15 December 2011

சென்னை உலக திரைப்படவிழா 14 டிசம்பர் - சைக்கிள் சிறுவன்

இன்று மதியமும் மாலையும் சிறுவர்களைப் பற்றிய இரண்டு படங்கள் பார்க்கக் கிடைத்தன. இரண்டுமே தந்தையால் புறக்கணிக்கப்பட்ட சிறுவர்களைப்பற்றிய படங்கள். ஒன்று வடிவ ரீதியில் கலைத்துப்போட்டு விளையாடித் தீர்த்த படம் மற்றது. விசேஷமாக ஒன்றுமில்லை சும்மா பாருங்கள் என்பதுபோல் விளையாட்டாய் சொல்லிச்செல்லும் படம். இரண்டு தந்தைகளுமே வாழ்வில் வெற்றிகாண முடியாது தவிப்பவர்கள். தவிப்பின் ஆதங்கம் முந்தைய தந்தையிடம் வன்முறைச் செயல்களாகவும் பின்னதில் தப்பியோடுதலாகவும் வெளிப்படுகின்றன. 

கதை சொல்லும் முறையில் எது எப்போது நடந்தது எது தற்போது நடக்கிறது என்பதை முன்னும்பின்னுமாக ஊடாடி சொல்கிறது. இரண்டு மூன்று முறை எழுந்துபோய்விடவேண்டும் என்று தோன்றியும் போகமுடியாமல் உட்காரவைத்தது எது என்றுதான் தெரியவில்லை. இத்துனைக்கும் அயர்வில் இடையில் கொஞ்சம் தூங்கியும்விட்டேன். 

நாஜி ஜெர்மனியின் நிகழ்வுகளிலேயே இன்னமும் வாழ்ந்துகொண்டு இருக்கும் உபரிப் பாத்திரமான கிழவர்கூட நிறைய விஷயங்களைச் சொல்லக்கூடும்.


The Dispensables / Germany / Andreas Arnstedt / 2009 / 95 Min

The kid with a Bike /  Dr: Jean-Pierre Dardenne / Belgium France Italy / 2011 / 87 Min

ஏன் எப்படி எதற்கு என்று எதுவும் கேட்காதீர்கள் என்ன நடந்ததோ அதை சொல்லிக்கொண்டுபோகிறேன் மற்றபடி எனக்கு எதுவும் தெரியாது என்று இயக்குநர் சொல்வதைப்போல,தந்தையைத் தேடத் தொடங்கும் ஒரு சிறுவனின் பயணம் எந்தவிதக் காலட்சேப பண்டிதப் பிரசங்கங்களுமின்றி இயல்பாகக் கவிதையாய்ச் சொல்லப்பட்டிருக்கும் படம்.

புத்தியால் படிப்பால் பார்ப்பவனையும் படிப்பவனையும் சாத்துவதை விட இப்படியான வெளிப்பாடே கலைஞனுக்குக் கஷ்டமான சவால் என்று தோன்றுகிறது.

இன்றைய தினம் தொடங்கியதும் முடிந்ததும் சிறந்த படங்களாய் அமைந்ததை அதிருஷ்டம் என்றே சொல்ல வேண்டும். 

தவறாமல் பார்க்கவேண்டிய படம். தரவிறக்க சுட்டி கொடுப்பவர்களுக்கு முன்கூட்டியே நன்றி சொல்லிக்கொள்கிறேன். தவறாமல் பார்க்கவேண்டிய படம்.