புத்தகத்தைப் படிக்கத் தூண்டும் கொக்கி மட்டுமேவோ என்கிற சந்தேகம் வலுக்கிறது. 

மனைவி இட்டுக்கொடுத்த அப்பளம் வடாம்களை சைக்கிளில் எடுத்துக்கொண்டுபோய் விற்று குடும்பத்தின் வயிற்றைக்கழுவி அமரத்துவம் வாய்ந்த கதைகளை எழுதியவனோ ஊரூராய் பிரா விற்ற கவிஞனோ உள்ளூரப் புழுங்கியிருந்தாலும் ஒருபோதும் அதைப் பற்றிப் எழுத்தில் புலம்பியதில்லை.பெரும்பாலான வாழ்வை அரசு அலுவலகத்தில் கழித்துவிட்டு இப்படிப் புலம்புவதையே பெரிய இலக்கிய சாதனையாகக் கொண்ட்டாட வேண்டும் என்று சொல்வது எவ்வளவு பெரிய கொடுமை?

அடுத்து 13-14ல் தமிழ்நாட்டின் வாழ்நிலை பற்றிய புலம்பல். கையில் காலில் அடிபட்டால் களிம்புகூடத் தடவ வக்கில்லாமல் வாழும் விளிம்பு நிலை மனிதர் போல ஓவென்ற புலம்பல். இது வெளிநாட்டு வாசகர்களுக்காகவென்றே பிரத்தியேகமாக எழுதப்பட்டிருக்கலாமோ என்னவோ.

15ல் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க, முகவரி சான்றுக்காய் ரேஷன்கார்டு பற்றிய புலம்பல். ஆசிரியருக்கு அன்றாட வாழ்வோடு தொடர்புண்டா இல்லையா என்ற கேள்வியை எழுப்புகிறது. பாஸ்போர்ட்டு விண்ணப்பத்தைக் கண்ணாலாவது பார்த்தவர் எழுதியதா என்கிற சந்தேகமே எழுகிறது. 

(1) While applying for a fresh passport attach two copies of the following documents:

(a)       Proof of address (attach one of the following): 
Applicant’s ration card, certificate from Employer of reputed companies on letter head, water /telephone /electricity bill/statement of running bank account/Income Tax Assessment Order /Election Commission ID card, Gas connection Bill, Spouse’s passport copy, parent’s passport copy in case of minors. (NOTE: If any applicant submits only ration card as proof of address, it should be accompanied by one more proof of address out of the above categories).  http://passport.gov.in/cpv/checklist.htm

இவற்றில் குறிப்பிடப்படும் டெலிபோன் பில் இபி பில் வங்கிக் கணக்கு வாக்காளர் அடையாள அட்டை கேஸ் இணைப்பு பில் இவற்றில் எதுவுமே இல்லாமல்தான் ’இந்த’ எழுத்தாளர் விளிம்புநிலையில் வாழ்கிறாரோ? விளிம்பு நிலையில் வாழும் திருநங்கைகளும் நாடோடிகளாய்த் திரியும் நரிக்குறவர்களுமே மொபைல் ஃபோன் வைத்திருக்கும் தமிழ்நாடு இது என்றாவது தெரியுமா? ’கண்ணி வெடி தமிழ்நாடு’ என்று அதீதமாய்க் கூவுமளவுக்கு என்ன ஆகிவிட்டது உதயாவின் வாழ்க்கையில்? சொடைய்ங் போட வீட்டிலொன்று வெளியில் ஒன்று என ஒன்றுக்கிரண்டாய் இருக்கையில் ஏன்ன குறை? இணையத்திலேயே கொடுக்கத் தெரிந்த வங்கிக்கணக்கை பாஸ்போர்ட் ஆபீசில் கொடுக்கத் தெரியாதா?வங்கிக் கணக்கென்ன பிரத்தியேகமாக இணையத்திற்காகவென்றே உருவாக்கப்பட்ட்டதா? 

உண்மையான அக்கறை ஏதுமின்றி ஊரான் குடுமியையெல்லாம் வெறும் சுவாரசியத்துக்காக பிடித்து ஆட்டு ஆட்டு என ஆட்டிவிட்டு, பாதிக்கப்பட்டவன் எடுத்துவிடக்கூடிய சட்டரீதியான அவதூறு வழக்கிலிருந்து காப்பாற்றிக்கொள்ள உருவான பாத்திரமே ’உதயா’. சட்டரீதியில் உதயா என்பது நானில்லை எனக்காட்டவே உதயாவின் மனைவியின் பெயர் பெருந்தேவி என்றாகிறது. (பக்கம்15 பத்தி 2 வரி 10) பெருந்தேவி - என் மனைவி - அந்த ரேஷன் அலுவலகத்திற்கு 20 முறை சென்றுவந்துவிட்டாள். 

ஆனால் சாரு நிவேதிதா என்கிற எழுத்தாளர் தம் வலைத்தளத்தில் ஏற்கெனவே பொங்கிய ஊசிப்போன பொங்கலை எல்லாம் உதயாவின் எண்ணங்களாக அதீத தர்மாவேசங்களாகக் கிழக்கு தொண்ணையில் விநியோகிப்பதைப் பார்க்க, இவ்வளவு வறட்சியா எனப் பரிதாபப்படுவதற்கு பதிலாக, கண்டதையும் கலந்துகட்டி புக்கு தேற்றும் புத்திசாலித்தனத்தைப் பார்த்து எரிச்சல்தான் வருகிறது. இந்த லட்சணத்தில் இதைத் தமிழ்நாடு கொண்டாடவில்லை என்கிற குமுறல் வேறு.

நாகார்ச்சுணனும் ஸ்டாலினும், உப்பு மேல நிக்கிறோம் என்கிற கோணங்கி-ஜெயமோகன் அலைபேசி உரையாடலைக் கிண்டலடித்து எழுதிய பெருங்காயத்தின்மேல் நிற்கிறோம், இன்று சுதந்திர தினம் என்றார் மனுஷ்ய புத்திரன் போன்றவற்றை தளத்தில் படித்தபோது ஏற்பட்ட வயிறு வலித்த சிரிப்போ தாஸ்தாவெஸ்கி பற்றிய தங்கமீன் கட்டுரையைப் படித்தபோது உண்டான நெகிழ்வோ, நாவல் வடிவில் திரும்பப் படிக்க நேர்ந்தால் கிடைக்குமா? இப்படியான அத்திப்பூத்தல்களை விட்டால் தளத்தில் இருப்பவை பெரும்பாலும் சுய விளம்பரப் புலம்பல்கள்தானே. அவற்றை அப்படியே அச்சடித்து அட்டையைப் போர்த்தி அடுக்கிக் கொள்வதற்குப் பெயர் இலக்கிய சாதனையா?

இருபது பக்கம் தாண்டுவதே இமாலய ஏற்றம் போல் மூச்சுவாங்கிவிட்டது. சரி எஸ்.ராவைப் படிப்பது போல, அட்லீஸ்ட் மூடித்திறந்தால் கிடைக்கும் பக்கத்தையாவது பார்க்கலாம் என்றால், வந்து தொலைந்ததோ உதயாவின் முற்கால வாழ்வு பற்றிய எரிச்சலூட்டும் தியாக சித்திரம்.  காழ்ப்பும் வன்மமும் உதயாவின் வாழ்க்கையில் இருந்து எழுதப்பட்டதைப் போலல்லாது, உதயாவை முகமூடியாய் வைத்து அடித்துவிட்டவையாகவே தோன்றுகின்றன.

மன்னிக்கவும் இதற்குமேல் இதைப் படிக்க முடியவில்லை. படிக்கும் தருணம் என ஒன்று வாய்க்கக்கூடும் என்றும் தோன்றவில்லை.

எக்ஸைலைப் படிக்க ஆரம்பித்த பிறகுதான், இதெல்லாம் நாவல் என்று தைரியமாக வெளியிடப்படும் சூழலில், அடடா நாம் ஏன் நாவல் எழுத முயலவில்லை என்று தோன்றியது. அதற்கு என் மனமார்ந்த நன்றி.