13 December 2011

9வது சென்னை உலக திரைப்பட விழா 14 -22 டிசம்பர் 2011

14 முதல் 18 வரை முதற்பகுதி 

இதுவரை பதியாதவர்கள்கூட இனியும் சேரலாம். தேவையெல்லாம் 500 ரூபாய் மற்றும் தபால்தலை அளவிலான 2 புகைப்படங்கள் மட்டுமே. 

எல்லா படங்களும் பார்ப்பது என்பது யாருக்குமே சாத்தியமில்லை. 154 படங்களில் ஆறு ஏழு படங்கள் உயர்ந்த தரத்தில் இருந்தாலே அதிகம் என்பதுதான் யதார்த்தம்.

ஆனால் அவற்றை ’நீங்கள்’ முடிவுசெய்ய ஏகப்பட்டதைப் பார்க்க வேண்டி இருக்கும் என்பதுதான் விழாவின் சுவாரசியமே. உயர்வு தாழ்வு என்று எடைபோடுவது இரண்டாம்பட்சம். எதைவிடவும் இந்தப் பயணமே முக்கியம். எல்லா திரைப்பட விழாக்களுக்கும் இது பொருந்தும். கோவாவுக்குப் போகிற செலவின்றியே கிட்டத்தட்ட அங்கே திரையிடப்பட்ட பெரும்பாலான படங்களை சென்னையிலேயே பார்க்கும் அரிய வாய்ப்பு.

பகல் நேர அலுவல் காரணமாய்ப் பார்க்க முடியாதவர்கள் மாலை இரண்டு  காட்சிகள் பார்க்கலாம். ஞாயிறன்று அனைத்துக் காட்சிகளும் பார்க்க வாய்க்கலாம். வேண்டியதெல்லாம் இலக்கியம் போலவே சினிமா என்கிற கலையைத் துய்ப்பதற்கான வெறி.

உலக சினிமா பற்றி தப்பும்தவறுமாக எழுதப்படுபவற்றைப் படிப்பதைவிட, ஆரம்பத்தில் தடுமாறினாலும் சினிமாவைப் பார்ப்பதென்பது சிறந்த அனுபவம்.அதைப் படிப்பதால் அல்ல பார்ப்பதால் மட்டுமே அனுபவிக்கமுடியும் என்பது பிடிபடும். 

திரையில் கடவுள் தரிசிக்க நீங்கள். கடவுளும் நீங்களும் மட்டுமே என்கிற மாயத்தோற்றத்தை உருவாக்க சுற்றிலும் இருட்டு. அபூர்வமான சில  தருணங்களில் நீங்களும் கடவுளும் எதிரெதிரில் இல்லாமல் கரைந்து காணாமல் போகிற அனுபவமும் கிட்டக்கூடும். 

நாளை உட்லன்ஸ் தியேட்டருக்கு வாருங்கள். அனுமதி அட்டையைப் பெற்றுக்கொண்டு. ஒன்பது நாட்களில் ஒரு சில படங்களேனும் பார்க்க முயற்சியுங்கள். பார்க்கமுடிந்த ஒரு சிலவே விழாவின் உச்ச படங்களாய் அதிருஷ்டம் வாய்க்க வாழ்த்துக்கள்.