19 December 2011

வேலை

நாவலைப்பற்றி நான் எழுத இருக்கிறேன் என்பது எப்படிப் பரவிற்று என்றுதான் தெரியவில்லை.

I ve suggested your name for reviewing my novel in *** . They will ask u. But I welcome any kind of opinion even if it is extremely negativ 

Great. Thanks for the right spirit. I assure that, I will read without prejudice.

இதற்குப் பிறகு இரண்டு நாட்களில் புத்தகமும் வந்து சேர்ந்தது. 

இதற்கிடையில் இலக்கிய பத்திரிகையொன்றுக்கு ஏற்கெனவே ஒப்புக்கொண்டிருந்ததுபடி, இணையம் பற்றி கட்டுரை எழுதவேண்டி இருந்தது. கெடு தேதிக்கு அடுத்தநாள்தான் கொடுத்தேன் என்றாலும் கொடுக்கப்பட்டிருந்த வார்த்தை எல்லைக்குள்ளாகவே எழுதிக்கொடுத்துவிட்டேன். எடிட் பண்ணவேண்டியது அவசியம் என்று பட்டால் என்னிடம் கலந்து ஆலோசிக்கவும் என்று அந்த ஆசிரியரிடம் கேட்டுக்கொண்டிருந்தேன். அனுப்பி இவ்வளவு நாளாகியும் தகவலே இல்லையே கட்டுரை என்ன ஆயிற்று , எடிட்பண்ணவேண்டிய அவசியமே இல்லாமல் ஒட்டுமொத்தமாய்க் கவிழ்ந்தே விட்டதுபோலும் என்கிற எண்ணத்தில் என்ன ஆயிற்று என்று இப்போதுதான் கேட்டேன். லே அவுட்டே செய்தாகிவிட்டது என்றார். ஆச்சரியம் தாங்கவில்லை. இலக்கிய உலகில் இன்னமும் எழுத்தாளனை எடிட்செய்யாமல் அதுவும் என் போன்ற லும்பன் எழுத்தாளன் எழுதியதை க்கூட அப்படியே அச்சில் ஏற்ற ஆளிருக்கிறது என்பது ஆச்சரியமாக இருந்தது.

நாவலை எடுப்பதற்குள் சென்னை உலக திரைப்பட விழா தொடங்கிவிட்டது. யாருக்கு உபயோகமோ இல்லையோ எனக்குப் பிடித்த படங்களைப்பற்றி எழுதுவது எனக்குப் பிடித்திருப்பதால் எழுதிக்கொண்டிருக்கிறேன்.

நேற்று ஒருவர் சாட்டில் வந்து நாவலைப் படித்துவிட்டீர்களா என்றார்.

படம் பார்த்துக்கொண்டிருக்கிறேன் இன்னும் தொடவே இல்லை என்றேன்.

இணைய இதழ் ஒன்றுக்கு ஏற்கெனவே ஒரு நண்பர் கேட்டிருந்தார். அப்போது தோன்றிய ஒரு கதையை ஆவேசத்துடன் எழுதத் தொடங்கியதில் அது 25 வருடங்கள் முன்னால் நான் சென்ற சைக்கிள் பயண நாவலின் ஒரு அத்தியாயமாக ஆகிவிடும்போலத் தோன்றவே பாதியில் நின்று போனது. இப்போது என் யோசனையெல்லாம் இணைய நண்பரை எப்படி டபாய்க்கலாம் என்பதாகவே இருக்கிறது.

ஏதோ தோன்றியது இதை எழுதத்தொடங்கினேன்.எப்போதோ நான் தியேட்டருக்குள் இருந்திருக்க வேண்டும். படம் ஆரம்பித்து பத்து நிமிடம் ஆகிவிட்டது. யார் கேட்டார்கள் என்று இதை எழுதிக்கொண்டிருக்கிறேன்.

எனக்கு எதையுமே வேலையாகச் செய்யப் பிடிப்பதில்லை - வேலை உட்பட.