13 December 2011

படிப்பாளிகளும் படிப்பும்

Shaseevan Ganeshananthan,விமலாதித்த மாமல்லன் நீங்கள் இதைத்தொடர்ந்து எழுதிய மேலும் இரண்டு பதிவுகளையும் நான் படித்தேன். ‘கதை’யின் நம்பகத்தன்மையினை அறுதி செய்ய நீங்கள் இவ்வளவு மெனக்கிட்டுருக்க வேண்டியதில்லை. ஏனெனில் சசீவன் அந்தக் கதையில் வேறு பெரிய வரலாற்று ஊழல்கள் ஏதுமில்லையென்றே கூறிவிட்டடார். ‘கப்டன்’ கதை ராணுவ சிறை புலி சிறை ஆகியவைகளிடையே ஒரு ஒப்புமையை வைப்பதன் மூலம் ஆசிரியரின் புலி எதிர்ப்பு அரசியலை வெளிப்ப்டையாக முன் வைக்கிறது. இதை கட்டவிழ்த்து கதையினை அதன் ஆசிரிய குரல் முன்வைக்கும் அரசியலுக்கு எதிராக மீட்டெடுக்கலாம். ரானுவ சிறையிலிருக்கும்போது ‘கப்டன்’ அவர்களின் கேளிக்கை சமயத்தில் புலிகள் தாக்கினால் எளிதாக அவர்கலை வெற்றி கொள்ளலாம் என்று நினைக்கிறான். சிங்கள ராணுவத்திற்கு எதிரான ரகசிய வேட்கையாகக் கொள்ளலாம். இந்த ரகசிய வேட்கையும் அதனால் உருவாகிற நனவற்ற தன்னடையாளமும் மீண்டும் அவன் தன்னை கப்டன் என்ற புலிகள் வழங்கிய அடையாளத்தைக் கூறி அன்னியசின் படகில் ஏறும்போது நிச்சயமாகிறது. அந்த அடையாளதை அங்கீகரிப்பதன் மூலமாகவே அவர்கள் இருவருக்கிடையில் உறவு மலர்கிறது. அந்த அங்கீகாரத்திற்கான பரிசாகவே கப்டன் தான் பொக்கிஷமாக பாதுகாத்த நீலக்கல் தோடுகளை அன்னியசிற்குக் கொடுக்கிறான் என்று மேலும் வாசிக்கலாம். கப்டனின் மரணத்தில் அவன் தன்னை புலிகளோடு ரகசியமாக அடையாளம் கண்டதும் அழிகிறது, அவன் ரகசிய அடையாளம் அறிந்த அன்னியஸ் அதை அவனுக்கான கல்லறைக் கல்லில் எழுதி வர அந்த அடையாளத்தினை அடுத்த தலைமுறையினர் நிராகரிக்கின்றனர். கடைசியில் கப்டனின் உள்ளார்ந்த ஆசை நீலக்கல் தோடுகளாக ஒரு ஐரோப்பிய (இத்தாலிய?) விதவையின் காதுகளில் பிரகாசிக்கிறது. அதாவது இவ்வாறான தான் வெளிப்படையாக முன் வைக்கும் அரசியலுக்கு எதிரான வாசிப்பை சாத்தியப்படுத்துவதால்தான் ‘கப்டன்’ கதை இலக்கிய பிரதியாக மாறுகிறது. இலக்கியப்பிரதிகளின் மொழிச்செயல்பாடே இவ்வாறாக யதார்த்தவாதத்தின் மொழிக்கொள்கைக்கு எதிராக இருப்பதால் உண்மைக்கதையென்ற சான்றிதழ் இலக்கியப்பிரதியினை அனுமானிக்க தேவையில்லை. ஆனால் ஆர்டிலரி பற்றி சசீவனும் இதர நண்பர்களும் குறிப்பிட்டு எழுதியது போர்க்காலத்தில் வாழ்ந்த தமிழ் மக்களுக்கு முக்கியமான பயம், பீதி ஆகியவற்றின் குறியீடு. இரண்டே இரண்டு பீரங்கிகளை புலிகள் கைப்பற்றியது அதனால் மிகப்பெரிய நம்பிக்கையின் குறியீடாக எதிர் உருவம் பெற்றிருக்கிறது. புலிகளும் சிங்கள ராணுவத்தினரும் சம்பலத்தினர் அல்லர் என்பதும் புலிகளின் யுத்தம் அவர்களின் புத்திசாலித்தனத்தினையும் சமூகக்கட்டுக்கோப்பினையும் சார்ந்தே இருந்திருக்கிரது என்பதினையும் ஆர்டிலரி பற்றி சசீவனும் நண்பர்களும் எடுத்துரைத்ததிலிருந்து நான் அறிந்துகொண்டேன். போர்க்கால சமூக அனுபவத்திற்கும் வரலாற்றிற்கும் மையமான ஒரு விடயத்தில் ஷோபாசக்தியின் கதைப்பிரதி பிழையுள்ளதாக இருப்பதால் கதை வலுவிழந்து வெற்று அரசியல் பிரதியாகிறது என்ற வாதம் நியாயம்தான் என்று எனக்குப்படுகிறது.

***

தற்காலத் தமிழிலக்கியத்தின் தாளில்லா நெடுங்கதவமாய் நின்றிருக்கும் ஜெயமோகனையே, பாரதி விவாத சம்வாதத்தில் வாயடைக்க வைத்த எம்டிஎம்மிடம் போய் மல்லுகட்ட முடியுமா? தத்துவப் படிப்பாளியுடன் தற்குறிப் படைப்பாளி தர்க்கித்து வெல்ல முடியுமா? 

<‘கதை’யின் நம்பகத்தன்மையினை அறுதி செய்ய நீங்கள் இவ்வளவு மெனக்கிட்டுருக்க வேண்டியதில்லை. ஏனெனில் சசீவன் அந்தக் கதையில் வேறு பெரிய வரலாற்று ஊழல்கள் ஏதுமில்லையென்றே கூறிவிட்டடார்.>

ஷசீவன் ஒருவரில்லை. ஷோபா சக்தியின் ‘கப்டன்’ கதை வாசிப்பில் அவர் கண்ணுக்கேப் புலப்படாதவற்றை ஒவ்வொருவராய் எடுத்துக்காட்டக் காட்டக்காட்ட வாசிப்பின் வாதத்தைப் புலிகளின் இயக்கம் போல் கட்டுக்கோப்பாய் வளர்த்தெடுத்துக்கொண்டிருக்கிறார் பாருங்கள்.

<Shaseevan GaneshananthanVimaladhitha Maamallan Rajan Kurai Krishnan ஒரு தவறைச் சுட்டிக் காட்டப் போய் கதையில் ஏராளமான தவறுகளை பலர் கூறியுள்ளார்கள். 
1. ஆட்லறி என்ற பெயர்க்குழப்பம்.
2. புவியியல் அமைவு தொடர்பான விடயம்
3. காலநிலை, காற்று தொடர்பான விடயங்கள்
4. கடலனுபவம் தொடர்பான விடயம்
5. கடற்புலித் தளபதி தொடர்பான விடயம்.>

ஓயாத அலைகளாய் இப்படித் தாக்கத் தொடங்கினால் அண்ணாந்தால் வானம் குனிந்தால் கூவம் என்று நீச்சல் கூடத் தெரியாமல் காலம்தள்ளிக்கொண்டிருக்கும் மெட்ராஸ் பிறவிக்கு ஈழத்தின் பூகோள சாஸ்திரமெல்லாம் எங்கிருந்து புரியும்? கூகுளில் தேடினால்கூடத் தட்டுப்படாத தீவுத் திட்டுக்களைப் பற்றியெல்லாம் தேடித் தெரிந்து வாசித்தால்தான் வாசிப்பு அனுபவம் கிட்டும் என்கின்றனர் ஈழ பண்டிதர்கள். ABCD என்று தீவுகளின் பெயரைக் குறிப்பிடத் தெரியாத ஷோபா சக்தி 80களிலேயே ஏன் ஓடிப்போனார் என்று இப்போது புரிகிறது. 

கட்டிய துணியைப் பாய்மரமாக்கி பல கடல்களைக் கடந்த அனுபவஸ்தர்கள் எல்லாம் புலியில்லாத காலத்திலேயே இப்படிப் படைபடையாய் வரும்போது ஒரிஜினல் புலிகள் அதிகார பீடத்தில் இருந்த காலத்தில் விமர்சித்து ஏதும் சொல்லி யாரும் வாழ்ந்திருக்க முடியுமா?

Shaseevan Ganeshananthan கொண்டோடியின் ஒரு குறிப்பு. இதுவும் மாமல்லனுக்கு உபயோகப்படலாம்.
/
//பொன்ராசா அதைவிட அலட்டலாகப் பதில் சொல்வார். மண்ணில் படம் வரைந்து யாழ்ப்பாணத்தில் எந்த எந்த இடத்தில் புலிகளின் முகாம் இருக்கிறது, எங்கே புலிகளின் தலைவர் இருக்கக் கூடும், குறிப்பாகக் கடற்புலித் தளபதி சூசை இப்போது எங்கேயிருக்கக் கூடும் என்று கடற்படையினருக்குப் பொன்ராசா விளக்கினார்.//

கதையில் இன்னொரு தகவற்பிழை. சம்பவம் நடந்த காலப்பகுதியில் கடற்புலிகள் பிரிவு விடுதலைப்புலிகள் அமைப்பில் இருக்கவில்லை. ஆகாய கடல்வெளி சமரின் பின்னரே கடற்புலிகள் பிரிவு தொடங்கப்பட்டது. அதற்கு முன்பு கடற்புறா என்ற பெயரிலேயே ரு பிரிவு இருந்தது. ஆனாலும் அதற்கும் தளபதி சூசைக்கும் எத்தொடர்பும் இருக்கவில்லை. கதை நடக்கும் காலப்பகுதியில் தளபதி சூசை தீவகத்துக்கான பொறுப்பாளராக இருந்தார்.
/
Friday at 11:48pm · Like

சே இந்த ஷோபா சக்தி ரொம்ப மோசம். மோசடியில் ஜெயமோகன் கும்பலையும் மிஞ்சிவிடுவார் போல இருக்கிறது. பாருங்கள் கடற்புலிகள் சூசை எல்லாம் 1984 முதலே இருப்பதாக விக்கியில் புகுந்து விளையாடி விட்டுதான் கதையையே எழுதத்தொடங்கி இருக்கிறார் போலும்.

கடற்புலிகள் வரலாறு

Sea Tiger Fast Attack boat.jpg
  • ஈழப்போராட்டத்தின் ஆரம்பத்தில் இருந்தே கடற்போக்குவரத்து முக்கியமாக இருந்த வந்தது.
  • 1984 ஆம் ஆண்டு கடற்புலிகள் அமைப்பு அமைக்கப்பட்டது.
  • 1990 களில் தாக்குதல் அணியாக வடிவம் பெற்றது.

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D


சூசைhttp://tawp.in/r/qmi

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கேணல் சூசை புலிகளின் அதிவேக தாக்குதல் களத்தில், 2003.
கேணல் சூசை என்ற இயக்கப் பெயரால் அறியப்படும் தில்லையம்பலம் சிவநேசன் தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்படைப் பிரிவான கடற்புலிகளின்தற்போதைய தலைவராவார். இவர் அக்டோபர் 16,1963 [1] அன்று யாழ்ப்பாணம்வல்வெட்டித்துறையில் பிறந்தார்.1991 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கடற்புலிகள் அமைப்பின் விசேட கடற்புலிகளின் கட்டளை அதிகாரியாக இருந்தார். அச்சமயம் கடற்புலிகளின் தலைவராக பணியாறிய "கங்கை அமரன்" இலங்கைக் கடற்படையினருடனான சண்டையின் போது கொல்லப்பட்டதை அடுத்து தலைமைப் பொறுப்பு சூசையிடம் ஒப்படைக்கப்பட்டது. 

ஐயையோ அப்படியும் சொல்ல ஏலாது ஏனெண்டால் விக்கியின் இன்றைய திகதிக்கு கடைசி திருத்தமே

<இப்பக்கத்தைக் கடைசியாக 19 அக்டோபர் 2009, 13:51 மணிக்குத் திருத்தினோம்..என்றல்லவா இருக்கிறது.> அப்போதே விக்கியில் புகுந்து வரலாற்றைத் திணித்துவிட்டு அப்புறமாய் கப்டன் எழுதினார் என்றால் நம்பும்படியாகவா இருக்கும்?

பின் எப்படித்தான் ஷோபா சக்தியை அடிப்பது?

காரணமின்றி வெள்ளைக்காரர்கள் எவரையும் தண்டிப்பதில்லை என்பதற்கு சாட்சியமாய் கதையொன்று சொல்லப்படுவதுண்டு விக்டோரியா மகாராணியாருக்கு விசுவாசமாய் இல்லாமல் ரயிலைக் கவிழ்க்கப்பார்த்தானெண்டு குற்றம் சாட்டப்பட்ட இந்தியக் கவிஞனொருவனைப் போதிய சாட்சியம் இல்லாததால் விடுவிக்க வேண்டிய நிர்பந்தம் உண்டாகிவிட்டதே என்று நேர்மையாய்க் கவலைப்பட்டாராம் நரை டோப்பா அணிந்த நீதிபதி. அவன் கலகக்காரன் மட்டுமில்லை கவிஞனும்கூட என்று எடுத்துக்கொடுத்தாராம் இந்திய வக்கீல். ரயிலைக் கவிழ்த்த சதி நிரூபிக்கப்படாவிட்டாலும் அவன் எழுதியிருக்கும் மோசமான கவிதைகளுக்காக தூக்கிலிட உத்தரவிடுகிறேன் என்றாராம் நியாயஸ்த நீதிபதி.

<‘கப்டன்’ கதை ராணுவ சிறை புலி சிறை ஆகியவைகளிடையே ஒரு ஒப்புமையை வைப்பதன் மூலம் ஆசிரியரின் புலி எதிர்ப்பு அரசியலை வெளிப்படையாக முன் வைக்கிறது.>

இரண்டு வதைகளை எடுத்து வைத்தாலே புலி எதிர்ப்பா? இவையெல்லாம் நடந்தேயிராத கற்பனைக் கட்டுக்கதைகளா? இரண்டொரு பிரதிகளாவது விற்க வேண்டுமானால் திராவிடத் தமிழுணர்வு இடதுசாரி முற்போக்கு ஈழ மார்க்கெட்டைப் பகைத்துக்கொள்ளக் கூடாது என்கிற யதார்த்தம் என் மரமண்டைக்கு என்றுதான் உறைக்குமோ?

பதிமூன்று வயதில் லட்சிய வெறியும் சமூகம் பற்றிய லட்சியக் கனவுகளும் ஜொலிக்க குடியரசு இதழ்களை தெருத்தெருவாய்க் கூவி விற்ற கருணாநிதியும் இன்றைய கலைஞரும் ஒன்றா? தலைக்காவிரியில் உருவான தருணத்துப் புனிதத்தைக் கடல்சேரும் வரை தக்கவைத்துக்கொள்ள முடிகிறதா காவிரியால்? அப்படி எதிர்பார்ப்பதும் அப்படித்தான் என்று நம்புவதும் அடிமுட்டாள்தனம் இல்லையா? கடலையேப் பார்க்க இயலாது வழியிலேயே வரண்டுவிடும் அவலத்தை இயல்பாக அல்லவா எடுத்துக்கொள்ளப் பழகிவிட்டோம்.

<இதை கட்டவிழ்த்து கதையினை அதன் ஆசிரிய குரல் முன்வைக்கும் அரசியலுக்கு எதிராக மீட்டெடுக்கலாம்.>

இதை மட்டும் அடிக்கோடிட்டுக் காட்டுவதன் காரணம் எனக்குவிழும் தர்ம அடியில் கொஞ்சத்தை உங்களுக்கும் பகிர்ந்து கொடுக்கத்தான், மற்றபடி இப்படியெல்லாம் படிக்க நான் என்ன படிப்பாளியா?

<ரானுவ சிறையிலிருக்கும்போது ‘கப்டன்’ அவர்களின் கேளிக்கை சமயத்தில் புலிகள் தாக்கினால் எளிதாக அவர்கலை வெற்றி கொள்ளலாம் என்று நினைக்கிறான். சிங்கள ராணுவத்திற்கு எதிரான ரகசிய வேட்கையாகக் கொள்ளலாம்.>

அந்தந்த நேரத்திற்கு ஏற்ப அபாயம் வதைகள் இவைகளில் இருந்து அப்போதைக்குத் தப்பித்துக்கொள்ளப் பார்க்கும் தந்திரோபாயம் தன் புத்திசாலித்தனத்தை தனக்கே நிரூபித்துக் கொள்ளும் வேடகை போன்ற எளிய மனிதர்களின் காரியங்களாகளைப் பகடியாய் சொன்னதாகவே எனக்குப் பட்டது. 

பள்ளிப் பருவத்தில் இங்கிலிஷ் வரும், படி என்று அப்பா கட்டாயப்படுத்திய ஒரே காரனத்தினால் சுவரோரம் அடுக்கிவைக்கப்பட்ட ஹிண்டு பேப்பரை நடுநடுவில் உருவி எடைக்குப் போட்டு வசனமே புரியாமல் ஆங்கில போர்ப்படங்களைப் பார்க்க மட்டுமே உபயோகித்தவனுக்கு இவ்வளவு அறிவு இருப்பதே அதிகம். என்ன சொல்கிறீர்கள்? பச்சையப்பாசில் பிட்டடித்து ஐந்து செமஸ்டரில் முட்டியும் ஆங்கிலப் பேப்பரில் பாசாக முடியாததால் இன்றுவரை டிகிரியே இல்லாமல் இருப்பவன் போய் பெரிய படிப்பு படித்த அறிஞர்களுடன் வாதிக்க முயல்வது வடிகட்டிய முட்டாள்தனம் இல்லையா? அதனால்தான் படிப்பாளி கோஷ்டி பக்கத்தில் வந்தாலே தூக்கத்தில் நடக்கிற வியாதி இருப்பதுபோல் நைஸாய் நடந்து தூரப் போய்விடுவேன். 

<இந்த ரகசிய வேட்கையும் அதனால் உருவாகிற நனவற்ற தன்னடையாளமும் மீண்டும் அவன் தன்னை கப்டன் என்ற புலிகள் வழங்கிய அடையாளத்தைக் கூறி அன்னியசின் படகில் ஏறும்போது நிச்சயமாகிறது.>

பொன்ராசாவிற்கு, தொட்டிலிட்டுப் புலிகள் ’கப்டன்’ என்று பெயர் சூட்டுவது ’கதையில்’ எப்படி நடக்கிறது?

<அவர் தனியனாகப் படகில் சென்றதால் அவர் ‘கப்டன்’ என்றே அங்கிருந்த புலிகளால் அழைக்கப்பட்டார்>

அது கிண்டல் என்று புலிகளுக்கும் பொன்ராசாவுக்கும் கதையைப் படிக்கும்போது கதையை மட்டும் படிக்கும் வாசகனுக்கும் கூடப் புரியுமே. இதற்குப்போய் இந்த அறிவார்த்த ஜின்ஜினுக்காஜிகினாவெல்லாம் அவசியமா?

<அவர்கள் கேட்டதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்: “கப்டன் உள்ளதைச் சொல்லிப்போடுங்க!”

பொன்ராசா உள்ளது, இல்லாதது, பொல்லாதது எல்லாவற்றையும் சொன்னார். அதைப் பொறுமையாகக் கேட்டு ஒரு பேரேட்டில் பதிவுசெய்துவிட்டு அவர்கள் மறுபடியும் கேட்டார்கள்: “கப்டன் உள்ளதைச் சொல்லிப்போடுங்க”>

’கப்டன்’ என்கிற பட்டப்பெயர் கிண்டல்தான் என்பது குறைந்தபட்சம் இப்பொதேனும் உறுதிப்பட்டிருக்குமே.

<கடற்படையினர் அடிக்கும்போது பொன்ராசாவிற்கு கோபம் வரவில்லை. ஆனால் புலிகள் அடித்தபோது அவருக்கு அளவிட முடியாத கோபம் வந்தது. அவர்கள் அடிக்கும் போது அவர் கண்களை இறுக மூடிக்கொள்வார். ‘ஆள்களைப் பார்..மூன்றாம் நம்பர் ரீல்கட்டைகள் மாதிரி இருந்துகொண்டு மல்லா மலையான என்னில் கைவைக்கிறார்களே’ என அவரது மனம் அடங்காத ஆத்திரத்துடன் கொந்தளிக்கும்.>

கடற்படை அடிக்கும்போது உடல்வலி மட்டுமே. ஆனால் புலிப்பொடியன்களிடம் அடிபடுகையில் உடல்வலியோடு நம்மவாராலேயே அடிபடும் அவலமும் அதுவும் தம் பிள்ளைகளின் வயதொத்த பையன்களிடம் அடிவாங்கும் அவமானமும் அல்லவா சேர்ந்து கொள்கிறது. இந்த உண்மை, மனக்கண் திறந்து வாசிக்கும் ஒவ்வொருவனுக்கும் உள்ளே தைத்து உறுத்துமே என்பதால்தான் இவ்வளவு புலி ஆதரவு கூக்குரல்கள் போலும்.

<இந்த ரகசிய வேட்கையும் அதனால் உருவாகிற நனவற்ற தன்னடையாளமும் மீண்டும் அவன் தன்னை கப்டன் என்ற புலிகள் வழங்கிய அடையாளத்தைக் கூறி அன்னியசின் படகில் ஏறும்போது நிச்சயமாகிறது. அந்த அடையாளதை அங்கீகரிப்பதன் மூலமாகவே அவர்கள் இருவருக்கிடையில் உறவு மலர்கிறது.>

<அந்த அடையாளதை அங்கீகரிப்பதன் மூலமாகவே அவர்கள் இருவருக்கிடையில் உறவு மலர்கிறது.>

இதெல்லாம் அதீத இட்டுக்கட்டல்கள் இல்லையா. பொன்ராசா பாத்திரமே நேரத்திற்கேற்பப் பேசி அந்தந்த நேரத்து வாழ்க்கையை ஓட்டிச் செல்வதுதான். இணையத்துப் புலிப்படை போல் வசதியான வாழ்வை அனுபவித்துக்கொண்டு இமைமூடா அறிவுச்ச்டர் ஏந்தி இன எதிரிகளை பஸ்மமாக்க சபதம் ஏற்றதா என்ன? இல்லை புக்ஃபேருக்கு புக்ஃபேர் ஈழத்தை புத்தகமாக விரிக்கத் தெரிந்த சாதுர்ய படைப்பாளியா? வாதைகளில்லா வாழ்வு கிடைத்த ஃப்ரான்சில், திபோ நதிக்கரையில் தனித்துக் காணக்கிடைத்த வெள்ளைக்காரியிடம் காலரைத் தூக்கி விட்டுக்கொள்ளும் எளிய உத்தியே ‘கப்டன்’ நெஞ்சைச் சுட்டி செய்துகொள்ளும் சுய அறிமுகம். 

<அந்த அங்கீகாரத்திற்கான பரிசாகவே கப்டன் தான் பொக்கிஷமாக பாதுகாத்த நீலக்கல் தோடுகளை அன்னியசிற்குக் கொடுக்கிறான் என்று மேலும் வாசிக்கலாம்.>

இதற்குள்ளே இவ்வளவு அறிவாத்தமெல்லாம் வைத்து எழுதப்பட்டிருந்தால், ஆன்மாவின் மூளையை உலுக்கி அவஸ்தைப்படுத்தும் இன்னுமொரு ஜெயமோகன் கதையாக இது ஆகிவிட்டிருக்கும். 

அது கிடக்கட்டும் அது என்ன நீலக்கல் பொக்கிஷம்? இது ஷோபாவின் கதையில் எங்கே இருக்கிறது? கதையில் நீலக்கல் வரும் இடங்கள்.

<பொன்ராசாவின் வலிய கை ஞானம்மாவை அறைந்தபோது ஞானம்மாவின் முகம் முழுவதும் சோறும் குழம்புமானது. “காதுத் தோடுகளைக் கழற்றிக்கொடு” என்று பொன்ராசா கைகளை நீட்டினார். ஞானம்மா மறுபேச்சில்லாமல் நீலக் கற்கள் பதித்த அந்தத் தோடுகளைக் கழற்றிக்கொடுத்தார்.>

<இந்தியாவில் தரையிறங்கியதும் யாராவது நீலக் கற்கள் பதித்த தோடுகளைப் பறித்துவிடக் கூடும் என நினைத்து எச்சரிக்கையாக அவற்றை எடுத்து உள்புறமாக ஜட்டிக்குள் வைத்துச் சிறிய முடிச்சிட்டார்.>

<பொன்ராசாவின் ஜட்டிக்குள்ளிருந்த நீலக் கற்கள் பதித்த தோடுகள் இப்போது உபதளபதியின் மேசை இழுப்பறைக்குள்ளிருந்தன.>

<அவரது கையில் உபதளபதியால் ஒரு சிறிய பொட்டலம் கொடுக்கப்பட்டது. அந்தப் பொட்டலத்தில் நீலக் கற்கள் பதித்த இரண்டு தோடுகளிருந்தன. தளபதி சிங்களத்தில் பொன்ராசாவிடம் சொன்னான்:”மரணம் என்றால் என்னவென்று இப்போது பொன்ராசாவுக்குத் தெரியும்”.

பொன்ராசா நீலக் கற்கள் பதித்த தோடுகளைச் சட்டைப் பைக்குள் போட்டுக்கொண்டார்>

<பொன்ராசாவிடம் குறுக்கு விசாரணைகள் ஏதும் நடத்தப்படவில்லை. அவரிடமிருந்த நீலக் கற்கள் பதித்த தோடுகளைக் கைது செய்தவுடனேயே புலிகள் எடுத்துக்கொண்டார்கள். >

<திருமணப் பரிசாக ஞானம்மாவுக்கு நீலக் கற்கள் பதித்த தோடுகளைப் பாதிரியார் வழங்கினார்.> 

<கோட்டையை உடைக்கும் வேலைகள் அனைத்தும் முடிந்த மாலைப்பொழுதில் பொன்ராசா புலிகளால் விடுவிக்கப்பட்டார். “கப்டன் இனியாவது தமிழீழத்துக்கு விசுவாசமாகயிருங்கள்” என்றொரு அறிவுரையும் அவருக்கு வழங்கப்பட்டது. தன்னுடைய நீலக் கற்கள் பதித்த தோடுகளை அவர்கள் திருப்பித் தருவார்கள் எனப் பொன்ராசா எதிர்பார்த்தார். அது திரும்பி வருவதாகத் தெரியவில்லை. விடுதலை என்ற செய்தியைக் கேட்டவுடனேயே பொன்ராசா பழைய பொன்ராசாவாகியிருந்தார். அவர் தனக்கு அறிவுரை சொன்னவனிடம் போய் மிதப்பான குரலில் “என்னுடைய நீலக் கற்கள் பதித்த தோடுகள் இரண்டு உங்களிடமுள்ளன, அவற்றைப் போராட்டத்திற்கான எனது பங்களிப்பாக வைத்துக்கொள்ளுங்கள்” எனச் சொல்லிவிட்டு அங்கிருந்து புறப்பட்டார்.>

<ஞானம்மாவின் காதைப் பொத்தி ஓங்கி அறைந்தார். அந்த அடியில் ஞானம்மாவின் காதிலிருந்த நீலக் கற்கள் பதித்த தோடு பறந்துபோய் தரையில் விழுந்து விளக்கொளியில் மினுங்கிக்கொண்டிருந்தது. அதைக் குனிந்து எடுத்த பொன்ராசா “இது இங்கே எப்படி வந்தது?” எனக் கேட்டார். “நான்கு மாதங்களிற்கு முன்பு இயக்கப் பொடியன்கள் கொண்டுவந்து தந்தார்கள்” என்றார் ஞானம்மா.>

<பிள்ளைகள் போட்டி போட்டுக்கொண்டு அம்மாவுக்கு நகைகளும் உடைகளும் வாங்கிப் பூட்டி அழகு பார்த்தார்கள். வரப்பிரகாசம் பாதிரியார் பரிசளித்த நீலக் கற்கள் பதித்த அந்தத் தோடுகள் இப்போது தேடுவரற்று ஞானம்மாவின் பெட்டிக்குள் கிடந்தன.>

<அடுத்த வேனிற்காலத்தில் திபோ ஆற்றில் வெண்ணிறமான சிறிய படகில் தனியாகத் துடுப்பு வலித்துச் சென்றுகொண்டிருந்த அந்தப் பெண்மணியின் முகத்தில் வெயில் பட்டபோது அவளது காதுகளிலிருந்த நீலக் கற்கள் பதித்த தோடுகள் பளீரென மின்னின.>

நீலக்கல் தோடுகள் பொன்ராசாவுக்கு பொக்கிஷமாக இருந்திருந்தால் <இப்போது தேடுவரற்று ஞானம்மாவின் பெட்டிக்குள் .> கிடக்குமா?

நீலக் கற்கள் பதித்த தோடுகள் வாழ்வின் எவ்வளவு ஏற்ற இறக்கங்களைப் பார்க்கின்றனவோ அவ்வளவு யதார்த்தமாக பொன்ராசாவின் வாழ்வும் சொல்லப்படுவதாலேயே இது கிளாசிக் என்று எனக்கு முதல் வாசிப்பிலேயே பட்டது போலும். இப்போது அது இன்னும் உறுதிப்படுகிறது.

<கப்டனின் மரணத்தில் அவன் தன்னை புலிகளோடு ரகசியமாக அடையாளம் கண்டதும் அழிகிறது,>

இது கதையின் தொனியில் கூட புலிகளுடன் அடையாளம் காணுவது இருப்பதாக எனக்குப் படவில்லை. அப்படி இருந்திருப்பதாக புலி ஆதரவாளகளுக்குத் தோன்றியிருந்தால் ஏன் இந்த மொத்து மொத்துகிறார்கள். புலிகளை ஆதரித்து இந்திய மண்ணுக்கு வெளியில் இருந்து குரல்கொடுப்பது அதுவும் இணையத்தில் குரல்கொடுப்பதென்பது, ஹல்திராம் ராசகுல்லா சாப்பிடுவதுபோல் எவ்வளவு எளிதான காரியம். அதுவும் புக்ஃபேர் நெருங்கும் சமயத்தில் ஈழப்போராட்டத் தியாகியாய் ஆர்வலராய் உயிர்மூச்சையும் அர்ப்பணிக்கத் தயாராய் இருப்பது போன்ற பாவனையைக் காட்டுவது ஆதாயமானதும் கூட. புலி அரசியலை விமர்சிப்பதால் பாதக விளைவுகளே உண்டு.

ஒருவேளை எம்டிஎம் மேல் தளத்தில் நின்று எளிய கதையைக் கடினமொழியில் கஷ்டப்பட்டுக் கட்டுடைக்கிறார் போலும் எனக்கோ மேல்மாடி காலிஎன்பதால் கதையின் தொடக்க வரியிலேயே பகடியாகத்தான் ’கப்டன்’ பயன்படுத்தப்படுகிறது. என்றும் அன்னியஸின் அறிமுகம் இன்னொரு சாட்சியாகவும் தோன்றுகிறது போலும்.

<படகு ஓர் உலாஞ்சு உலாஞ்சிய போது அந்தப் பெண்மணி மார்பில் சிலுவைக் குறியிட்டுக் கூக்குரலிட்டாள். பொன்ராசா அவளை அமைதியாக இருக்குமாறு சைகை செய்துவிட்டு, சுட்டுவிரலால் தனது மார்பை இரண்டுதரம் தொட்டுக்காட்டி “கப்டன்” என்றார். அந்தப் பெண்மணி கண்கள் விரியப் புன்னகைத்தார். அந்தப் பெண்மணியின் பெயர் அன்னியஸ்.>

இது சாதாரணமான, தனியாகப் பார்க்க நேர்ந்த தன் வயதொத்த பெண்ணை வசீகரிக்க வீசும் வலையன்றி வேறென்ன? ஐஞ்சறிவுள்ள எந்தக் குஞ்சுக்கும் இது புரியக்கூடிய விஷயம்தானே. எல்லாக் குஞ்சுகளும் கிடைக்கும் முதல் தருணத்தில் கையாளும் அரதப்பழைய உத்திதானே. முதியோர் காதல் என்பதுதானே இதிலிருக்கும் வித்தியாசம்?ஆனால் இருவருக்குமான நெருக்கத்தை கிடைத்தது சீன் மேட்டர் என்று காமமாய் விரிக்க முற்படாமல் அநாயாசமாக எழுதிச்சென்று அவர் இறப்பை இப்படி முடிப்பதுதான் அற்புதம்.

<அடுத்த குளிர்காலத்தின் ஒரு மாலைநேரத்தில் அன்னியஸின் வீட்டுப் படுக்கையறையிலிருந்த பதினைந்தாம் லூயி காலத்தைச் சேர்ந்த அழகிய விசாலமான கட்டிலில் விரிக்கப்பட்டிருந்த வெண்மையான படுக்கை விரிப்பில் தனது நீண்ட இடதுகையால் அன்னியர்ஸை அணைத்தவாறே தூங்கிக்கொண்டிருந்த பொன்ராசாவின் கை தளர்ந்துபோனபோது பொன்ராசா இறந்துபோயிருந்தார்.>

<பொன்ராசா அன்னியஸை ‘ லேடி’ என்றும் அன்னியஸ் பொன்ராசாவை ‘ கப்டன்’ என்றும் அழைத்துக்கொண்டார்கள்.> 

<அன்னியஸுக்கு நூறு ஆங்கிலச் சொற்களும் பொன்ராசாவுக்கு ஐம்பது ஆங்கிலச் சொற்களும் தெரிந்திருந்தன.>

இத்துனை மொழிவளத்தை வைத்துக்கொண்டு பொன்ராசா புலிக்கதையெல்லாம் சொல்லி அது அன்னியஸ்ஸுக்கும் புரிந்து

<அவன் ரகசிய அடையாளம் அறிந்த அன்னியஸ் அதை அவனுக்கான கல்லறைக் கல்லில் எழுதி வர>

என்கிற எம்டிஎம்மின் இண்டர்பிரடேஷன் எல்லாம் சிறந்த கேலிச்சித்திரத்தைவிட சிரிப்பூட்டக்கூடியவை அல்லவா? அவர் ஆண் நன்பர் என்பதும் இவர் பெண் சிநேகிதி என்பதையும் தாண்டிய எந்த அடையாளமும் இருவருக்குள்ளும் கதையில் இருப்பதான தடயம் எனக்குத் தட்டுப்படவில்லை. இதெல்லாம் நம் அடையாளத்தைக் காட்டிக்கொள்ள நாமாக எழுதிக்கொள்வது.

இந்தப் படிப்பின் கூத்து ஜெயமோகனின் அறம் சீரீஸ் வெளியான போது இரண்டு மாதங்கள் பெருங்கூத்தாய் இணையத்து பஸ்களில் அரங்கேறி அல்லோல கல்லோலப் பட்டது. எண்ணெய்க் குளியலுக்குக் கோவண்ம் போதாதா? வாசித்த கதைக்கு வியாக்கியானம் கொடுக்க கோட்டு சூட்டுடன் தயாராகி தாரை தப்பட்டை அடித்தபடி இது இப்படி ஏன் இருக்கக்கூடாது அதை அப்படி ஏன் புரிந்துகொள்ளக் கூடாது என்று  இணைய ’அறிவாளிகள்’ அணிவகுத்து ஆடியகோலம் இன்னமும் கண்ணிலேயே இருக்கிறது.

அதற்கு முன்பாக மிஷ்கின்னின் நந்தலாலா. படம் வெளியானபோது, நீ நடந்தால் குறியீடு நீ சிரித்தால் குறியீடு என்று இணையமே குலவையிட்டது. அவரும் பாவம் அமானுஷ்ய பார்வை உடையவராய்க் காட்டிக்கொள்ள  கண்ணாடியைக் கழட்டினால் தீர்க்க தரிசனத்திகு ஹானியுண்டாகிவிடும்  என்கிற பதற்றம் காரணமாய் மெட்ராஸ் ஐ வந்தவர்போல் தூங்கும்போதும் கருப்புக் கண்ணாடி அணிந்தபடியே அவஸ்தை பட்டு கலையிலக்கிய குச்சுக்குள் தடுமாறிக்கொண்டிருக்கிறார்.

புரூஸ் லீ படம் பார்த்துவிட்டு விடைத்துக்கொண்டு வெளியில் வருபவர்களைப்போல, புத்தக வாசனை பட்டதும் மூளை விறைத்துக்கொண்டு விடுகிறது. சாதாரணமாய் ஒருவன் உச்சா போவதைக்கூட ஓராயிரம் காரண காரிய குறியீட்டுப் பிரச்சனைகளாக அலசிப் பார்க்கச்செய்துவிடுகிறது.

<அந்த அடையாளத்தினை அடுத்த தலைமுறையினர் நிராகரிக்கின்றனர்.>

எந்த அடையாளம் ’ரகசியமான’ புலி அடையாளமா? சும்மா கட்டுடைக்கிறேன் பேர்வழி என்று கிச்ச்சுகிச்சுவெல்லாம் மூட்டக்கூடாது.

<சலவைக்கல்லை வாங்கித் தரையில் வீசியடித்தான். ” இதைக் கல்லறையில் பதித்தால் பார்க்கும் சனங்கள் எங்களைக் கரையார் என்றவல்லா நினைப்பார்கள்” என்று அவன் கத்தினான். இரண்டு துண்டாக உடைந்துகிடந்த அந்தச் சலவைக்கல்லை கால்களால் எத்திவிட்டான்.>

இங்கே தெரிவது புலி அடையாளமா? அடக்கொடுமையே இது ஈழ மண்ணில் இன்றும் நிலவும் சாதி வெறிக்கு எதிரான விமர்சனமாகவல்லவா இந்த மரமண்டை புரிந்துகொண்டுவிட்டது?

அம்மாவுக்கு சக்களத்தியாய் இருந்தது மகனுக்குப் பிரச்சனையில்லையாம், அவள் கொண்டுவந்த நினைவுக்கல்தான் பிரச்சனையாம். ஃபிரான்ஸில் போய் உட்கார்ந்து சொகுசாய் வாழ்ந்தாலும் வருங்கால சந்ததியையும் சாதி விடவில்லை என்பதை இதைவிடப் பகடியாய் எழுத ஈழத்தில் எத்துனை பேர் இருக்கிறார்களாம்?

இப்படி, இருப்பதை விடுத்து பறப்பதைப் பிடித்து உயர உயர பறப்பதாய்க் காட்டிக்கொள்ள தொட்டதையெல்லாம் குறியீடாகப் பார்ப்பது கோமாளித்தன்மான அறிவார்த்தப் பயிற்சியன்றி வேறென்ன?

அந்நிய நாட்டுப் பெண்மணியான அவளுக்கு ஆரம்ப அறிமுகத்தில் ’கப்டன்’ என்று தன்னை அறிவித்துக்கொள்வது அவளிடம் மதிப்பை உண்டாக்க விரிக்கப்படும் ஒரு படம் மட்டுமே. ஆனால் அவர்களுக்கிடையில் முளைவிடும் அன்பு விகசித்தபின் ஏதோ பெரிய கடற்படைக் காப்டன் போலவே அவரைப் பார்க்கச்செய்கிறது அன்னியசிடம் இயல்பாய் மலரும் எழுதப்படாத காதல்.

<கடைசியில் கப்டனின் உள்ளார்ந்த ஆசை நீலக்கல் தோடுகளாக ஒரு ஐரோப்பிய (இத்தாலிய?) விதவையின் காதுகளில் பிரகாசிக்கிறது.>

அன்னியஸ் ஃப்ரெஞ்சுக்காரிதானே. <இத்தாலிய?)> வந்தது எங்கிருந்து?

<ஒரு மதியநேரம் திபோ ஆற்றங்கரையில் பொன்ராசா தனித்திருந்தபோது அந்த வெண்ணிறப் படகைப் பார்த்தார். துடுப்புகளை வலித்தவாறே ஐம்பது வயதுகள் மதிக்கத்தக்க ஒரு பிரஞ்சுப் பெண்மணி கரையை ஒட்டியே அந்தச் சிறிய படகில் வந்துகொண்டிருந்தார்.>

பிரஞ்சுப் பெண்மணி என்று ஐயம்திரிபற கதையிலேயே எழுதப்பட்டு உள்ளதே.

அல்லலே வாழக்கையாய் அனுபவித்த பொன்ராசா அகதியான பின் வாழ்க்கையின் இறுதிக்காலத்தில்தான் வசதியும் மழ்வையும் காண்கிறார்.

<அந்தச் சூழல் பொன்ராசாவுக்கு மிகவும் பிடித்துப்போனது. அடுத்த கோடை காலத்திற்குள் பொன்ராசா முழுவதுமாக மாறிவிட்டார். சிங்கள நாட்டில் இரண்டு காடையர்களைப் பொம்மைகள் போல தூக்கியெறிந்த பொன்ராசாவாக அவர் இருந்தார். காலையில் பத்துமணிக்கு ஒரு பெக் விஸ்கி அருந்திவிட்டு கிறிஸ்டியின் வீட்டிலிருந்து பொஸ்கோ வீட்டிற்கு நடந்துபோய் அங்கே மருமகளை நாட்டாமை செய்வார். அங்கே இன்னொரு பெக் அருந்திவிட்டு மதியச் சாப்பாட்டிற்கு கிறிஸ்டியின் விட்டுக்கு வந்து இந்த மருமகளை நாட்டைமை செய்வார்.>

நல்ல வாழ்வு கிடைத்த அடுத்த கணமே பழைய காயங்கள் ஆறத் தொடங்குவதும். ஒட்டிய காயத்தின் மேற்புறம் நாள்பட இறுகிப் பொருக்காகி உலர்வதும் ஏதோ ஒரு கணத்தில் அதுவும் கழன்று விழ வடுவையும் மறக்கப்பார்ப்பதும் கிடைத்த நல் வாழ்வை சுகிக்கப் பார்ப்பதும்தான் மனித இயல்பு. இதை எவ்வளவு அருமையாய் மேற்கண்ட வரிகளில் வெளிப்படுகிறது பாருங்கள். ஷோபா சக்தியின் கலம் காற்றடிக்கும் திசையை நோக்கி அலைபாயவில்லை,  கலையின் பூரணத்துவத்தை நோக்கியே போய்க்கொண்டிருக்கிறது என்பதற்கு இதைவிட வேறென்ன சாட்சி வேண்டும்?

ஆனால் எம்டிஎம் சொல்கிறார்

<அதாவது இவ்வாறான தான் வெளிப்படையாக முன் வைக்கும் அரசியலுக்கு எதிரான வாசிப்பை சாத்தியப்படுத்துவதால்தான் ‘கப்டன்’ கதை இலக்கிய பிரதியாக மாறுகிறது.>

எவ்வாறான? வெளிப்படையாக ஷோபா சக்தி முன்வைக்கும் புலி எதிர்ப்பு அரசியலுக்கு எதிராய் கதையில் புலி கொடுத்த மெடலான ‘கப்டன்’ என்று தன்னை அழைத்துக்கொள்வதால் பொன்ராசா புலி ஆதரவை உள்ளூர வைத்து அதை அன்னியஸின் உள்ளே பாய்ச்சி

<இலக்கியப்பிரதிகளின் மொழிச்செயல்பாடே இவ்வாறாக யதார்த்தவாதத்தின் மொழிக்கொள்கைக்கு எதிராக இருப்பதால்>

இலக்கியமாகிவிடுகிறதா?

<உண்மைக்கதையென்ற சான்றிதழ் இலக்கியப்பிரதியினை அனுமானிக்க தேவையில்லை.>

இன்னாவோ சொல்றீங்க பிரிஞ்சாப்பிலையும்க்குது பிரியாத மேரியும்க்குது..

<ஆனால் ஆர்டிலரி பற்றி சசீவனும் இதர நண்பர்களும் குறிப்பிட்டு எழுதியது போர்க்காலத்தில் வாழ்ந்த தமிழ் மக்களுக்கு முக்கியமான பயம், பீதி ஆகியவற்றின் குறியீடு. இரண்டே இரண்டு பீரங்கிகளை புலிகள் கைப்பற்றியது அதனால் மிகப்பெரிய நம்பிக்கையின் குறியீடாக எதிர் உருவம் பெற்றிருக்கிறது.>

ஆமாம். யார் இல்லை என்றது.

<புலிகளும் சிங்கள ராணுவத்தினரும் சம்பலத்தினர் அல்லர் என்பதும் புலிகளின் யுத்தம் அவர்களின் புத்திசாலித்தனத்தினையும் சமூகக்கட்டுக்கோப்பினையும் சார்ந்தே இருந்திருக்கிரது என்பதினையும் ஆர்டிலரி பற்றி சசீவனும் நண்பர்களும் எடுத்துரைத்ததிலிருந்து நான் அறிந்துகொண்டேன்.>

இதெல்லாம் 22 ஏப்ரல் 1982ல் பிறந்த ஷசீவன் வந்து சொல்லித்தான் எம்டிஎம்முக்குத் தெரியவந்தது என்பது வியப்பளிக்கிறது. 1983 ஜூலை கலவரத்திலிருந்தே தமிழ் சிறுபத்திரிகைச் சூழலில் புலிகளின் வளர்ச்சியைப் பிரமிப்பும் சாகச உணர்வும் அவ்வியக்கத்தின் கட்டுக்கோப்பு பற்றிய பாராட்டுணர்வும் அறியக்கிடைத்த விஷயங்கள்தானே.புலிகளுக்கு எம்ஜிஆர் வெளிப்படையாய் அறிவித்துக்கொடுத்த 4 கோடிகளை ஆர்பிஐயிலிருந்து பணமாய் எடுக்கச்சென்ற கார்களின் படங்கள் கூடப் பத்திரிகையில் பார்த்திருக்கிறோமே.87ராஜீவ் ஜெயவர்தனே ஒப்பந்தத்திற்கு முன்பாக இலங்கைக்குப் போர்விமானங்களை அனுப்பி மக்களைக்காக்க வேண்டும் என்று சனாதன ஹிண்டுவே எழுதிற்றே.ஆயுத சரணடைவு சமராகி, இந்தியப் படைகளால் கொடுக்கப்பட்ட 72 மணிநேர கெடு மாதக்கணக்கில் இழுத்துச் சென்றதைப் பார்த்து பிரமித்த இளைஞர்களில்லையா நாம்? யாழ் சர்வகலாசாலையின் மேல் பாராசூட்டில் இறங்கிய இந்திய ராணுவம் குருவிகள்போல் சுடப்பட்டதைப் பார்த்து, எவனுக்கோ வேலைக்காரனாகி நம் படைகளை இப்படி பலிகொடுப்பது நியாயமா என்றுப் பதறியவர்கள் அல்லா? மெட்ராஸ் ஐ வந்து மருந்திட்டுக் கருப்புக் கண்ணாடி அணிந்து பெரிய கூடத்தில் வரிசையாய்ப் படுத்திருந்த ஏகப்பட்ட மாற்று இயக்க சமவயது பொடியன்களை நெஞ்சில் ஈரமின்றி சரமாரியாய் சுட்டுக் கொன்று இந்தியக் கைக்கூலிகள் என்பதன் பெயரால் மூன்றே நாளில் அந்த இயக்கத்தையே இருந்த சுவடில்லாமல் அழித்த புலி இயக்கத்தின் கட்டுக்கோப்பைக் கண்டு ஈழப்போர் எங்கே போகிறது என்று கதிகலங்கியவர்கள் இல்லையா? இதையெல்லாம் ஷசீவனின் நண்பர்களிடம்தான் கேட்டு அறிய வேண்டுமா என்ன?

<போர்க்கால சமூக அனுபவத்திற்கும் வரலாற்றிற்கும் மையமான ஒரு விடயத்தில் ஷோபாசக்தியின் கதைப்பிரதி பிழையுள்ளதாக இருப்பதால் கதை வலுவிழந்து வெற்று அரசியல் பிரதியாகிறது என்ற வாதம் நியாயம்தான் என்று எனக்குப்படுகிறது.>

படட்டும் படட்டும் இன்னும் நிறைய படவேண்டி இருக்கிறது. மேற்குறிப்பிட்ட எம்டிஎம்மின் ஃபேஸ்புக் பின்னூட்டம் எப்படித் தொடங்குகிறது?

<ஏனெனில் சசீவன் அந்தக் கதையில் வேறு பெரிய வரலாற்று ஊழல்கள் ஏதுமில்லையென்றே கூறிவிட்டடார்.>

அப்பா, ‘ஆட்லரி’யை விட்டால் இது அபாரமான கதை என்று ஈழ இலக்கிய அத்தாரிட்டி சொல்லிவிட்டார் அதோடு எடிஎம் உடன்படுகிறார் என்பதில் மெத்த சந்தோஷம்.

<‘கப்டன்’ கதை ராணுவ சிறை புலி சிறை ஆகியவைகளிடையே ஒரு ஒப்புமையை வைப்பதன் மூலம் ஆசிரியரின் புலி எதிர்ப்பு அரசியலை வெளிப்ப்டையாக முன் வைக்கிறது.>

என்றும் எழுதிவிட்டு அதற்கு அடுத்த வரியிலேயே இப்படி எழுதினால் இதற்கு என்னவென்று சுவாமி பொருள் கொள்வது?

<இதை கட்டவிழ்த்து கதையினை அதன் ஆசிரிய குரல் முன்வைக்கும் அரசியலுக்கு எதிராக மீட்டெடுக்கலாம்.>

இப்படி முடிவெடுத்துக் கட்டவிழ்க்கத் தொடங்கியதில் கிடைத்ததுதான்

<ரானுவ சிறையிலிருக்கும்போது ‘கப்டன்’ அவர்களின் கேளிக்கை சமயத்தில் புலிகள் தாக்கினால் எளிதாக அவர்கலை வெற்றி கொள்ளலாம் என்று நினைக்கிறான். சிங்கள ராணுவத்திற்கு எதிரான ரகசிய வேட்கையாகக் கொள்ளலாம்.>

இந்தத் ஆழ்மன அலசலில் எம்டிஎம் வந்து சேர்ந்த இடம் என்ன?

<இவ்வாறான தான் வெளிப்படையாக முன் வைக்கும் அரசியலுக்கு எதிரான வாசிப்பை சாத்தியப்படுத்துவதால்தான் ‘கப்டன்’ கதை இலக்கிய பிரதியாக மாறுகிறது. >

இதுதான் இறுதி நிறுத்தமா? லேது லேது இங்க உந்தி டிகன்ஸக்‌ஷன் டிராவலு.

<போர்க்கால சமூக அனுபவத்திற்கும் வரலாற்றிற்கும் மையமான ஒரு விடயத்தில் ஷோபாசக்தியின் கதைப்பிரதி பிழையுள்ளதாக இருப்பதால் கதை வலுவிழந்து வெற்று அரசியல் பிரதியாகிறது என்ற வாதம் நியாயம்தான் என்று எனக்குப்படுகிறது.>

தாண்ட்றா ராமா தாண்ட்றா என்று ஈழக் குச்சியை நீட்டினால் இந்தா பார் எட்டுக் குட்டிக்கரணம் போட்டபடியே தாண்டுகிறேன் என்றா தாண்டுவது.

இதற்குக் கூட்டத்தில் நின்றபடி ராஜன்குறை கிருஷ்ணன் வேறு என்னமாய்த் தாண்ட்ரார் எம்டிஎம் என்று விசிலடிக்கிறார்.

இரண்டு நண்பர்களை எதிரிகளாக்கிக்கொண்டதில் இப்படியாக இந்தப் ப்றவியின் ஆயுளில் ஒரு நாள் இனிதே கழிந்தது.